பொலிட்டிகல் பீட்



மேனகா காந்தி மத்திய அமைச்சராக இருந்தபோதும், பிறகு வெறும் எம்.பி.யாக இருந்தபோதும், இப்போது திரும்பவும் கேபினட் அமைச்சராக ஆன பிறகும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறார். டெல்லியின் அசோகா ரோட்டில் இருக்கும் அந்த வீட்டில் நிறைய மரங்கள் வளர்த்து, ஒரு ‘நகர்ப்புற காடு’ போல மாற்றியிருக்கிறார்.

எங்கு சென்றாலும், மிக அரிதான மரங்கள் பற்றிக் கேள்விப்பட்டால் அந்த மரக்கன்றை அக்கறையாக வாங்கி வந்து நட்டு வளர்க்கிறார். டெல்லியில் வேறு எங்கும் இல்லாத அபூர்வ செடிகள், மரங்களை அவர் வீட்டுத் தோட்டத்தில் பார்க்க முடியும். விலங்குகளை மட்டும் இல்லை... மேனகா நேசிப்பது மரங்களையும்தான்!

இன்னமும் வீடு ஒதுக்கப்படாததால், தன்னைத் தேடி வரும் முக்கிய பிரமுகர்களை அலுவலகத்தில்தான் சந்திக்கிறார் மத்திய அமைச்சர் உமா பாரதி. இதனால் விடுமுறை நாட்களில்கூட அவர் அலுவலகம் வர நேர்கிறது. சமீபத்தில் உமாவை சந்திக்க நாகாலாந்து முதல்வர் ஜீலியாங் டெல்லி வந்தார். ஆனால் நாடாளுமன்ற வேலைகள் இருந்ததால் உமாவால் மறுநாள்தான் அவரை சந்திக்க முடிந்தது. ‘‘ஸாரி! எனக்கு வீடு இல்லை. அதனால்தான் உங்களை அங்கு கூப்பிட்டுப் பார்க்க முடியவில்லை’’ என உமா மன்னிப்பு கேட்க, ஜீலியாங் நெகிழ்ந்து விட்டார்.

காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர்கள் பலரும் எப்படியாவது கட்சிப் பதவிகளைப் பிடிப்பதற்காக முயற்சி செய்கிறார்கள். ஆனந்த் சர்மா, சல்மான் குர்ஷித், ஜெய்ராம் ரமேஷ், சசி தரூர் என இந்தப் பட்டியல் நீள்கிறது. தங்களைத் தேடி வரும் பார்வையாளர்களை சந்திப்பதற்கு அலுவலகம் இல்லாமல் இப்படி பல தலைவர்கள் தவிக்கிறார்கள். கட்சியில் முக்கிய பதவி பெறுபவர்களுக்கு, கட்சி அலுவலகத்தில் வசதியான ஒரு அறை கிடைத்துவிடும். அங்கு சந்திக்கலாம் என்பது இவர்களின் திட்டம்! 

மத்திய அரசைப் பொறுத்தவரை ‘திட்டக் கமிஷன்’ என்பது நிதி விவகாரங்களில் சர்வ அதிகாரம் பெற்ற அமைப்பு. ஒவ்வொரு மாநிலமும், தங்களுக்குத் தேவையான திட்ட நிதியை இவர்களிடம் பேரம் பேசி வாங்க வேண்டும். திட்டக் கமிஷனுக்கு பிரதமர்தான் தலைவர். ஆனால் துணைத் தலைவர்தான் எல்லா வேலைகளையும் கவனிப்பார். செல்வாக்கான பல மாநில முதல்வர்கள் இவரை வந்து சந்தித்துப் பேசி, நிதி ஒதுக்கீடு கேட்க வேண்டும்.

ஆனால், ஆட்சி மாறியதும் இதன் துணைத் தலைவராக இருந்த மாண்டேக் சிங் அலுவாலியா ராஜினாமா செய்து விட்டார். உறுப்பினர்கள் பலரும் இப்படி ராஜினாமா செய்துவிட, ‘திட்டக் கமிஷனையே பிரதமர் மோடி கலைத்துவிடப் போகிறார்’ என ஒரு வதந்தி பரவி வருகிறது. இதனால் திட்டக் கமிஷன் அலுவலகமான ‘யோஜனா பவன்’ தண்ணி இல்லாக் காடு போல தோற்றமளிக்கிறது.

வாய்ஸ்

‘‘கோழிக்கறி, மீன் என அசைவ உணவுகளை அதிகம் சாப்பிடுகிறவர்கள்தான் ஆபாச செய்கைகள், பாலியல் வன்முறை என பெண்கள்மீது அத்துமீறலில் ஈடு படுகிறார்கள்!’’

-பீகார் அமைச்சர் வினய் பிகாரி