பாண்டியராஜனை பாப்புலராக்கிய பாடல்



அப்பழுக்கற்ற வாலி சாரோட சிரிப்பு கோடி ரூபாய்க்கு சமம்...’’ - புகைப்படத்தை பார்த்த நொடியில் இயக்குனர் பாண்டியராஜன் நெகிழ்ச்சி பொங்க பேசத் தொடங்கினார்.
‘‘இயக்குனர் தூயவன் அலுவலகத்தில் நான் ஆபீஸ் பாயாக வேலை செய்தபோது, கதை இலாகாவில் சுப்ரமணியம் என்பவர் இருந்தார்.

பாக்கியராஜிடம், ‘ரொம்ப நல்ல பையன்... இவனை உங்ககிட்ட சேர்த்துக்குங்க’ என்று சிபாரிசு செய்ததே சுப்ரமணியம்தான். நான் ஹீரோவான பிறகு அவருக்கு பட வாய்ப்பை ஏற்படுத்தினேன். அவர் இயக்கிய ‘புது மாப்பிள்ளை’ என்ற அந்தப் படத்தின் பாடல் பதிவில் எடுத்த போட்டோ இது. கங்கை அமரன் பின்னால் நிற்பவரே சுப்ரமணியம்.

வாலி ரொம்ப பெரிய மனசுக்காரர். என் உயரத்தை நிறைய பேர் விமர்சனம் செய்தபோது, ‘மனைவி ரெடி’ படத்தில், ‘சான் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளைதான்யா... சின்னவன் ஆனாலும் நீ மன்னவன்தான்யா...’ என்று பாட்டெழுதி, அவர் பேனா என்னை உயர்த்திப் பிடித்தது. நீண்ட நாட்களாக அவரை சந்திக்காமல் இருந்துவிட்டு, ஒரு நாள் விழா ஒன்றுக்கு அழைப்பதற்காக அவர் வீட்டுக்குச் சென்றேன். ‘ரொம்ப நாளா உங்களைத் தேடி வரலை... அதுக்காக வருத்தப்படாதீங்க’ என்று காலில் விழுந்தபோது, ‘பரவாயில்லை பாண்டியா, நான் ரொம்ப காஸ்ட்லி. நீ பட்ஜெட் படம்தானே எடுக்குற’ என்று நாகரிகமாகச் சொன்னார்.

தன்னை காஸ்ட்லி என்று அவரே சொன்னாலும் இயல்பில் அவர் எளிமையானவர். ஒரு விழாவில், ‘வாத்தியாருக்கு பாட்டு எழுதியவர், என் வாத்தியாருக்கும் பாட்டு எழுதியவர், எனக்கும் எழுதியிருக்கார், இனி என் மகனுக்கும் எழுதுவார்’ என்று நான் பேசினேன். அதன் பிறகு பேச வந்த வாலி, ‘பாண்டியராஜனுக்கு பாட்டெழுத ஐந்து ரூபாய் கூட சம்பளம் வாங்கிக்கொள்வேன்’ என்றார். அவருடைய அசுரத்தனமான ஆளுமைக்கு ஒரு சம்பவம்...

‘ஆண்பாவம்’ படத்திற்கு மெட்டுப் போட்டு வாலிக்கு அனுப்பி வைத்தேன். சில மணி நேரங்களில் சுடச்சுட வரிகளுடன் வந்தார். படித்துப் பார்த்த எனக்கு பரம திருப்தி. ஒரு எழுத்துக்கூட மாற்றாமல் உடனே அந்தப் பாடலை பதிவு செய்தேன். அப்படி பதிவான முதல் பாடலும் கடைசி பாடலும் அதுவாகத்தான் இருக்கும். என்னை பட்டி தொட்டி எங்கும் பாப்புலராக்கிய அந்தப் பாடல் ‘காதல் கசக்குதய்யா...’ இப்ப நினைச்சாலும் இனிக்குது வாலி சார்.’’

அமலன்
படம் உதவி: ஞானம்