காதலும் பாட்டும் கதைக்குத் தொல்லை!



‘‘பறவை உருவம் பாதியும் மிருக உருவம் மீதியும் கொண்ட பண்டைக்கால விலங்கைத்தான் சரபம்னு சொல்வாங்க. கதைப்படி படத்தில் வரும் கேரக்டர்கள் இரட்டை குணம் கொண்டவர்கள். அதன் குறியீடாக வரும் இந்தத் தலைப்பு கதைக்கு செம பொருத்தம்’’ என்கிறார் ‘சரபம்’ பட இயக்குனர் அருண்மோகன். கௌதம் மேனனின் சிஷ்யர்.

‘‘இது ஒரு க்ரைம் த்ரில்லர். படத்தின் நாயகன் நவீன் சந்திரா, நாயகி சலோனி, ஆடுகளம் நரேன் ஆகிய மூவரையும் சந்திக்க வைக்கிறது ஒரு பிரச்னை. அந்த பிரச்னையில் அவர்கள் ஏன் சிக்குகிறார்கள், அதிலிருந்து எப்படி வெளி வருகிறார்கள் என்பதுதான் கதை. வழக்கமான வடிவில் இல்லாத திரைக்கதைதான் படத்தின் ஹைலைட். ஒளிப்பதிவிலும் பின்னணி இசையிலும் ஜெல் ஆகியிருக்கும் த்ரில் மூடு, படத்தின் கேரக்டர்களுடன் ரசிகர்களைப் பயணிக்க வைக்கும்!’’‘‘டூயட், ரொமான்ஸுக்கு இடம் இருக்கா?’’

‘‘ம்ஹும்! படம் பார்ப்பவர்களை அது ரூட்டு மாற்றிக் கொண்டு சென்று விடும் என்பதால் காதல், காமெடியை கொஞ்சம் அடக்கியே வாசிச்சிருக்கேன். பொதுவா இந்த மாதிரி கதையில் பாடல்கள் கூட இடையூறு என்பதால் இரண்டே பாடல்கள்தான் வச்சிருக்கோம். அதுவும் மைக்ரோ நேரத்தில் முடிந்து ஆடியன்ஸை அடுத்த அதிர்வுக்கு அழைச்சிட்டுப் போயிடும்.’’
‘‘ஆக்ஷன்?’’

‘‘ஆக்ஷன்னு சொல்ல முடியாது. ஆனா, அதுக்கு ஈடான டெம்போ இருக்கும். ஹீரோ நவீனை 15வது மாடியிலிருந்து தலைகீழாகக் கட்டி தொங்க விடும் ஒரு காட்சியை வேளச்சேரியில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் எடுத்தோம். நான்கு டேக்குகள் வரை போனது. ஹீரோயின் சலோனிக்கு இதுதான் முதல் படம். ஆனால் அநாயாசமா நடிக்கறாங்க. டெல்லியில் நிறைய ஸ்டேஜ் பிளே செய்த அனுபவசாலி!’’‘‘உங்க பின்னணி என்ன?’’

‘‘நடிகரும் இயக்குனருமான அனுமோகனின் மகன் நான்.  +2 முடிச்சிட்டு அடுத்து என்ன செய்யலாம்னு மண்டையை பிச்சிக்கிட்டிருந்தப்போ, ஏன் சினிமா பண்ணக்கூடாதுங்கற எண்ணம் எட்டிப் பார்த்தது. பி.காம் கடைசி வருஷம் எக்ஸாம் எழுதுவதற்கு முன்னாடியே கௌதம் சார்கிட்ட அசிஸ்டென்டா சேர்ந்து, இதோ இப்போ இயக்குனராகிட்டேன்.

- அமலன்