ஜோடிப் பொருத்தம் சூப்பர்!



அதர்வா ப்ரியா ஆனந்த்...

‘‘வாழ்க்கை எல்லோருக்கும் எல்லாமும் தரக் காத்திருக்கு. தேடுபவர்கள் கண்டடைவார்கள் என்பது தான் கண்ணில் தெரிகிற ஒரே உண்மை. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு கதையும் ஒரு விதை. காத்து, தண்ணி, ஒளின்னு எல்லாம் கிடைச்சு நம் கண்ணெதிரே தொட்டியில் பர்ஃபெக்டா பூக்குறது ஒரு வகை. ஆளில்லாத காட்டில் பெரிசா பூத்து அழகா சிரிக்கிறது இன்னொரு வகை. இதில் இயற்கையா முட்டி மோதி முளைச்சி வர்ற அதர்வா என்கிற பைக் ரேஸரைப் பற்றின கதை இது.

முன்னாடி குதிரைகளில் இறக்கை கட்டிப் பறந்த மாதிரி, இப்போ பைக்கில் பறக்கிறாங்க. இன்னும் சொன்னால் குதிரையோட மாடர்ன் வெர்ஷன்தான் பைக். அதான் இந்த சினிமாவிற்கு ‘இரும்பு குதிரை’னு பெயர் வச்சேன். விளையாட்டை விளையாட்டா எடுத்துக்காத பசங்களின் கோபமும், வீரமும், காதலும் பார்க்க புதுசா இருக்கும்’’ & ரசனையாகப் பேசுகிறார் டைரக்டர் யுவராஜ் போஸ். ‘ஈரம்’ அறிவழகனின் சீடர்.

‘‘டிரெய்லர், அதில் இருக்கிற ஸ்டைல், அதர்வா... எல்லாமே புதுசா இருக்கே?’’


‘‘ஊர் உலகத்துல அத்தனை பேரும் கோபப்படுறாங்க, காதலில் திளைக்கிறாங்க, கஷ்டத்தில் துடிக்கிறாங்க. கோபமோ, பாசமோ... அதைக் காட்டுறதுல தான் மனுஷனுக்கு மனுஷன் வித்தியாசம். சிலர் எங்கெல்லாம் போகிறார்களோ, அங்கெல்லாம் மகிழ்ச்சியை விதைக்கிறாங்க.

சிலர் எப்போதெல்லாம் கிளம்பிப் போறங்களோ, அப்போதெல்லாம் மகிழ்ச்சியை ஏற்படுத்துறாங்க. என் ஹீரோ அதர்வா இதில் முதல் ரகம். பைக் ரேஸிங்கை பின்னணியாகக் கொண்ட காதல் கதை. பைக் ரேஸ் சாதாரணப்பட்ட விஷயம் கிடையாது. உயிரோடு விளையாடுகிற விளையாட்டு. தறிகெட்டு வண்டி ஓட்டுறவங்களைப் பத்தின கதையில்லை இது. பைக் ரேஸை அருமையா செய்யிறவங்களுக்கு அதில் பாதுகாப்புதான் முதலிடம். அப்படி ஆர்வமாக முன்வந்தார் அதர்வா!’’

‘‘அப்படின்னா கஷ்டமாச்சே..?’’

‘‘துணிச்சலாகவும், பாதுகாப்பாவும் அதர்வா செய்ய வந்ததுதான் ஆச்சரியம். அவருடைய அக்கறையை கொஞ்சமும் குறை சொல்ல முடியாது. ‘பரதேசி’ முதற்கொண்டு அவர் தேர்ந்தெடுக்கிற வித்தியாசமான திரைப்படங்களைப் பார்த்தாலே தெரியும். சும்மா ஆட்டம் பாட்டமா தேர்ந்தெடுத்து நடிச்சு எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டு போகலாம். அதே காசுதான். ஆனால், அதர்வா அப்படியில்லை. இத்தாலிக்கு போய் 18 நாட்கள் தங்கியிருந்து பைக் ரேஸ் பத்தி கோர்ஸ் பண்ணினார்.

ஹெல்மெட் போட்டாலும் உடல்மொழியில் அபாரமா வெளிப்பட்டார். நீங்க ரேஸ் பைக்கை சாதாரணமாக கையாள முடியாது. ஓடுகிற குதிரையில் ஏறுகிற மாதிரி, மகா ரிஸ்க். நானே, ‘வேண்டாம்... டூப் போட்டுக்கலாம்’னு சொன்னேன். அதை ஏத்துக்கவே இல்லை அதர்வா. இத்தாலிக்குப் போய் கத்துக்கிற விஷயத்திற்கு தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ரொம்ப உதவியாக இருந்தார். கூடவே இருந்து சினிமாவில் அக்கறை எடுத்து, ‘உங்களால் செய்ய முடியும்’ என்கிற புரொடியூசர்கள் இன்றைக்கு அபூர் வம். இவர் அந்த வகை!’’

‘‘ப்ரியா ஆனந்த், லட்சுமி ராய்னு இரண்டு க்யூட் பெண்களோடு அதர்வாவை இணைச்சு விட்டிருக்கீங்க...’’ ‘‘ப்ரியா ஆனந்த் அருமையான பொண்ணு, அதர்வாவும், ப்ரியாவும் இதுவரையில் திரையில் ஒண்ணா வராத ஜோடி. ‘எப்படிய்யா மிஸ் பண்ணிட்டாங்க’ன்னு போட்டோ செஷனில் பார்த்த பொருத்தத்தில் தெரிந்தது. நடிப்பிலும் ரொம்ப யதார்த்தமான வகையில் இருக்கிறார் ப்ரியா. படத்தில் பாண்டிச்சேரியில் பிறந்து பிரான் ஸுக்கு போகப் போகிற பெண்ணாக வருகிறார் அவர்.

 ‘காதலுக்கு தினம் ஏது... தினமும்’னு ஒரு கவிதை உண்டு. அப்படி, காதலிலும் பின்றாங்க இந்த ஜோடி. லட்சுமி ராய் மெல்லிய திரைக்கதையில், உங்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாத கேரக்டர். ‘ஏழாம் அறிவில்’ கம்பீரமாய் திகைக்க வைத்த டாங்லிதான் அதர்வாவிற்கு எதிரான ஆள். இந்த இரண்டு பேர் வருகிற இடமெல்லாம் உற்சாகம் தெறிக்கும். ஊரிலிருந்து புறப்பட்டு வந்து நடிச்சார். இத்தாலிக்கும் வந்து நடிச்சுக் கொடுத்தார்.’’

‘‘பாடல்கள் எப்படியிருக்கும்?’’

‘‘என்னை மாதிரி முதல்பட இயக்குநர்களுக்கு ‘இரும்பு குதிரை’ மாதிரியான பெரிய படம்... பெரிய கனவு. இத்தாலியில் படமாகிய பாடல்கள் சேர்ந்து ஐந்து பாடல்கள். கதைத் தன்மையை உணர்ந்து ஃபீலிங்கில் கரை தாண்டியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்த மாதிரியான பைக் ரேஸிங் படத்திற்கு ஒளிப்பதிவு ஈஸியில்லை. ஆர்.பி.குருதேவ், கோபி அமர்நாத் இரண்டு பேரும் உழைச்ச உழைப்பு கண்ணில் நிற்கும். தமிழ் மக்களுக்கு இப்போ பரந்த சினிமா அறிவு இருக்கு. உலகின் எங்கோ ஒரு மூலையில், கேள்விப்பட்டிராத ஒரு மொழியில் அபூர்வமா ஒரு சினிமா வந்தாலும், அடுத்த நாளே அதுபற்றி வந்து விடுகிற தகவல் யுகத்துல புதுசா இருந்தா மட்டும்தான் பார்ப்பாங்க. அதை நான் உணர்ந்ததோட வெளிப்பாடுதான் ‘இரும்பு குதிரை’!’’

 நா.கதிர்வேலன்