கவிதைக்காரர்கள் வீதி




குப்பைத் தொட்டி


எல்லாம் கிடக்கும்
நேற்று பூத்த மலர்கள்
துருவிய தேங்காய் மூடி
ஒற்றைச் செருப்பு
கிழிந்த உடைகள்
எரிந்து போன டயர்
எரியாது போன டியூப் லைட்
சில சமயம் செத்த எலி
ஒரு சமயம் ஒரு சிசு
எல்லாம் பார்த்தும்
பதறாத மனசு...
நூல் அஞ்சலில் வந்த
அவளின் திருமணப் பத்திரிக்கை
கிழிபட்டுக் கிடக்கையில் மாத்திரம்
தூசி விழுந்த கண்ணாய்
கலங்கி வழிய விடுகிறது கண்ணீரை

ஸ்ரீநிவாஸ் பிரபு, சென்னை-90.          

உயிர்ப்பு

செல்போன் கோபுரம்
துரித உணவகம்
ஷாப்பிங் மால்
கார் விற்பனையகம்...
நகரத்தின் இத்தனை
குறியீடுகளின் நடுவே
இன்னும் உயிர்ப்புடன்தான்
இருக்கிறது
கிராமத்துக்கான அடையாளம்,
சும்மாடு கட்டிய தலையில்
விறகு சுமந்து செல்லும்
அந்த மூதாட்டியால்!

பாலு விஜயன், சென்னை.

கரைதல்

வண்ணங்களாய்
வழிந்தோடுகிறது
தெரு ஓவியனின் பசி,
எதிர்பாராது
பெய்த மழையில்!

- கீர்த்தி, சென்னை-99.

வள்ளல்

ஊர் முழுவதற்குமாக
ஓடிய ஆறு
வற்றி வறண்டபோதும்
இரவும் பகலும் லாரி லாரியாக
மணல் சுரண்ட
இடம் தருகிறது
கர்ண பரம்பரை!

-நா.கிருஷ்ணமூர்த்தி, மதுரை.