என்ன எழுதினாங்க?



தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் 34வது சென்னை புத்தகக் காட்சி வருகிற ஜனவரி 4 முதல் 17 வரை பச்சையப்பன் கல்லூரி எதிரிலுள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் இடம்பெறும் தங்கள் புதிய படைப்புகள் பற்றி எடுத்துரைக்கிறார்கள் இந்த இலக்கியகர்த்தாக்கள்!


ஜெயமோகன்

இந்த வருடம் இரண்டே இரண்டு நூல்கள்தான் எழுதினேன். ‘உலோகம்’ நாவலை கிழக்கு பதிப்பகமும், ‘இரவு’ நாவலை தமிழினியும் வெளியிடுகிறார்கள். ‘உலோகம்’ ஈழப்பிரச்னையை மையமாக வைத்துப் பின்னப்பட்ட த்ரில்லர். ‘இரவு’ நாவல் இரவு முழுக்க விழித்திருந்து பகலில் உறங்கும் ஒரு சமூகம் பற்றியது. இந்த இரு நாவல்களுமே எழுத்துரீதியாகவும் படைப்புரீதியாகவும் எனக்கும் வாசகர்களுக்கும் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.

கலாப்ரியா

முதன்முதலாக என் முழு கவிதைத்தொகுப்பையும் சந்தியா பதிப்பகம் வெளியிடுகிறது. கூடவே என் நேர்காணல்களையும் என் கவிதைகள் தொடர்பான கட்டுரைகளையும் தொகுத்து வெளியிடுகிறார்கள். ‘குங்குமம்’ இதழில் எழுதிய ‘ஓடும் நதி’ கட்டுரைத் தொடரை அந்திமழை இணையக் குழுமத்தினர் கொண்டு வருகிறார்கள். ‘ஓடும் நதி’யில் நான் சிறப்பாக நினைப்பது ஆழமும் கவித்துவமும் கொண்ட மருதுவின் கோடுகளை!

சுகிர்தராணி

ஒன்றரை ஆண்டுகளாக தலித்தியம், பெண்ணியம், ஈழம் தொடர்பாக எழுதிய எல்லா கவிதைகளையும் தொகுத்து ‘தீண்டப்படாத முத்தம்’ என்ற நூலாகப் படைத்திருக்கிறேன். ஒடுக்கப்பட்ட பெண்களின் இருப்பும், ஒடுக்குமுறைக்கு எதிரான ஆக்ரோஷமும் இயல்பாகக் கிளர்ந்தெழும் கவிதைகளில், ஒரு சமூகத்தின் துக்கத்தையும் வேதனைகளையும் மட்டும் படைக்கவில்லை. அதை மாற்றுவதற்கான குரலாகவும் என் கவிதைகள் ஒலிக்கும்.

நாஞ்சில் நாடன்

சில வருடங்களாக நான் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து ‘கான்சாகிப்’ என்ற பெயரில் தமிழினி வெளியிடுகிறது. ‘பச்சைநாயகி’ என்ற கவிதைத்தொகுப்பை உயிரெழுத்து பதிப்பகமும், ‘திகம்பரம்’ கட்டுரைத் தொகுப்பை விஜயா பதிப்பகமும் கொண்டு வருகிறார்கள். ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலை காலச்சுவடு பதிப்பகம் செவ்வியல் வரிசையில் மறுபதிப்பாகக் கொண்டு வருகிறது. எனது எழுத்துப் பயணத்தில் புதிய வரவாக இவை இருக்கும்.

எஸ்.ராமகிருஷ்ணன்

ஏற்கனவே எனது 5 கட்டுரைத் தொகுப்புகளை மதுரையில் வெளியிட்டு விட்டேன். எனது ‘துயில்’ நாவலை சென்னையில் வெளியிட்டது உயிர்மை பதிப்பகம். மூன்று ஆண்டுகள் உழைத்து இந்த நாவலை எழுதியிருக்கிறேன். 500 பக்கங்களுக்கு மேற்பட்ட இந்நாவல் நோய்மையுற்ற ஒருவனின் சுருங்கிய உலகத்தை அதன் சகல பரிமாணங்களோடும் அலசுகிறது. ஒவ்வொரு நோய்க்கும் ஒரு நூற்றாண்டுகால நினைவுகள் இருக்கின்றன. அந்த நினைவுகள் வழியே பயணிக்கிறது இந்த நாவல்.

பொன்னீலன்

சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக உழைத்து நான் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் வரலாற்றை எழுதியிருக்கிறேன். அதை என்.சி.பி.ஹெச். ‘மறுபக்கம்’ நாவலாக வெளியிட்டிருக்கிறார்கள். பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட கிளர்ச்சிகளையும் மோதலையும் பதிவுசெய்யும்போது ஒரு படைப்பாளனாக என்னவிதமான பொறுப்போடு செயல்பட வேண்டுமோ, அப்பொறுப்போடு செயல்பட்டிருக்கிறேன். எனக்கு மட்டுமல்ல... தமிழ்ச் சமூகத்துக்கே இது முக்கியமான நாவல்.

தமிழ்நதி

ஒரு பெரும் போரை என் சொந்த ஈழச்சமூகம் எதிர்கொண்டபோது அந்த மண்ணிலிருந்து தமிழகத்தில் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் என் மனப் போராட்டத்தையும் இயலாமையையும் வலிகளையும் குவித்து நான் எழுதிய கட்டுரைகளே ‘ஈழம் & தேவதைகளும் கைவிட்ட தேசம்’. எல்லோரும் ஓடிக்கொண்டிருந்த அந்தக்
கணத்தில் நான் அனுபவித்த எல்லா துன்பங்களையும் பாரத்தையும் இந்நூலில் இறக்கியிருக்கிறேன். இந்நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. காலத்தாலும் சோகத்தாலும் இது முக்கிய
மானது.

மனுஷ்யபுத்திரன்

இந்த வருடத்தில் நான் எழுதிய 126 கவிதைகளையும் தொகுத்து ‘இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்’ என்ற நூலாகக் கொண்டு வந்திருக்கிறேன். படைப்புலகில் தீவிரப் பங்காற்றுகிறவர்களுக்கான வெளியை ‘உயிர்மை’ உருவாக்கிக் கொடுத்தாலும் ஒரு படைப்பாளியாகவும் பதிப்பாளராகவும் நானும் இருக்கிறேன். என்னுடைய கவிதை நூல் உயிர்மை பதிப்பக வெளியீடாகவே வருகிறது. கவிஞனின் சாத்தியங்கள் எந்த அளவுக்கு உக்கிரமானவை, எல்லையற்றவை என்பதற்குச் சாட்சியமாக இந்தத் தொகுதி திகழ்கிறது. நவீன தமிழ்க் கவிதையில் இதுவரை எழுதப்படாத எண்ணற்ற உடல்களும் மனங்களும் இக்கவிதைகளெங்கும் ததும்புகின்றன. இந்த வாழ்க்கையில் அன்பைப் போல தண்டிக்கப்படுகிற, நிராகரிக்கப்படுகிற, வஞ்சிக்கப்படுகிற உணர்ச்சி வேறேதும் இருக்கிறதா என்ற கேள்வியை இந்த கவிதைகள் கேட்கின்றன உங்களிடமும்; என்னிடமும்.
தொகுப்பு: டி.அருள் எழிலன்