சங்கிலி



‘‘ஒம்பது மணிக்கு பேங்க் திறக்குது. ஒம்பதே கால் ஆச்சு... ஒருத்தராவது சீட்ல உட்கார்ந்து வேலையை ஆரம்பிக்கறாங்களா...’’ என்று வெறுப்பை சத்தமாகவே வெளியிட்டான் பெருமாள்.

‘‘ஏங்க, எட்டரை மணியிலேர்ந்து உங்க ஆபீஸ்ல மின்சார கட்டண கவுன்ட்டருக்கு முன்னால நின்னு, நின்னு, உங்களை திட்டிக்கிட்டே பேங்குக்கு வந்தா... நீங்க இங்க க்யூவில நின்னுக்கிட்டிருக்கீங்க, அடச் சே!’’ என்று கோபக்குரலில் அலுத்துக்கொண்டான் டேவிட்.

‘‘மெட்ரோ வாட்டர் வரி கட்டப் போனேன். அங்கேயும் கவுன்ட்டர்ல யாரும் இல்லே... சே! அட, ஏம்ப்பா நீ இங்கயா நின்னுகிட்டிருக்கே?’’ என்று டேவிட்டை பார்த்து கத்தியே விட்டான் இப்ராஹிம். ‘‘அங்க மெட்ரோ வாட்டர் கவுன்ட்டர் முன்னால் நூறு பேர் நின்னுக்கிட்டிருக்காங்கப்பா!’’ என்றவன், ‘நான் வேல பார்க்கற ரேஷன் கடையில எத்தனை பேர் காத்துக்கிட்டிருக்காங்களோ’ என்று நினைத்துக் கொண்டான்.

‘‘இன்னிக்கு ஒரு வேலையும் ஆகலே. எலக்ட்ரிக் பில், மெட்ரோ வாட்டர் வரி கட்ட முடியலே. ரேஷனும் வாங்க முடியலே... ஒரு பயலாவது அவனவன் சீட்ல இருந்து வேலை செய்யறானுங்களா, வெட்டிப் பயலுக’’ என்று கத்திக்கொண்டே வந்த நாகேந்திரன், வங்கியில் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு, வாடிக்கையாளர்களிடம் சள்ளுபுள்ளென விழத் தொடங்கினான்!
பிரபுசங்கர்