களவாணி கல்யாணம் செய்த எத்தன்! நிஜ ஸ்டோரி





‘களவாணி’ படத்தில், பெண்வீட்டாருக்குக் கல்தா கொடுத்துவிட்டு வெளியில் தெரியாமல் தாலிகட்டியது போலவே சொந்த வாழ்க்கையிலும் கல்யாணத்தை முடித்திருக்கிறார் விமல். மேரேஜ் ஸ்பாட்  அதே தஞ்சை மாவட்டம்தான்!


கும்பகோணத்தில் ‘எத்தன்’ படப்பிடிப்பில் இருந்த விமல், இரண்டு மணி நேர இடைவெளியில் சுவாமிமலை முருகன் கோயிலில் காதும் காதும் வைத்த மாதிரி கல்யாணத்தை முடித்து விட்டார். விமலின் மனம் கவர்ந்த மங்கை, அக்ஷயா என்கிற பிரியதர்ஷினி. மேடம், சென்னை சவீதா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். நிஜ வாழ்க்கையிலும் ‘களவாணி’த்தனம் காட்டிய விமலைச் சந்தித்து ‘ட்ரீட் எப்போ தலைவா’ என்றால், அந்த டிரேட்மார்க் ‘அம்மாஞ்சி’ பார்வையை நம்மிடமும் வீசுகிறார்!

‘‘சொந்த மாமா பொண்ணுங்க. மாமா பி.சி.ராஜமோகன் திண்டுக்கல்ல டிரான்ஸ்போர்ட் நடத்துறார். சின்ன வயசுல மணப்பாறையில இருந்து அப்பப்ப திண்டுக்கல் போவேன். கள்ளங் கபடமில்லாத அந்த வயசுல நானும் பிரியாவும் ஓடிப்புடிச்செல்லாம் விளையாண்டிருக்கோம். வயசாக வயசாக கனவுகளும் வளந்துச்சு. சென்னைக்கு வந்து, சினிமா ஆசையில கூத்துப்பட்டறையில சேந்தபிறகு என் கவனமெல்லாம் நடிப்புலதான் இருந்துச்சு. ஆனாலும், அப்பப்ப ‘மேடம்’ கனவுல வந்து டூயட் பாடுவாங்க. இடைல பத்து வருஷம் தொடர்பே இல்லை. பிரியா மெடிக்கல் காலேஜ்ல சேந்தபிறகு யதார்த்தமா சந்திச்சோம். அப்பப்ப போன்ல மொக்கை போடுவேன். அதுவும் கல்லூரி விஷயங்களைப் பேசும்.

சினிமா வாய்ப்பு கிடைச்சு, வாழ்க்கையை நல்லா அமைச்சுக்க முடியும்னு நம்பிக்கை வர்ற வரை காதலைச் சொல்லக்கூடாதுன்னு முடிவுபண்ணிட்டேன். ‘பசங்க’ படத்தில கமிட் ஆனபிறகு ஒருநாள் ஹாஸ்டலுக்குப் போயி, ‘நான் உன்னை லவ் பண்றேன். கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்’னு சொல்லிட்டேன். கொஞ்சம் அதிர்ச்சி. ‘இப்போ எந்த முடிவும் எடுக்க முடியாது. நான் படிக்கணும்’னு சொன்னிச்சு. ‘கல்யாணத்துக்கு அப்புறமும் கண்டிப்பா படிக்கலாம். நான் உன்னைக் கட்டாயப்படுத்தலே.

என்னைப் பிடிச்சிருந்தா ஒரு வாரத்துக்குள்ள பதில் சொல்லு’ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஒரு வாரம் கழிச்சு மேடம் ஓ.கே. சொல்லிட்டாங்க...’’ என்று வெட்கப்படுகிறார் விமல்.
‘‘உக்காந்து ஆசை ஆசையா காதலிக்க யாருக்கும் நேரமில்லை. போன்லதான் காதல். மெதுவா எங்க வீட்டுல காதல் மேட்டரைச் சொன்னேன். அவங்களுக்கு வேற ஒரு பயம்... சினிமாக்குள்ள இருந்து யாரையாவது கட்டிக்கிட்டு வந்துருவேனோன்னு! பிரியா பேரைச் சொன்னதும் அமைதியாகிட்டாங்க. அப்புறம் அப்பாவும் அம்மாவும் மாமா வீட்ல பொண்ணு கேட்டாங்க. ‘சினிமாக்காரனுக்கு தரமாட்டோம்’னு மாமா உறுதியா சொல்லிட்டாரு. ‘டாக்டர் மாப்பிள்ளைக்குத்தான் கட்டுவோம்’னு அதிரடியா மாப்பிள்ளை பாக்கவும் ஆரம்பிச்சிட்டாங்க. ஆனா, ‘கட்டினா விமலைத்தான் கட்டிக்குவேன்’னு பிரியா உறுதியா சொல்லிருச்சு.

வேற வழி தெரியல. பிரியாவை தொலைச்சுட்டு வாழ்க்கையை யோசிக்கவே முடியலே. சென்னையில இருந்து ப்ரியாவை வரவழைச்சேன். இயக்குனர் சற்குணம், ‘வாகை சூடவா’ புரொட்யூசர் முருகானந்தம், கும்பகோணம் நண்பர் ஸ்ரீதர்னு மூணு பேரோட சுவாமிமலை போயிட்டோம். கோயில்ல மக்கள் கூடிட்டாங்க. அடுத்த படத்துக்கான ‘போட்டோ ஷூட்’னு சொல்லிச் சமாளிச்சு கல்யாணத்தை முடிச்சு, பதிவும் பண்ணிட்டோம்’’ என்று சிரிக்கிறார் விமல்.

தகவல் கேட்டு ரெண்டு தரப்பிலுமே கொதிப்பு. விமல் வீட்டில் மெல்ல மெல்ல சமாதானமாகி விட்டார்களாம். பெண் வீட்டார் இன்னும் தம்பதியை அங்கீகரிக்கவில்லை.‘‘நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை. பிரியாவும் அப்படித்தான். கோலாகலமா கல்யாணம் பண்ணணும்ங்கிற கனவு ரெண்டு தரப்புக்குமே இருந்திருக்கும். அதுக்கு அவகாசம் இல்லாமப் போச்சு. ரெண்டு பேருமே இதுதான் எங்க வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டோம். பிரியா வீட்டிலதான் இன்னும் கோபமா இருக்காங்க. அவங்க வருத்தத்தில நியாயம் இருக்கு. காலம் அவங்க காயத்தை ஆத்தும். எங்களை கண்டிப்பா ஏத்துக்குவாங்க’’ என்கிற விமல், திருமணம் முடிந்த கையோடு மனைவியை ஹாஸ்டலுக்கு அனுப்பி விட்டு ஷூட்டிங்கில் பிசியாகி விட்டார்.
 வெ.நீலகண்டன்