வாசகர் கவிதைகள்





பிறவிகள்...

கதவு, ஜன்னல்,
கட்டில், நாற்காலி...
இன்னும்
பல பிறவிகள்
எடுத்துவிடுகிறது,
செத்தபின்பும்
மரம்!
தென்கரை சி.சங்கர், வந்தவாசி.

அனாதை
குடும்பங்கள் எல்லாம்
பங்காளிகள் புடைசூழ
ஒற்றுமையாக
ஒரே தெருவில்!
குலதெய்வம் மட்டும்
அனாதையாக நடுக்காட்டில்!
எஸ்.இ.பங்காரு, புத்தன்தருவை.

நனைதல்
எத்தனை முறை
இமைகள்
குடைகளாய் விரிந்தாலும்
எப்படியும்
நனைந்துதான் விடுகின்றன
விழிகள்,
கண்ணீர் மழையில்!
ஏ.டி.தமிழ்மணி,தளிகைவிடுதி.

தண்டனை
தவறு செய்யாமலேயே
தோல் உரிக்கிறார்கள்
சாத்துக்குடியை!
இரா.வசந்தராசன், அரூர்.

கள்ளிக்காடு...
பெண்களின் எண்ணிக்கை
குறைந்திருந்த
அந்தக் கிராமத்தில்
கள்ளிச்செடிகள் மட்டும்
நிறைய இருந்தன!
செல்வராஜா,சேலம்.

மரணித்தல்...
மணல் அள்ளும்
லாரிகளில்
அடிபட்டுச் சாகிறது
ஒவ்வொரு
வறண்ட ஆறும்.
பெ.பாண்டியன், காரைக்குடி.

ஒரு துளி!
இடிகள் தாங்கி
மின்னல்கள்
ஏற்றும் உயிர்ப்போடு
சூழ்ந்திருக்கும் சிப்பிகள்
பலவும் முத்துகள் பெற...
தனித்திருக்கிறது
ஒரு சிப்பி,
அடைமழையின்
ஒரு துளிக்கென!
அ.மான்விழி ரஞ்சித்,திருவண்ணாமலை.