தென்மேற்குப் பருவக்காற்று சினிமா விமர்சனம்



காதலும் களவின் அங்கம் என்பதை மாற்றிக் களவும் காதலின் அங்கமாக இருக்கும் ஒரு மண்வாசனைக் கதையுடன் தாய்ப்பாசத்தையும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சீனுராமசாமி. சில கிலோமீட்டர்கள் பரப்புக்குள் நிலப்பரப்பின் ஒரு பகுதியை வளமாகவும், இன்னொரு பகுதியை வறட்சியாகவும் வைத்திருக்கும் தென்மேற்குப் பருவக்காற்றைத் தலைப்பில் வைத்திருப்பதே அந்தப்பகுதி மக்களின் வாழ்க்கைக் கதைக்கான அழகான குறியீடு. வளமான பகுதி மக்கள் விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் மேற்கொள்ள, வறண்ட பூமியின் மக்கள் இந்தப்பகுதி மக்களின் கால்நடைகளைக் கவர்ந்து சென்று பிழைப்பதுமான இந்தக்கதை இதுவரை அதிகம் சொல்லப்படாதது.

குறிப்பிட வைக்கும் இன்னொரு அம்சம், கதாபாத்திரங்களின் தேர்வு. அழகியலைப் பின்னுக்குத் தள்ளிவைத்திருக்கும் நாயகன் நாயகியின் தோற்றமும், ஒப்பனை இல்லாத இயல்பும் தமிழ்சினிமாவில் அதீத முயற்சி. அந்தவகையில் நாயகனாகியிருக்கிறார் விஜய சேதுபதி. தன் வீட்டு ஆடுகளைத் திருடிச் செல்பவர்களில் ஒருவனை இவர் மடக்க, முகமூடியை விலக்கிப் பார்த்தால் அது பெண் என்று தெரியவருவது அதிர்ச்சி. பெண் என்பதற்காக கருணை காட்டினாலும், அவளது அண்ணன் தன்னைக் கொலை செய்யுமளவுக்குப் போக, அவர்களைப் போலீஸில் பிடித்துக் கொடுப்பதில் வெள்ளந்தி மனிதனின் நியாயமான கோபம் தெரிகிறது.

கள்ளமுள்ள பெண்ணாக வரும் வசுந்தரா சியேட்ராவைவிட அந்தப் பாத்திரத்துக்குப் பொருத்தமான நடிகை கிடைப்பாரா தெரியவில்லை. கள்ளன் பெண்ணென்று தெரிந்த வினாடியில் விஜய சேதுபதியின் பிடி தளர, துள்ளிக்குதித்து இருளில் ஓடி மறையும் வசுந்தரா, தன்னைத்தேடி ஊருக்குள் விஜய சேதுபதி வந்துவிட்டதைத் தெரிந்து புயல் வேகத்தில் சைக்கிளை மிதித்தும், கைகளில் தூக்கி ஓடியும் செல்லும் திருட்டுத்தனத்திலும், அப்படியும் அவரிடம் ஒருகட்டத்தில் மாட்டிக்கொள்ள, கண்ணில் மண்ணைத் தூவி தப்பிக்கும் துணிச்சலிலும் அந்தக் கேரக்டரில் அப்படியே பொருந்திப்போகிறார். காதலில் ஜெயித்தால் காதலனின் உயிர் பறிக்கப்பட்டுவிடும் என்றறிந்து விஜய சேதுபதியின் அம்மா சரண்யாவிடம் சென்று, ‘உன் மகன் எனக்கு வேணாம், நீயே வச்சுக்க...’ என்று மருகும் காட்சியிலும் நெகிழவைக்கிறார்.

அம்மா என்றால் அவள் அப்பழுக்கில்லாத நல்லவளாக மட்டுமே இருப்பாள் என்ற நிலைகளைத் தாண்டும் நவீன சினிமாவின் உச்சம், இதில் நாயகனின் அம்மா வேடத்தில் வரும் சரண்யா பொன்வண்ணன். வருங்கால மருமகளை ஊருக்குள் கூட்டி வந்து அறிமுகப்படுத்தும் அழகிலும், திருட வந்த பெண் மகனைக் காதலிக்கிறாள் என்றறிந்து அவள் ஊருக்கே போய் சண்டைபிடிக்கும் முரட்டுத்தனத்திலும், மகனின் கழுத்துக்கு வந்த கத்தியை தான் வாங்கி மண்ணில் சரியும் வீரத்திலும் வாழ்ந்து காட்டியிருக்கும் சரண்யாவுக்கு பல நிலைகளில் விருதுகள் நிச்சயம்.

படத்தில் வரும் எல்லா பாத்திரங்களையுமே இயல்பாக சித்தரித்திருப்பதில் சீனு ராமசாமி, பாரதிராஜாவின் படங்களை நினைவுபடுத்துகிறார். என்.ஆர்.ரஹ்நந்தனின் இசையும், செழியனின் ஒளிப்பதிவும் வைரமுத்துவின் வரிகளும் கள்ளிக்காட்டை நேரில் கொண்டு வந்து நிறுத்துகின்றன.

தாய்ப்பாசம், காதல் இரண்டில் எதை உயர்த்திச் சொல்வது என்பதில் இருக்கும் தடுமாற்றம் படத்தின் சுவாரஸ்யத்தைக் குறைக்கிறது. தாய்ப்பாசத்தை மட்டுமே உயர்த்திக்காட்டும் கிளைமாக்ஸில் ஏற்கனவே பார்த்த மான்டேஜ்களை விடுத்து புதிதாகப் படமாக்கியிருந்தால் அழுத்தம் கூடியிருக்கும். களவையும், காதலையும் கற்றுத்தரும் காற்று..!
 குங்குமம் விமர்சனக்குழு