நான் பார்ட்டி கேர்ள் இல்லை! சதா



சதாவின் சந்தோஷம் வெங்காய விலை போல் எகிறியிருந்ததற்குக் காரணம் இருந்தது. கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சதா நடித்த 'மைலாரி’ கடந்த வாரம் வெளியாகி சக்கை போடு போடுகிறது. அடுத்து தெலுங்கில் ஹீரோயின் ஓரியன்டட் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமான சந்தோஷமும் தக்காளி விலையாகக் கூடியிருந்தது. தமிழில் அவர் நடித்த ‘புலிவேஷம்’ வெளியாகத் தயார் நிலையில்!

‘‘படத்தில உங்களுக்கு பெண்புலி வேஷமா..?’’

‘‘வார்த்தைக்கு அப்படியே அர்த்தம் எடுத்தா எதுவுமே விளங்காது. வாழ்க்கையில எல்லோரும் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஒரு வேஷம் போட்டுக்கிட்டிருக்கோம்னு சொல்ல வர்ற டைட்டில்தான் அது. அப்படி கிராமத்திலேர்ந்து வர்ற ஆர்.கே, எப்படி நகர வாழ்க்கைக்கு ஏத்தமாதிரி தன்னை மாத்திக்கறார்னு கதை பண்ணியிருக்கார் பி.வாசு சார். அவரோட டைரக்ஷன்ங்கிறதால இரட்டிப்பு மகிழ்ச்சியோட ஒத்துக்கிட்டேன். ஏன்னா, ரெண்டு தடவை அவரோட டைரக்ஷன்ல நடிக்கக்கேட்டு அது தவறிப்போச்சு.

இதுல ஆர்.கே. ஹீரோ, நான் ஹீரோயின். ஆனாலும் ரெண்டு பேருக்குள்ள நிஜக் காதல் இல்லை. அவர் கிராமத்து வெள்ளந்தி மனிதன், நகரத்துக்கு வந்து ரவுடியிசத்துக்குள்ள போறவர்னு மாறுபட்ட கேரக்டர்கள்ல பொருத்தமா நடிச்சிருக்க, நான் நகரத்து மாடர்ன் கேர்ளா வர்றேன். என்னோட கேரக்டர் ரொம்ப ரகசியமானது. கொஞ்சம் சொன்னாலும் கதையோட சஸ்பென்ஸ் கெட்டுப்போயிடும். நான் என்ன பண்றேன், எதுக்கு வர்றேங்கிறதெல்லாம் சஸ்பென்ஸ். இதில எங்ககூட கார்த்திக் சாரும் ஒரு போலீஸ் ஆபீசர் கேரக்டர்ல நடிச்சிருக்கார்.

வழக்கமா பி.வாசு சார் படங்கள்ல ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும். அந்த நம்பிக்கையில, ஹீரோயிசம் பற்றியோ, எனக்குப் படத்தில காதல் காட்சிகள் இல்லைங்கிறதைப் பத்தியோ கவலைப்படாம ஒத்துக்கிட்டேன். இந்தப்படம் வெளிவந்ததுக்குப் பின்தான் தமிழ்ல அடுத்த புராஜக்ட் ஒத்துக்கிறதா இருக்கேன்...’’

‘‘புது வருஷம் எங்கே, எப்போ ஆரம்பிச்சது. என்ன சங்கல்பம் எடுத்தீங்க..?’’

‘‘நான் பார்ட்டி கேர்ள் இல்லை. அதனால இந்த வருஷத்தை எங்கம்மா, அப்பாகூட வீட்ல சந்தோஷமா இருந்தே வரவேற்றேன். எனக்குப் பிடித்தமான கணேஷ், ஷிர்டி சாய்பாபா கோயில்களுக்குப் போய்வந்தேன். என் புது வருட சங்கல்பத்தைக் கேட்டு ஆடிப்போயிடாதீங்க. இந்த வருஷம் ஷாப்பிங்கே பண்றதில்லைன்னு முடிவெடுத்ததுதான் அது. ஏன்னா வீட்டுக்குள்ள பார்த்தா, இதுவரை வாங்கிய பொருள்கள்ல பாதியைக்கூட இதுவரை பயன்படுத்தலைன்னு தெரிஞ்சது. மேலும் மேலும் ஏன் சேத்துக்கணும்னு இந்த வருஷம் ஷாப்பிங்குக்குத் தடா போட்டுட்டேன்...!’’

கட்டிக்கப் போறவன் கொடுத்து வச்சவன்..!               
 வேணுஜி