மன்மதன் அம்பு சினிமா விமர்சனம்



விதைத்த இடத்திலிருந்து காதல் விலகி வேறு இடத்தில் முளைக்கும் கதை. அதை ரொமான்டிக் காமெடி ஜேனர் ஸ்கிரிப்ட்டில் தந்திருப்பதுடன், கதையைத் தாங்கி நடித்தும் தனக்கு நிகர் தான்தான் என்று இன்னொரு முறை உணர்த்தியிருக்கிறார் கமல். அவருக்கு ஈடுகொடுக்கும் இயக்குநர் தான் மட்டும்தான் என்பதை கே.எஸ்.ரவிக்குமாரும் இன்னொருமுறை நிரூபித்திருக்கிறார்.

கமல்தான் ஹீரோ என்றாலும் கடந்த ஆண்டுகளாகவே தன் அனுபவத்துக்கும் முதிர்ச்சிக்கும் ஏற்ற நியாயமான ஹீரோவாகவே பயணிப்பது அவர் பருவத்தையொத்த மற்ற ஹீரோக்களும் பின்பற்ற வேண்டிய விஷயம். திருமணமாகி மனைவியை விபத்தில் பறிகொடுத்த முன்னாள் மேஜர் ஆர்.மன்னாராக வரும் அவர், மாதவனின் காதலியான நடிகை த்ரிஷாவை கப்பல் பயணத்தில் கண்காணிக்கும் டிடெக்டிவ்வாகப் பயணிக்கிறார். புற்றுநோய் பீடித்திருக்கும் நண்பன் ரமேஷ் அரவிந்தின் கீமோதெரபி செலவுகளுக்காக இந்த வேலையை மேற்கொண்டிருப்பதால் அதன் தாக்கத்துடனும், விபத்தில் மனைவியைப் பறிகொடுத்த சோகத்துடனும் தோற்றமளிப்பதும் நல்ல நடிப்புக்கான டியூ.

அம்புஜாக்ஷி என்ற இயற்பெயரும், சினிமாவுக்காக நிஷா என்ற பெயரும் அமையப்பெற்ற வேடம் த்ரிஷாவுக்கு. ஒரு நடிகை காதலிப்பதில் எத்தனை சிக்கல் இருக்கிறது என்பதை அழகாக உணர்த்தும் த்ரிஷா, பயணத்துக்கான கேஷுவல் உடைகளுடன் வருவது கூடுதல் அழகு. மனைவியை கமல் பறிகொடுத்த விபத்து தான் நிகழ்த்தியதுதான் என்று த்ரிஷா தெரிந்துகொள்ளும் கட்டமும், அதற்கு அவரது ரியாக்ஷன்களும் ஷாக் அசத்தல்கள்.

தன் காதலி நல்லவள்தான் என்று தெரிந்துகொள்ளும் நிமிடத்தில் காதலைப் புதுப்பித்துக்கொள்ள நினைப்பதும், நல்லவள் இல்லை என்று தெரியவரும்போது மனம் மாறுவதுமாக மேல்தட்டு இளைஞனின் மனோபாவத்தை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார் மாதவன். இரண்டு குழந்தைகளுடன் கணவனை டைவர்ஸ் செய்த சங்கீதாவின் நடிப்பும் அந்தக் கேரக்டரைக் கண்முன் நிறுத்துகிறது. அவரது ஆறுவயது மகன் ஆசிஷின் அலம்பல் அசத்துகிறது. ரமேஷ் அரவிந்த், அவர் மனைவி ஊர்வசி, த்ரிஷாவின் கால்ஷீட்டுக்காக அல்லல்படும் புரட்யூசர் தம்பதி என்று ரசிப்பதற்கு ஏகப்பட்ட கலைஞர்கள். ஒரு பாடலில் வரும் சூர்யாவும் ஒரு கேரக்டர் போலாகிறார். ரிவர்சில் ஓடும் பிளாஷ்பேக் பாடல் கமலின் டிரேட்மார்க்
.
உலகின் அதிநவீன கப்பலில் கதை, லேப்டாப்பில் வீடியோ சாட்டிங், மணமுறிவை இயல்பாக ஏற்றுக்கொண்ட பெண்ணின் மறுமண முடிவு, கேன்சர் மற்றும் ஹெச்.ஐ.வி பற்றிய 6 வயதுச் சிறுவனின் அறிவு என்று படம் நெடுக இன்றைய சமுதாயத்தை அப்டேட் செய்திருக்கும் கதாசிரியர் கமல் வியக்கவைக்கிறார்.

‘‘வீரத்தோட உச்சம் அஹிம்சைதான்னு ராணுவத்திலேர்ந்து வந்த பிறகுதான் தெரிஞ்சுக்கிட்டேன்...’’ என்பதுபோன்ற அவரது வசனங்களும் ஸ்பெஷல்.கப்பலின் பிரமாண்டத்தையும், ஐரோப்பாவின் அழகையும் கதைக்கு அந்நியப்படாமல் கேமராவுக்குள் கொண்டு வந்திருக்கும் மனுஷ்நந்தன் தமிழில் எதிர்பார்ப்புள்ள ஒளிப்பதிவாளராகிறார். ‘ஹூ’ஸ் த ஹீரோ..?’, ‘மன்...மதன்...அம்பு...’ பாடல்களில் பட்டையைக் கிளப்பியிருக்கும் தேவிஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசையும் படத்தின் தேவையை நிறைவு செய்கிறது.

முத்த நாயகன் கமலும், அழகு தேவதை த்ரிஷாவும் இருக்கும் படத்தில் அவர்களுக்கான காதல் காட்சிகள் இல்லாதது ஒரு குறை. த்ரிஷா கைமாறி விட்டதால் மாதவன் ஜோடியாக சங்கீதாவைச் சேர்த்திருப்பதிலும் ஒரு செயற்கைத்தனம் தொனிக்கிறது.
மன்மதன் அம்பு  காதல் போயின் இன்னொரு காதல்..!
 குங்குமம் விமர்சனக்குழு