வீடு







வீட்டில்

இருக்கிற
ஒரு நபர்
வீதியில் இருக்கிற
இரு நபர்களுக்குச் சமம்!
 மே வெஸ்ட்
(அமெரிக்க நடிகை, எழுத்தாளர்)

வெளிநாட்டுவாழ் இந்தியர் தம் பெயரிலேயே முறையாகச் சொத்து வாங்குவது ரொம்பவே ஈஸி. இதற்காக அலைந்து
திரிந்து  வீணாகச் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை!

சொத்து வாங்கும் விதிமுறைகள் தெரிந்திருந்தும்கூட, சிலர் மிகப்பெரிய தவறைச் செய்கிறார்கள். மதுரைக்காரர் ஒருவர் 1997ல் ஐ.டி. நிறுவனத்தில் சேர்ந்தார். 2001ல் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உருவானது. ஊர்ப்பற்று அதிகம் கொண்ட அவருக்கு, சம்பாதித்த பணத்தில் சொந்த ஊரிலேயே சொத்து வாங்க ஆசை. வெளிநாட்டுவாழ் இந்தியர் என்பதால் அவர் பெயரில் தென்னந்தோப்பு வாங்க முடியாது. அதனால், 25 ஏக்கர் தோப்பை அப்பா பெயரில் வாங்கினார்.

தோட்டத்தில் இருந்து வரும் மாத வருமானம் மட்டும் சுமார் ரூ.75 ஆயிரம்.அப்பாவின் விருப்பத்துக்கேற்ப அந்தத் தோப்பைப் பராமரிக்கும் பொறுப்பு அண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது.அண்ணன் என்பதால் கணக்கும் கேட்கவில்லை. தோட்ட வருமானத்திலிருந்து இன்னும் பல சொத்துகளை அப்பா பெயரிலேயே வாங்கியிருப்பதாக அண்ணன் கூறினார். புளகாங்கிதம் அடைந்த இவர், 2009ல் ஊர் திரும்பியபோது, பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தோட்ட வருமானத்திலிருந்து அப்பா பெயரில் எந்தச் சொத்தும் வாங்கப்படவில்லை. அண்ணன் பெயரிலேயே அத்தனை சொத்துகளும் வாங்கப்பட்டிருந்தன. அதுவும் அப்பாவின் சம்மதத்துடன்தான் நடந்திருக்கிறது. அதிர்ந்தார் அந்த உழைப்பாளி.

அடுத்த அதிர்ச்சி இன்னும் அயர்ச்சி அளித்தது. முதன்முதலில் வாங்கிய 25 ஏக்கர் தோப்பையும் ‘அண்ணனுக்கே கொடுத்து விடு’ என்றார் அப்பா. அதற்கு அப்பா சொன்ன காரணம்... ‘நீ எப்படியும் எங்களுக்குத் தெரியாமல் சென்னையிலும் மற்ற இடங்களிலும் பல மடங்கு சொத்து சேர்த்திருப்பாய். அதனால் இதை அண்ணனுக்குக் கொடுத்து விடு’ என்பது! அடுக்கடுக்கான அதிர்ச்சிகளைத் தாங்க முடியாத அந்த மகன், அந்த அளவு சம்பாத்தியம் இல்லை என்றும், இந்த இடத்தை விற்றுத்தான் சென்னையில் இடம் வாங்க வேண்டும் என்றும் கெஞ்சியும், அப்பா நம்ப மறுத்தார். என்ன செய்வது என புரியாமல் புலம்பிய அவருக்கு, மனைவி மற்றும் மாமனார் வீட்டிலும் பிரச்னை. பணநஷ்டம் ஒருபுறம், மனக்கஷ்டம் இன்னொருபுறம்.

சொத்து வாங்கும்போது அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்டே வாங்க வேண்டும். நாம் திறமையாகச் செயல்படுகிறோம் என நினைத்து விதிகளை ஏமாற்ற நினைக்கும்போது இதுபோன்ற வில்லங்கங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார் ட்ரைஸ்டார் ஹவுசிங் நிர்வாக இயக்குனர் பா.ஜார்ஜ் பீட்டர் ராஜ்.

வெளிநாட்டுவாழ் இந்தியர் தம் பெயரிலேயே சொத்து வாங்குவது பலரும் நினைப்பது போல சிரமமான காரியம் அல்ல. ரொம்பவே ஈஸி! இந்தியாவிலுள்ள நம்பிக்கையான ஒருவருக்கு அதிகாரப் பத்திரம் (பவர் ஆஃப் அட்டர்னி) அளித்தாலே போதும். இந்த விவரம் தெரிந்திருந்தும்கூட, அதிகாரப் பத்திரதாரர் அதைத் தவறான வழியில் பயன்படுத்தி விடுவாரோ என்ற பயத்தில் சொத்து வாங்க யோசிப்பது உண்டு.

பவர் ஆஃப் அட்டர்னியாக நியமிக்கப்படுபவருக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கும் பட்சத்திலும், பத்திரத்தில் குறிப்பிடப்படும் விஷயங்கள் குறிப்பாக இல்லாமல் இருந்தாலும்தான் அதை தவறாகப் பயன்படுத்த முடியும். எந்தச் சொத்தினை வாங்க விரும்புகிறோமோ, அதை வாங்குவதற்கு மட்டுமே அவருக்கு பவர் கொடுக்க வேண்டும். யாருக்கு பவர் கொடுக்கிறோமோ அவருடைய பெயர், முகவரி, சொத்தின் முழுவிவரம் (அளவு, சர்வே எண், கிராமம், வட்டம், மாவட்டம்), எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பதிவு செய்யப்பட இருக்கிறதோ அந்த விவரம் ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். இவ்விவரங்கள் தெளிவாக இருந்தால் பவரை தவறான முறையில் பயன்படுத்த வாய்ப்பே இல்லை. குறிப்பிட்ட சொத்தினை வாங்குவதற்கு மட்டும், குறிப்பிட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் பத்திரத்தில் கையொப்பம் இடுவதுடன் அவர் வேலை முடிந்து விட்டது. வேறு எதற்கும் அந்த பவரை பயன்
படுத்த முடியாது.

ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில், வடகால் கிராமத்தில், சர்வே எண் 270ல் அடங்கியுள்ள 2400 சதுர அடி  அங்கீகரிக்கப்பட்ட மனையை அமெரிக்கவாழ் இந்தியர் வாங்குவதாகக் கொள்வோம். ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அச்சொத்து பதிவுசெய்யப்பட வேண்டும். இவ்விவரங்களைக் குறிப்பிட்டு பவர் கொடுக்கும் பட்சத்தில், அதிகாரப் பத்திரதாரர் ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்று, பத்திரப்பதிவின்போது, அமெரிக்காவில் உள்ளவர் சார்பில் கையொப்பம் இடலாம். வேறு எதற்கும் இந்த பவர் பயன்படாது. வங்கிக்கடன் மூலம் சொத்து வாங்கினால், அதையும் பவரில் குறிப்பிட்டால், வங்கி ஆவணங்களில் கடன்தாரர் சார்பில் பவர்தாரர் கையெழுத்திடலாம்.

இப்படி குறிப்பாகக் குறிப்பிடாமல் பொத்தாம்பொதுவாக பவர் வழங்கி, சொத்து வாங்கக் கூறினால் என்ன ஆகும்? அது அடுத்த வாரம்...(கட்டுவோம்!)
தாஸ்