சிக்கனம்



புதிதாக வரும் உயர் அதிகாரிகளைக் கவரும் வகையில் ஏதேனும் செய்து, அவர்களிடம் முதல் நாளே பெயர் வாங்குவது சுந்தரத்தின் ஸ்டைல். இந்த முறை ரூம் போட்டு யோசித்து ஒரு யுக்தியைக் கண்டுபிடித்தான்.

‘அலுவலகத்தில் சிக்கனத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும்’ என்பதற்கான 10 குறிப்புகளை எழுதி, பிரதிகள் எடுத்து, ஒவ்வொரு டேபிளிலும் வைத்தான். அதைப் படித்த ஊழியர்கள் பலரும் சுந்தரத்தைப் பாராட்டிக் கொண்டிருந்தனர்.

குறிப்புகளைப் பார்த்தபடியே வந்த புது மேனேஜர், ‘‘குட்... நல்ல விஷயம்’’ என்றபடியே தன் இருக்கைக்கு வந்தவுடன், சுந்தரத்தை அழைத்தார். வழக்கம்போல தன் யுக¢தி வெற்றியடைந்தது மகிழ்ச்சியைத் தந்திருந்தது அவனுக்கு.

‘‘சுந்தரம்... நீங்க எழுதியிருந்த விஷயங்கள் மிக அருமை. ஆனா, அதை ஓரே ஒரு காகிதத்தில் எழுதி, அறிவிப்புப் பலகையில் போட்டிருந்தால் அது சிக்கனம். ‘அலுவலகத்தில் சிக்கனம்’ என்று இவ்வளவு காகிதங்களை வீணாக்கியிருப்பது தேவையில்லாதது. இது ஒரு மரத்தையே சாகடிப்பதற்குச் சமம். இனிமே இப்படி நடக்காம கவனமா இருங்க...’’ என்று மேனேஜர்
சொல்லிக்கொண்டே போக, சுந்தரம் வாழ்க்கையிலேயே முதன்முறையாக அதிர்ச்சியைச் சந்தித்தான்!
குமரேசன்