கிசு கிசு



‘‘அந்த நடிகைக்கு உங்களது படங்களில் அடிக்கடி வாய்ப்பு தருகிறீர்கள். அவர் வீட்டிலும் உங்களை அடிக்கடி பார்க்க முடிகிறது. இப்போதாவது விஷயத்தை ஒப்புக் கொள்கிறீர்களா?’’ என்றனர் பிரஸ்மீட்டில்.

பிரபல கதாநாயகன் மனோகரன் முதலில் தயக்கம் காட்டினான். அப்புறம் ஒப்புக்கொண்டான்.

‘‘ஆனால் இதை என் வாயால் சொல்வதைவிட என் அப்பாவே சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த நடிகையின் விருப்பமும் அதுதான்!’’

‘‘எப்போது சொல்வார்?’’

‘‘ம்ம்ம்... அடுத்த மாதம் என் பிறந்த நாளன்று அப்பா தெரிவிப்பார்!’’

அவனது அப்பாவும் பிரபல நடிகர்தான். அந்தக் காலத்து கதாநாயகன். இப்போது நடிப்பதில்லை. மகன் பிறந்த நாளன்று அவரே நிருபர்களை அழைத்தார். சொன்னார்.

‘‘நான் எல்லாவற்றையும் ஒப்புக்கொள்கிறேன். என் மகன் மனோதான் என் மனதை மாற்றினான். நான் நடித்துக் கொண்டிருக்கும்போது அந்த நடிகையை காதலித்தேன். ஆனால், திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றினேன். இப்போது அந்த நடிகையை என் மகன் முன்னிலையில் மணந்து, மனைவியாக ஏற்றுக்கொள்ளப் போகிறேன்’’ என்றதும் அத்தனை பேரும் வாயடைத்துப் போனார்கள்!
சூர்யகுமாரன்