சட்டம்



60வயதான சிவனேசனுக்கு ஆச்சரியமாக இருந்தது. வீட்டில் வைத்துக்கொள்ளப் பிடிக்காமல் முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவைக்க காரணமான மருமகள் வசந்தியிடமிருந்து அப்படியொரு கடிதம்...

‘அன்புள்ள மாமா...
என்னை மன்னியுங்கள். உங்களைப் புரிந்துகொள்ளாமல் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டேன். இனிமேல் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்கிறேன். உடனே வீட்டோடு வந்து இருக்கவும்!’

ஒன்றும் புரியாமல் மகன் திவாகருக்கு போன் செய்தார்... ‘‘என்னாச்சுப்பா உன் ஒய்ப்புக்கு..? ‘வீட்டுக்கே வந்துடுங்க’ன்னு லெட்டர் எழுதியிருக்கா! இப்படி திடீர்னு அவ மனசு மாற என்ன காரணம்?’’

‘‘உங்களை ஆயிரம் பொய் சொல்லி வீட்டை விட்டு அனுப்பினா... நான் ஒரே ஒரு பொய் சொல்லி மறுபடியும் அவளாவே உங்களைக் கூப்பிட வெச்சிட்டேன்!’’

‘‘அப்படி என்ன பொய் சொன்னே?’’

‘‘சட்டத்தைக் காரணம் காட்டி, சரியா ஆதரிக்காத மகன்னு எம் மேல கம்ப்ளைன்ட் கொடுத்து என்னை ஜெயிலுக்கு அனுப்பப் போறதா நீங்க மிரட்டினீங்கன்னு ஒரு பொய்தான் சொன்னேன். உடனே பதறிப்போய் லெட்டர் எழுதிட்டா... இனிமே நீங்க எங்க கூடவே இருக்கலாம்பா’’ என்று நெகிழ்ந்தான் திவாகர்.
உத்தமபுத்திரன்