13வது காதலரும் 4வது காதலியும்!
டெய்லர் ஸ்விஃப்டுக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. தனது பதிமூன்றாவது காதலரான ட்ராவிஸ் கெல்ஸைக் கரம்பிடிக்க உள்ளார். இது அதிகாரபூர்வ எண்ணிக்கை மட்டுமே. பொது வெளிச்சத்துக்கு வராத தற்காலிக பாய்ஃபிரெண்ட்ஸ் குறித்துத் தெரியவில்லை. ட்ராவிஸ் கெல்ஸுக்கு டெய்லர் ஸ்விஃப்ட் நான்காவது காதலி. அதிக எண்ணிக்கையிலான அஃபீஷியல் முன்னாள் காதலர்களைக் கொண்டவர்களில் முதலிடத்தில் இருப்பவர் ‘சார்லீஸ் ஏஞ்சல்ஸ்’ புகழ் ட்ரூ பேரிமோர் (Drew Barrymore). மொத்தம் முப்பது பேர். நடிகர் டிகாப்ரியோ முதலிடத்தில் இருக்கக்கூடும் என நினைத்தால் அவருக்கு 28 முன்னாள் காதலிகள்தான். ஆக இரண்டு லீடிங்கில் நடிகை பேரிமோர் முந்துகிறார். கடும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிப்பது நடிகை நடாலி போர்ட்மேனுக்கு பன்னிரண்டு காதலர்கள் இருந்தனர் என்பதுதான். அவரைப் பற்றி ஒழுக்கவாதி எனும் பிம்பமே இருக்கிறது. எந்தக் கிசுகிசுவிலும் அனாவசியமாகச் சிக்காதவர், யூத மதநெறிகளைத் தவறாமல் கடைப்பிடிப்பவர் போன்ற காரணங்களால் அப்படியொரு எண்ணம் பொதுவில் இருக்கிறது.இதைப் பொய்ப்பித்து காதலர் எண்ணிக்கையில் டெய்லர் ஸ்விஃப்டைச் சமன் செய்திருக்கிறார்.
ஆனாலும், சமகால இளம் நடிகைளில் டேட்டிங் ரேஸில் முன்னணியில் இருக்கிறவர் எம்மா வாட்சன்தான். இதுவரை பதினெட்டு பேர். இது ஏதோ புகழ்பெற்ற ஆள்களுக்கு மட்டுமே அமைகிற டேட்டிங் வாய்ப்புகள் அல்ல. மேற்குலகின் சராசரி ஆள்கள் இதில் கால்வாசியையாவது அனுபவித்திருப்பார்கள். இந்தியர்களாகிய நாம் எப்போது முன்னேறப் போகிறோமோ தெரியவில்லை!
அண்மையில் டெய்லர் ஸ்விஃப்ட் குறித்து ராப் பாடகர் கன்யே வெஸ்ட் வெளியிட்டிருந்த வாட்ஸ்அப் ஸ்க்ரீன்ஷாட்டுகள் சர்ச்சையைக் கிளப்பியிருந்தன. தனது முன்னாள் காதலர்களுள் ஒருவரான ஹாரி ஸ்டைல்ஸுடனும் ஜஸ்டின் பைபருடனும் ஒரேநேரத்தில் ஒரே படுக்கையில் ஸ்விஃப்ட் உறவில் ஈடுபட்டார் என்பதே அக்குற்றச்சாட்டு.
இதைக் கேட்டு கொதித்த தற்போதைய காதலரான ட்ராவிஸ் கெல்ஸ், கன்யே வெஸ்டுடன் ‘ஒத்தைக்கு ஒத்தை’ சண்டை போடப் போவதாகச் செய்திகள் வெளியாகின. ஐரோப்பிய நாவல்களிலும் வன்மேற்குப் படங்களிலும் மட்டுமே படித்திருந்த / கண்டிருந்த இரட்டையர் தனிச்சண்டையைப் (duel) பார்த்துவிடலாம் என உலகம் ஆவலாகக் காத்திருந்தது. ஆனால், அதற்குள் கன்யே வெஸ்ட் மீது மான நஷ்ட வழக்கு போட்டு பிரச்னையைச் சப்பையாக முடித்துவிட்டார்கள்!நிச்சயத்தின்போது வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க கார்ட்டியர் கைக்கடிகாரத்தை டெய்லர் ஸ்விஃப்ட் அணிந்திருந்தார். விலை நம் இந்திய மதிப்பில் முப்பது லட்சம் ரூபாய் இருக்கலாம். அவரது சொத்து மதிப்புடன் ஒப்பிடுகையில் இது எளிமையான அலங்காரமே. A simple girl! இணையருக்கு வாழ்த்துகள்.
கோகுல் பிரசாத்
|