மறைமுக யுத்தத்தில் சாதாரண மனிதரையும் ஓர் ஆயுதமாக பயன்படுத்துகிறதா IOT..?
பேஜர்... வாக்கி டாக்கி... அடுத்து..?
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முடியும். லேட்டஸ்ட் உதாரணம் சில நாட்களுக்கு முன் லெபனான் நாட்டில் நடந்த சம்பவங்கள்.ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இச்சம்பவம் நடந்த மறுநாள் அதே அமைப்பினர் பயன்படுத்திய வாக்கி டாக்கி வெடித்தது. இவ்விரு சம்பவங்களால் ஆயிரக்கணக்கானவர்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். அவர்களது உடல் உறுப்புகள் சிதறின. பலி நூற்றுக்கணக்கில்.
இதனைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் நாடுகளுக்கு இடையிலான போர் இப்படித்தான் நிகழும்... ஏகே 47, பீரங்கி, டாங்கி, ராக்கெட் லவுன்சர்... இத்யாதி, இத்யாதி ஆயுதங்களை எல்லாம் இனி பயன்படுத்த மாட்டார்கள்... ஏனெனில் இவை நேரடி போருக்கான வெப்பன்ஸ். ‘இந்த’ நாடுதான் போர் தொடுக்கிறது என்பதை பிறந்த குழந்தைக்கும் அறிவிக்கும் ஆதாரங்கள் இவை... இதற்கு மாறாக ‘யார்’ தாக்குதல் நடத்துகிறார்கள்... ‘யார்’ யுத்தம் செய்கிறார்கள்... என ‘பெரியவர்களாலும்’ கண்டுபிடிக்க முடியாத - எவ்வித ஆதாரங்களும் கிடைக்காத - மறைமுக போர்களே இனி நிகழும்...
அதற்கான ஆரம்பம்தான் லெபனான் நாட்டிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜரும், வாக்கி டாக்கியும் வெடித்துச் சிதறிய நிகழ்வு என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். காதில் பூ சுற்றவில்லை. இக்கூற்று உண்மைதான். ஏனெனில் பேஜரும் வாக்கி டாக்கியும் ‘தானாக’ வெடிக்கவில்லை; வெடிக்க வைக்கப்பட்டன! வெடிக்க வைத்தது யார் என்று இன்னும் தெரியவில்லை. இஸ்ரேலாக இருக்கலாம் என்ற யூகம் உலவுகிறது.
எப்படி இது சாத்தியம்?
இங்குதான் IOT ‘உள்ளேன் ஐயா’ என அட்டெண்டன்ஸ் போடுகிறது.IOT? இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் என்பதன் சுருக்கம்.பேஜர், வாக்கி டாக்கி வெடித்தது உள்ளங்கால் என்றால் IOT மொட்டைத் தலை - அதாவது உச்சந்தலை.விரிவாகவே பார்க்கலாம்.
10 நிமிடங்களில் அலுவலகத்தில் இருந்து கிளம்ப வேண்டும். எனவே நாற்காலியில் அமர்ந்தபடியே பார்க்கிங்கில் இருக்கும் உங்கள் காருக்குள் இருக்கும் ஏசி ஸ்விட்சை உங்கள் செல்போன் வழியே ஆன் செய்கிறீர்கள். வேலை நேரம் முடிந்து பார்க்கிங் வருகிறீர்கள். செல்போன் வழியே கார் லாக்கை ரிலீஸ் செய்கிறீர்கள். ஏறி அமர்கிறீர்கள். ஸ்டார்ட் செய்கிறீர்கள். சாலையில் பயணிக்கிறீர்கள். வீடு சென்றதும் அலுப்புத் தீர குளிக்க வேண்டும். பயண நேரம் 30 நிமிடங்கள். 20வது நிமிடத்தில் செல்போன் வழியே வீட்டுக் குளியலறையில் இருக்கும் ஹீட்டரை ஆன் செய்கிறீர்கள். சிக்னலில் கார் நிற்கிறது. வீட்டு ஃபிரிட்ஜில் பால் பாக்கெட் இருக்கிறதா? செல்போனில் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும் வீட்டு ஃபிரிட்ஜ் இல்லை என உதட்டைப் பிதுக்குகிறது. ‘ஆர்டர் செய்’ என ஃபிரிட்ஜுக்கு கமெண்ட் கொடுத்துவிட்டு செல்போனை சீட்டில் வைக்கிறீர்கள்.
சிக்னல் விழுகிறது. வீட்டை நோக்கி பயணிக்கிறீர்கள்.வீடு வருவதற்குள் அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு உங்கள் வீட்டு ஃபிரிட்ஜே ‘பால் பாக்கெட்’ வேண்டும் என ஆர்டர் செய்து விடுகிறது.வீட்டை நெருங்கவும் பால் பாக்கெட் டெலிவரி ஆகவும் சரியாக இருக்கிறது.மூடிய வீட்டு கேட்டை செல்போன் வழியே திறந்து நுழைகிறீர்கள்.
வீட்டுக்குள் வந்ததும் ஆட்டோமெடிக்காக வாசல் கேட் மூடி லாக் ஆகிறது.பால் பாக்கெட்டை ஃபிரிட்ஜில் வைக்கிறீர்கள். மைக்ரோ அவனை ஆன் செய்து தேவையான டிபன் / ஸ்நாக்ஸை சூடு படுத்துகிறீர்கள். செல்போன் வழியே தேவையான சூடு வந்ததும் மைக்ரோ அவன் ஆஃப் ஆகும்படி கட்டளையை பதித்து விட்டு குளிக்கச் செல்கிறீர்கள். ஹீட்டர் தன் கடமையை நிறைவேற்றியிருக்கவே குளித்துவிட்டு வருகிறீர்கள். டிபன் / ஸ்நாக்ஸ் ரெடி. சோஃபாவில் அமர்கிறீர்கள். செல்போன் வழியே டிவியை ஆன் செய்து நியூஸ் / ஓடிடி சேனல்ஸ் / சாங்ஸ்... என விருப்பமானதைப் பார்க்கிறீர்கள்.இவை அனைத்தும் தம்மாத்துண்டு செல்போன் வழியே செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.அனைத்தும்... சகலமும்... வயர்லெஸ் கனெக்டட். எனவே சின்ன மொபைல் உங்கள் மொத்த வாழ்க்கையும் பிசிறின்றி நகர உதவுகிறது.
இப்படி வயர்லெஸ் கனெக்டட் ஆக எல்லா பொருட்களையும் - ஃபிரிட்ஜ், வாட்டர் ஹீட்டர், மைக்ரோ அவன் முதல் சோலார் பவர் வரை - ஒரு புள்ளியில் குவிக்க முடியும்; இணைக்க முடியும். அப்புள்ளிதான் கையடக்க செல்போன்.
இதைப் பயன்படுத்துபவர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சிலபல இடையூறுகளை சந்திக்கலாம்... அல்லது தங்கள் கட்டளையை இன்னும் மேம்படுத்த நினைக்கலாம்... அல்லது அரைமணி நேரத்தில் நடக்கும் வேலை, கால் மணி நேரத்தில் முடிந்தால் நன்றாக இருக்கும் என யோசிக்கலாம். இவை அனைத்தையும் மென்பொருள் நிறுவனத்திடம் சொல்லி மாற்றங்களைச் செய்து தரும்படி கேட்டுக் கொள்ளலாம். இதற்காகவே வயர்லெஸ் கனெக்டட் அப்கிரேட் ஆகியபடியே இருக்கும். இதற்காகவே பல லட்சங்களில் சம்பளம் வாங்கும் லட்சிய மகானுபாவர்களான மென்பொருள் வல்லுனர்கள் தங்கள் சோடா புட்டி கண்ணாடியைத் துடைத்தபடி ப்ரோக்ராம்ஸை எழுதியபடியே இருக்கிறார்கள். உடனே... பணக்காரர்கள் தங்கள் வீட்டையே வயர்லெஸ் கனெக்டட் ஆக வைத்திருக்கலாம்... நாங்கள் அன்றாடங் காய்ச்சி. சில ஆயிரங்களில் சம்பளம் வாங்குபவர்கள். இதற்காக நாக்குத் தள்ள நாள் முழுக்க வேலை பார்ப்பவர்கள்... எங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லையே...இப்படிச் சொல்லிவிட்டு நடையைக் கட்ட முடியாது.
ரூ.10 ஆயிரம் அல்ல... ரூ.5 ஆயிரம் மாதச் சம்பளம் வாங்குபவராக நீங்கள் இருந்தாலும் உங்களிடம் செல்போன் இருக்கிறதல்லவா..? அதுவும் ஆண்ட்ராய்ட் போன்... அது போதும். மாதத்துக்கு ஒருமுறையாவது நீங்கள் பயன்படுத்தும் செல்போன் அப்கிரேட் ஆகிக் கொண்டே இருக்கிறது. நம்மையும் மீறி நாம் பயன்படுத்தும் செல்போனில் சேகரமாகும் குக்கீஸை வெளியேற்றிக் கொண்டே இருக்கிறது.
இவை எல்லாம் எப்படி சாத்தியமாகின்றன?
கண்காணா இடங்களில் அமர்ந்தபடி மென்பொருளை எழுதிக் கொண்டிருக்கும் வல்லுனர்களால். அவர்கள் அப்டேட் செய்யும் பரோக்ராம் எங்கோ இருக்கும் - நாம் பயன்படுத்தும் செல்போனை வந்தடைகிறது.மென்பொருள் வல்லுனர்(கள்) யார் என்று நமக்குத் தெரியாது; நாம் யார் என்பதும் மென்பொருள் வல்லுன(ர்களுக்கு)ருக்கு தெரியாது. ஆனால், நமது செல்போன் என்ன டிவைஸ் என்பது அந்த மென்பொருள் வல்லுனருக்குத் தெரியும். அதை மேம்படுத்துகிறார்.
ஆபத்து இங்குதான் ஆரம்பமாகிறது. நாம் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறோம். நமது போட்டி நிறுவனம், நம் நிறுவனத்தை அழிக்க நினைக்கிறது. உடனே மென்பொருள் வல்லுனரை ரகசியமாக பணியில் அமர்த்தி நாம் பணிபுரியும் நிறுவனத்தின் எம்டி முதல் செக்யூரிட்டி வரை அனைவரது செல்போன் நம்பரையும் கொடுத்துவிட்டு ‘ப்ரொசீட்’ என்கிறது.
வாங்கிய கூலிக்கு விசுவாசமாக அந்த மென்பொருள் வல்லுனர் அனைத்து ‘நம்பருக்கும்’ ஒரு ப்ரோக்ராமை எழுதி அனுப்புகிறார்.அந்த ப்ரோக்ராம் நம் செல்போனில் அப்டேட் ஆனதும் ‘தன்’ வேலையைக் காட்டத் தொடங்கி என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்து முடித்துவிடும். செல்போனே இப்படி என்றால் அலுவலக சிஸ்டம்ஸ்? கம்ப்யூட்டர்ஸ்?
சுலபமாக செயலிழக்க வைக்க முடியும். யெஸ். இப்படித்தான் அலுவலக / நிறுவன / துறை சார்ந்த சிஸ்டம்ஸ் அனைத்தும் க்ராஷ் ஆகின்றன. வேலைகள் ஸ்தம்பிக்கின்றன. ப்ரொடக்ஷன் பாதிக்கின்றன.
ஒரு சில ஆண்டுகளாகவே உலக நாடுகள் பலவற்றில் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஷேர்ஸ் சரிந்து பங்கு மார்க்கெட்டில் அடிவாங்கி நிறுவனங்கள் காணாமலேயே போயிருக்கின்றன.இந்தப் போக்கின் ‘அப்டேட்டட் வெர்ஷன்’தான் இப்பொழுது நாடுகளுக்கு இடையே ஆரம்பித்திருக்கும் மறைமுக போர்.
லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் இந்த இன்டர்நெட் ஆஃப் திங்ஸின் ஆபத்தைத்தான் சுட்டிக் காட்டுகிறது.
அனைத்து எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் செயல்பாட்டையும் ஒரே இடத்தில் - ஒரே கருவியில் - ஒரே புள்ளியில் குவித்து வைத்திருக்கிறோம். எனவே, அமெரிக்கா, சீனா... ஏன் இந்தியாவில் கூட யாரை அல்லது எதை வேண்டுமானாலும் வீழ்த்த / நொறுக்க முடியும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செயல்படும் ஏதேனும் ஒரு துறையை முற்றிலும் ஒடுக்க முடியும்; சிதைக்க முடியும்; அத்துறை சார்ந்த டேட்டாஸை அழிக்க முடியும்.
அவ்வளவு ஏன்... உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் முதல் தலைவர்கள் வரை ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரது செல்போன் நம்பர்களையும் ஒரேநேரத்தில் ‘அப்டேட்’ செய்யலாம். யார் Callஐ அட்டெண்ட் செய்தாலும் 30 செகண்டில் அவர்கள் பயன்படுத்தும் செல்போன் சூடாகி வெடிக்கும்படி பரோக்ராம் செய்யலாம். நடக்கும் என்று சொல்லவில்லை; நடக்காது என்றும் உத்தரவாதம் வழங்கவில்லை. நீங்கள் ‘தீவிரவாத’, ‘பயங்கரவாத’ அமைப்பில் இருக்க வேண்டும் என்பதில்லை... சாமான்ய மனிதராக வாழ்ந்தாலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு IOTஇல் இருந்து தள்ளி இருங்கள். கேட்ஜெட்ஸை தவிருங்கள். மேனுவல் ஒர்க் உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் நல்லது. மன அழுத்தத்தை ஏற்படுத்தும் யூடியூபர்ஸ் தொல்லையில் இருந்தும் தப்பிக்கவாவது இதைக் கடைப்பிடிப்போம்.
ஹிஸ்புல்லா
மத்திய கிழக்காசிய நாடான லெபனானைச் சேர்ந்தது ஹிஸ்புல்லா அமைப்பு. ஹிஸ்புல்லா என்பதற்கு ‘கடவுளின் கட்சி’ என்று பொருள். இது ஒரு ஷியா முஸ்லீம் அமைப்பு. முன்னதாக, தெற்கு லெபனானில் இருந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பை 2000ம் ஆண்டு ஹிஸ்புல்லா வெற்றிகரமாகப் போராடி அகற்றியது குறிப்பிடத்தக்கது.கடந்த ஆண்டு (2023) அக்டோபர் மாதம் தொடங்கிய பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர்தான் தற்போது நடந்துகொண்டிருக்கும் இஸ்ரேல் - லெபனான் தாக்குதலுக்கு அடிப்படை.
பாலஸ்தீனத்திற்கு லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ராக்கெட் குண்டுகள், ஏவுகணைத் தாக்குதல்கள் உள்ளிட்ட வான்வெளித் தாக்குதல்களை ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது நடத்தி வருகிறது. இதற்குப் பதிலடியாக லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில்தான் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் வெடிக்கும் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
உளவு
உளவுக்கு இலக்காகும் பொருட்களில் நாம் பயன்படுத்தும் நவீன ஆண்ட்ராய்டு போன்களும் அடக்கம். எனவே இஸ்ரேலை எதிர்த்து போராடும் குழுக்கள் தமக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்திற்கு இத்தகைய ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்துவதில்லை. அதற்கு பதிலாக, பழைய தொழில் நுட்பமான பேஜர், வாக்கி டாக்கி போன்றவற்றையே பயன்படுத்தினர். ஆனால், பழைய தொழில்நுட்பத்தையும் ‘ரகசியமாக’ மேம்படுத்தும் மென்பொருள் வல்லுனர்கள் இருப்பது இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கே.என்.சிவராமன்
|