யார் இந்த அதிஷி..?



ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் தில்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து எட்டாவது புதிய முதல்வராக பதவியேற்றுள்ளார் அதிஷி.
சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித் ஆகியோருக்குப் பிறகு தில்லியின் மூன்றாவது பெண் முதல்வர் அதிஷி. அதுமட்டுமல்ல; 43 வயதான அதிஷி இந்தியாவின் இளம் முதல்வர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். தில்லி முதல்வராக பதவி வகித்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மதுபானக் கொள்கை வழக்கில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவாலை பிறகு சிபிஐயும் கைது செய்தது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் அளிக்க மனுத் தாக்கல் செய்தார். அவருக்கு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம். இதனால், அவர் தில்லி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.இதனையடுத்தே கல்வி, பொதுப் பணி, கலாசாரம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்த அதிஷி தில்லி முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
யார் இந்த அதிஷி..?

தில்லியில் பிறந்து வளர்ந்தவர் அதிஷி. பஞ்சாபி ராஜ்புத் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் முழுப் பெயர் அதிஷி மர்லினா சிங். தந்தை விஜய் சிங், தாய் திரிப்தா வாஹி இருவரும் தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர்கள். மார்க்சிய சிந்தனை கொண்டவர்கள். இதனால்தான் தங்களுடைய குழந்தை அதிஷிக்கு மார்க்ஸ் (Marx), லெனின் (Lenin) இருவரின் பெயரிலுள்ள முதல் மூன்று எழுத்துகளை இணைத்து மர்லினா (Marlena) எனச் சேர்த்து பெயரிட்டுள்ளனர்.

அதிஷியும் ஆரம்ப நாட்களில் இடதுசாரிக் கொள்கையின் ஆதரவாளராகவே வளர்ந்தார். தில்லியிலுள்ள ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார். பின்னர் செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் வரலாறு பாடத்தில் பட்டம் பெற்றார். தொடர்ந்து லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 2003ம் ஆண்டு செவனிங் ஸ்காலர்ஷிப்பில் மாஸ்டர் டிகிரி முடித்தார்.

பிறகு, ஆக்ஸ்போர்டின் அங்கமான மெக்தலீன் கல்லூரியில் ரோட்ஸ் ஸ்காலர்ஷிப்பில் பயின்றார். அங்கிருந்து இந்தியா திரும்பியவர், கல்வி மற்றும் கொள்கை உருவாக்கத்தில் அதிக ஆர்வமுடன் இருந்துள்ளார். கர்நாடகாவிலுள்ள ரிஷி வேலி பள்ளியில் சில ஆண்டு காலம் ஆசிரியராக இருந்தார். பின்னர், போபால் அருகே சிறிய கிராமத்திற்குச் சென்றார். அங்கே இயற்கை விவசாயம், கல்விக்கான முன்னேற்ற செயல்பாடுகளை வகுத்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்தார்.

இதற்கிடையே 2006ம் ஆண்டு பஞ்சாபி ராஜ்புத் குடும்பத்தைச் சேர்ந்த பிரவீன் சிங் என்பவரை மணந்தார் அதிஷி. பிரவீன், தில்லி, மற்றும் அகமதாபாத் ஐஐடியில் பயின்றவர். தொடர்ந்து கார்ப்பரேட் செக்டரில் எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள கன்சல்டன்சி நிறுவனங்களிலும் வேலை செய்தார். பின்னர் இமாச்சல் பிரதேசத்திலுள்ள சம்பாவ்னா இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் பாலிசி அண்ட் பாலிடிக்ஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் மற்றும் கல்வியாளராக இருந்தார்.

இதன்பிறகு அவர் சமூக சேவைக்குள் வந்துவிட்டார். ஆனால், பொதுவெளியில் அவர் வருவதேயில்லை. இதற்கிடையே, கொள்கை உருவாக்க செயல்பாடுகளில் ஆர்வமுள்ள அதிஷி பல லாப நோக்கமற்ற நிறுவனங்கள் மற்றும் கூட்டமைப்புகளில் பணியாற்றினார்.அப்படியாகவே அவரும் கணவர் இருந்த இமாச்சல் பிரதேசத்திலுள்ள சம்பாவ்னா இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் பாலிசியில் பணியாற்றினார். அங்கே ஆம் ஆத்மி நிறுவனர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷனை சந்தித்தார்.

தொடர்ந்து அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை வெளியிலிருந்து கவனித்து வந்தார். பின்னர் ஆம் ஆத்மி உறுப்பினர்களைச் சந்தித்தவர், அவர்கள் வழியாக 2013ம் ஆண்டு கட்சிக்குள் நுழைந்து கொள்கை உருவாக்கத்தில் பங்கெடுத்தார். அதிஷியும் இன்னும் சிலரும் இணைந்து ஆம் ஆத்மியின் கொள்கைகளை வகுத்தனர். பொருளாதாரம், சமூகம், தொழில் மற்றும் நலன்கள் சார்ந்த 31 கொள்கைக் குழுக்களை அவர்கள் உருவாக்கினர்.

இந்தக் குழுக்களில் பல்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள் பொறுப்பில் அமர்த்தப்பட்டனர். குறிப்பாக திங் டேங்க் எனப்படும் சிந்தனைக் குழுவினைச் சேர்ந்தவர்களும், கல்வியாளர்களும் அதில் இடம்பெற்றனர். 

பின்னர் 2015ம் ஆண்டு முதல் 2018 வரை தில்லி துணை முதல்வராகவும் ஆம் ஆத்மி தலைவராகவும் இருந்த மணிஷ் சிசோடியாவின் அட்வைஸராகப் பணியாற்றினார். 2015ம் ஆண்டு தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கை உருவாக்கத்திலும் பங்களித்தார். இது அவரை தீவிர அரசியல் களத்திற்குள் இறங்க தயார்படுத்தியது.

இதற்கிடையே 2015ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள காந்த்வா மாவட்டத்தில் நடந்த ஜல் சத்யாக்கிரகப் போராட்டத்திலும் பங்கெடுத்தார். இது நர்மதா பச்சாவ் அந்தோலன் இயக்கத்தின் ஒரு பகுதி போராட்டமாகும். இந்த வரலாற்றுப் போராட்டத்தில் அதிஷி ஈடுபட்டது அவரை நிறைய கவனிக்க வைத்தது.

தொடர்ந்து 2019ம் ஆண்டு கிழக்கு தில்லியின் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அப்போது முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய இந்திய அணியின் பயிற்சியாளருமான பாஜவைச் சேர்ந்த கவுதம் கம்பீரிடம் 4.77 லட்ச வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி மூன்றாம் இடமே பிடித்தார்.

இதற்கிடையே 2018ம் ஆண்டு தன்னுடன் இணைந்திருந்த மர்லினா பெயரை நீக்கினார். காரணம், அதிஷி வெளிநாட்டுக்காரர், கிறிஸ்தவர் என்ற வதந்திகளைப் பரப்பி அவருக்கு எதிராக பாஜவினர் பிரசாரம் செய்வதாக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் சிலர் தெரிவித்துள்ளனர். இதனால் மர்லினா உள்பட குடும்பப் பெயரை நீக்கிவிட்டு அதிஷியை மட்டும் பயன்படுத்தத் தொடங்கினார்.

தொடர்ந்து 2020ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தெற்கு தில்லியின் கல்காஜி தொகுதியில் போட்டியிட்டார். இதில் பாஜக வேட்பாளர் தரம்பீர் சிங்கை 11,422 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எம்எல்ஏ ஆனார் அதிஷி. இதன்பிறகு தில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும், சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும் ராஜினாமா செய்ய அப்போது அதிஷி, சௌரப் பரத்வாஜுடன் இணைந்து தில்லி கேபினட் அமைச்சராகப் பதவியேற்றார்.

அவர் வசம் கல்வி, பொதுப்பணி, கலாசாரம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகள் வந்தன. அமைச்சரானதும் தில்லி அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைத்தல், தனியார் பள்ளிகளின் தன்னிச்சையான கட்டண உயர்வைக் கட்டுப்படுத்தல் போன்ற அவரின் முயற்சிகளுக்குப் பெரும் ஆதரவு கிடைத்தது.

மாணவர்களின் ஒட்டுமொத்த நலனையும் கருத்தில்கொண்டு புதுமையான ‘மகிழ்ச்சி’ பாடத்திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். இந்த மாற்றங்கள் எல்லாம் அவருக்கு நிறைய புகழைப் பெற்றுத் தந்தது.  இந்நிலையில்தான் அரவிந்த கெஜ்ரிவால் ராஜினாமா செய்ய ஒருமனதாக தில்லியின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுள்ளார் அதிஷி.

தற்போது கொல்கத்தாவின் மம்தா பானர்ஜிக்குப் பிறகு இந்தியாவில் பெண் முதல்வராக இருக்கும் இரண்டாவது பெண் அதிஷி என்பது குறிப்பிடத்தக்கது.  அடுத்த ஆண்டு தில்லி சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடக்கவுள்ளது. அதனால், அதிஷி குறுகிய காலமே முதல்வராக இருப்பார். என்றாலும், முதல்வராகத் தன் கடமைகளைத் திறம்படச் செய்வார் என்கின்றன தகவல்கள்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக அதிஷி திரும்புவாரா..?

இந்த வினாதான் இந்திய ஊடக, அரசியல்வாதிகள் மத்தியில் அலசப்படுகின்றன. காரணம், கடந்த கால நிகழ்வுகள்தான்.சந்தர்ப்ப சூழல் காரணமாக முதலமைச்சர் பதவியில் இருக்கும் ஒரு தலைவர் பதவி விலக நேரலாம்; அந்தப் பதவிக்கு தனக்கு மாற்றாக ஒருவரை நியமிக்கலாம்; நியமிக்கவும் வேண்டும்.அப்படியான நிலையில் சூழல்கள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். இதற்கு சமீபத்திய வரலாறே உதாரணங்களாகத் திகழ்கின்றன. ஏனெனில் மிகப் பெரிய அதிகாரமிக்க அந்தப் பதவியின் - முதல்வர் நாற்காலி - சுகம் ஒருவரை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும்.

அதனால்தான் அந்த ரிஸ்க் எடுக்க விரும்பாத லாலுபிரசாத் யாதவ் தன் மனைவி ராப்ரி தேவியையே, தான் சிறைக்குச் செல்லும்போது முதல்வராக்கினார்.ஆனால், ஜனதா தளத் தலைவரான நிதிஷ் குமாரோ, தான் பதவி விலக நேர்ந்தபோது, தன் கட்சியில் உள்ள பட்டியலினத்தைச் சேர்ந்த ஜீதன்ராம் மஞ்சியை தன் இடத்தில் வைத்துச் சென்றார். 

பீகாரின் முதல்வராக்கினார்.ஜீதன்ராம் மஞ்சி 278 நாட்கள் முதல்வராகப் பதவி வகித்தார். நிதிஷ் திரும்ப வந்து மீண்டும் முதல்வரான போது ஜீதன்ராம் மஞ்சி நிதிஷுக்கு எதிரானவராக மாறி, பாஜகவின் கைப்பாவையாகி கட்சியைப் பிளந்தார்.

இதே நிைலமைதான் சமீபத்தில் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் நடந்தது. தான் சிறை சென்ற காலத்தில் அவர் சம்பை சோரனை முதல்வராக்கிவிட்டுச் சென்றார். சிறையில் இருந்து வந்து மீண்டும் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்றபோது சம்பை சோரன் எதிரியாகிவிட்டார். பாஜக அவரைக் கையில் எடுத்துக் கொண்டது.தற்போது அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்த ரிஸ்க்கை எடுத்துள்ளார். 

‘‘நான் மக்கள் நல ஆட்சியைக் கொடுத்தவன். அதனால்தான் என்னை மக்கள் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கின்றனர். நேர்மையாளனான என்னை பாஜக ஊழல் முத்திரை குத்தி கறைபடிந்தவனாக காட்டப் பார்க்கிறது. ஆகவே, மீண்டும் தேர்தலில் நின்று மக்கள் என்னை குற்றமற்றவன் என தேர்ந்தெடுத்த பிறகே முதல்வராகப் பதவி ஏற்பேன்...’’ எனக் கூறியுள்ளார் கெஜ்ரிவால்.

அவருடைய முதல்வர் தேர்வான அதிஷி ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டியில் படித்தவர். அறிவாளி எனப் பெயர் பெற்றவர். பொதுவாக அரசியல் தலைவர்கள் அறிவாளிகளை சற்று விலக்கியே வைப்பார்கள். விசுவாசிகளை மட்டுமே நெருக்கமாக வைத்துக் கொள்வார்கள்.

ஆம் ஆத்மியை எப்படியாவது அழித்திடவும், பிளந்திடவும் நாளொரு மேனியும்ப் பொழுதொரு வண்ணமுமாகச் செயல்படும் பாஜக என்ன சதித்திட்டம் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

மொத்தத்தில் அதிஷியை வைத்து ஆம் ஆத்மி கட்சியை பாஜக பிளக்குமா... இந்த சதிக்கு அதிஷி உடந்தையாக இருப்பாரா அல்லது அரவிந்த் கெஜ்ரிவாலின் நம்பிக்கைக்கு உரியவராகவே இருப்பாரா?போகப் போகத் தெரியும். லெட்ஸ் வெயிட் அண்ட் ஸீ!

பேராச்சி கண்ணன்