சீசா விளையாடும்போது பேலன்ஸ் வேணும்... கதையும் அப்படியானதுதான்!
கோலிவுட் முதல் பாலிவுட் வரை கொண்டாடப்படும் ஒளிப்பதிவாளர் நட்ராஜ். ஒளிப்பதிவாளராக பல படங்களில் தன் ஆளுமையை வெளிப்படுத்தியவர். ‘சதுரங்கவேட்டை’, ‘கர்ணன்’ போன்ற படங்கள் வழியாக ஆகச் சிறந்த நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தியவர் கேமரா மறந்துபோகுமளவுக்கு நடிகராக செம பிஸி. இவருடைய யதார்த்தமான நடிப்பு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, இயக்குநர்களுக்கும் பிடித்துப்போனதால் தொடர்ந்து இவருடன் படம் செய்கிறார்கள்.
அந்த வரிசையில் நட்டி கதையின் நாயகனாக நடித்து வெளிவரவுள்ளது ‘சீசா’. இந்தப் படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமாகிறார் குணா சுப்ரமணியம். இவர் சினிமா ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்துப் பார்த்து சினிமாவைக் கற்றுக் கொண்டவராம். இறுதிக் கட்ட வேலையில் பிசியாக இருந்த இயக்குநரிடம் பேசினோம்.
எந்த அர்த்தத்துல இப்படியொரு டைட்டில் செலக்ட் பண்ணினீங்க?
டுவிஸ்ட்டட் பேலன்ஸ்தான் லைஃப். பூங்காவில் சின்னப் பசங்க விளையாடும் சாதனங்களில் ஒன்று சீசா. அதுல விளையாடணும்னா பேலன்ஸ் கரெக்ட்டா இருக்கணும். ஒரு பக்கம் எடை அதிகமா இருந்தா இன்னொரு பக்கம் இறங்க ஆரம்பிச்சுடும். வாழ்க்கையும் அந்தமாதிரிதான். ஒரு பக்கம் கனம் அதிகமாச்சுன்னா இன்னொரு பக்கம் கீழே இறங்க ஆரம்பிச்சுடும்.கிராம வழக்கத்துல கண்ணாடிக்கு இன்னொரு பேர் சீசா. கண்ணாடியை சரியா ஹேண்டில் பண்ணவில்லை என்றால் உடைஞ்சுடும்ன்னு நமக்கு தெரியும். அந்த அர்த்தத்திலும் வாழ்க்கையை எடுத்துகொள்ளலாம். இது மனச்சிதைவால் பாதிக்கப்பட்ட ஓர் இளைஞனின் கதை. அதை க்ரைம் த்ரில்லரா சொல்ல டிரை பண்ணியிருக்கிறோம். அதுல லவ், ஃபேமிலி, சென்டிமென்ட், நட்பு என எல்லாம் இருக்கும்.மனச்சிதைவு பிரச்னை எல்லோருக்கும் இருக்கும். அது அளவு மீறும்போது நோயா மாறுது. அதாவது கோபமும், சாந்தமும் எல்லை மீறும்போது அந்த பிரச்னை எட்டிப்பார்க்கும். அப்படி நம் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட கதைக்கருவை வெகுஜனங்கள் ரசிக்கும்படியான திரைக்கதையில் சொல்லியுள்ளோம்.
போலீஸ் கேரக்டரில் நட்டி நடிப்பது புதுசு கிடையாதே?
போலீஸ் கேரக்டரில் புது டைமன்ஷன் இருந்ததாலதான் நட்டி சார் கதையைக் கேட்டதும் ஓகே சொல்லிட்டார். ஆனால், அவரால கால்ஷீட் ஒதுக்க முடியாதளவுக்கு பிசியா இருந்தார். சாரை எப்படியும் படத்துக்குள்ள கொண்டுவரணும்னு எங்கள் பிஆர்ஓ கார்த்திக் முயற்சி செய்தார்.வழக்கமா நட்டி சார் அதிகமா, வேகமா பேசற மாதிரியான படங்கள் நிறைய பார்த்திருப்போம். அவரும் எவ்வளவு நீளமான டயலாக் கொடுத்தாலும் அதை பிசிறு தட்டாம பேசக்கூடியளவுக்கு டேலன்ட் உள்ளவர்.
இதுல அவருக்கு போலீஸ் கேரக்டர் என்றாலும் அடக்கி வாசிச்ச மாதிரி இருக்கும். டயலாக் ரொம்ப குறைவு. அதுதான் அவர் ஏற்றுள்ள முகிலன் கதாபாத்திரத்தோட ஸ்பெஷல்னு சொல்லலாம்.நட்டி சாருடன் வேலை செய்யப் போறோம்ன்னு இயல்பாவே உள்ளுக்குள் டென்ஷன் பரவுச்சு. ஆரம்பத்துல பட்ஜெட்டுக்கு ஏத்தமாதிரி ஒரு ஹீரோவை வெச்சு ஷூட் போலாம்ன்னு நினைச்சோம். சாரை அப்ரோச் பண்ணும்போது அவருக்கு கதை பிடிச்சதால ஓகே சொன்னார்.
அவர் கமிட்டானதும், நட்டி சார் பெரிய கேமராமேன், எல்லாத்தையும் நுட்பமா கவனிப்பார், பெரிய ஹோட்டல், கேரவன் என பட்ஜெட்டும் எகிறும்னு பலவிதமா பேச ஆரம்பிச்சாங்க.ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்ல என் காதுக்கு வந்த விஷயங்களுக்கு நேர் எதிராக இருந்துச்சு. லொகேஷன்ல டைரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா மட்டுமே நட்டி சார் நடந்துகொண்டார். உட்கார ஒரு சேர் கொடுத்தா போதும் மர நிழலில் செல்ஃபோனில் எதையாவது படிச்சுட்டிருப்பார்.
அப்படி எனக்குள் இருந்த பயத்தை நீக்கி, எந்த சிரமமும் இல்லாம கூலா அழைச்சுட்டு போய் படத்தை முடிக்கவெச்சார்.இன்னொரு ஹீரோவா நிசாந்த் ரூசோ நடிக்கிறார். ‘பன்றிக்கு நன்றி சொல்லி’, ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ போன்ற படங்களில் ஹீரோவாக நடிச்சவர். உடல் பலம், மன பலம் தேவைப்படும் கேரக்டர் அது. படம் வந்தபிறகு ரூசோவின் திறமை பேசப்படும். கேரக்டருக்காக நிறைய ஹோம் ஒர்க் பண்ணினார். நிறைய ரிஸ்க் எடுத்தார். ஆக்ஷன் சீக்வன்ஸ் கமல் சார் படம் போல் இருக்கணும்னு நினைச்சு எடுத்தோம்.
அதற்கும் தயாரா இருந்தார்.ஹீரோயின் பாடினி குமார். பிரமாதமான ஆர்ட்டிஸ்ட். சொல்ற விஷயத்தை ஷார்ப்பா கவனிச்சு கேரக்டரை பேச வைக்க அதிகம் மெனக்கெடல் எடுப்பார். நிழல்கள் ரவி, ஜீவா ரவி, இயக்குநர் அரவிந்த்ராஜ், ஆதேஷ்பாலா ஆகியோருக்கு முக்கியமான ரோல். அவங்களும் அதை அழகா பண்ணினாங்க.
டெக்னீஷியன் டீம்ல யாரெல்லாம் இருக்காங்க?
பெருமாள், மணிவண்ணன் சேர்ந்து ஒளிப்பதிவை கவனிக்கிறாங்க. இருவருமே பல படங்கள் பண்ணியவர்கள் என்பதால் எங்களால் ஈசியா டிராவல் பண்ண முடிஞ்சது. மியூசிக் சரண்குமார். ஆரம்பத்துல பிரபல மியூசிக் டைரக்டரை வெச்சு பண்ணலாம்னு யோசிச்சோம். இவர் பிரமாதமா பண்றார்ன்னு கேள்விப்பட்டுப் போனாம். ஏமாற்றமில்லாம அற்புதமான பாடல்கள் கொடுத்தார்.
தயாரிப்பாளர் டாக்டர் செந்தில் வேலன் திறமையான மருத்துவர். கலை மீது ஆர்வம் உள்ளவர். மக்களுக்கு சினிமா மூலம் இன்றைய பிரச்னைகளை சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தணும் என்ற நோக்கத்தில் தயாரிக்க முன் வந்தார். படத்துக்கு அவர்தான் கதாசிரியர். பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், சமூக நோக்கத்துக்கான படமாகவும் இருக்கணும் என்ற நோக்கத்தில் எடுத்துள்ளோம்.
படம் பார்த்தபிறகு, ஒரு விஷயத்தை தவறியும் செய்துடக்கூடாது என்ற எண்ணம் ஆடியன்ஸ் மனசுல தோணும். அப்படி செய்தால் அது எவ்வளவு பெரிய ஆபத்துல முடியும் என்பதையும் சொல்லியுள்ளோம்.
முதல் பார்வை போஸ்டரை பாரதிராஜா வெளியீட்டுள்ளாரே?
பாரதிராஜா சார் இயக்கிய ‘கடல் பூக்கள்’ படத்தில்தான் சினிமா கேமராவை நான் முதன் முதலா பார்த்தேன். கேமராவும் அப்போதான் என்னை முதன் முதலா பார்த்தது. அந்தப் படத்துல சின்ன ரோல் கிடைச்சது. என்னுடைய காட்சி எடுத்தபிறகும் ரெஸ்ட் எடுக்காம, டைரக்டர் பக்கத்திலேயே இருப்பேன். சாருக்கு பணிவிடை செய்யும் வாய்ப்பை நானா இழுத்துப்போட்டு செய்ய ஆரம்பிச்சேன். அந்தப் படத்துக்குப் பிறகு ஃபேமிலி கமிட்மென்ட் இருந்ததால பாரதிராஜா சாரை ஃபாலோ பண்ண முடியல.
முதல் பார்வை போஸ்டரை பாரதிராஜா சார் வெளியிட்டால் நல்ல வரவேற்பு இருக்கும்ன்னு நினைச்சு சாரை தொடர்பு கொண்டோம். ஆனால், சார் உடல்நிலை கருதி வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அப்போது ‘கடல் பூக்கள்’ படத்தில் சாருடன் நான் எடுத்துக்கொண்ட படம், படத்தோட ஸ்டில்ஸ், சார் குறித்து நான் எழுதிய ஒரு கட்டுரை என எல்லாம் சேர்த்து சாருக்கு அனுப்பி வெச்சேன்.உடனே சாரிடமிருந்து அழைப்பு வந்துச்சு. அவரிடம் பழைய விஷயங்களை ஞாபகப்படுத்தியபோது அவர் முகம் மலர்ந்தது. படம் குறித்து கேட்டு, ‘வெரிகுட்’ன்னு பாராட்டினார். இயக்குநர் இமயத்தின் பாராட்டு எங்கள் டீமுக்கு கிடைச்ச முதல் வெற்றி!
எஸ்.ராஜா
|