நார்த் Vs சவுத்!



ஜீவா நடித்த ‘சீறு’ படத்தின் வழியாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் ரியா சுமன். தொடர்ந்து ‘மலேஷியா டூ அம்னீஷியா’, ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ உட்பட பல படங்களில் நடித்த ரியா தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பிசி. 
இப்போது விஜய் ஆண்டனியுடன் ‘ஹிட்லர்’ செய்துள்ளார். தாய்மொழி இந்தி என்றாலும் தமிழ், தெலுங்கு என பல  மொழிகள் இவருக்கு தெரியும். புரொமோஷனுக்காக சென்னை வந்த ரியாவிடம் பேசினோம்.

யார் இந்த ரியா சுமன்?

கேர்ள் நெக்ஸ்ட் டோர்ன்னு கேள்விப்பட்டியிருப்பீங்க. அந்தமாதிரி ரொம்ப சிம்பிளான பொண்ணு இந்த ரியா. அதனாலதான் என்னை தெலுங்கு பொண்ணாகவும், தமிழ் பொண்ணாகவும் பார்க்கிறாங்கன்னு நினைக்கிறேன்.
பிறந்தது மும்பை. வளர்ந்தது ராஜஸ்தான். படிச்சது காமர்ஸ். சின்ன வயசுலேர்ந்து டிராமா, சிங்கிங், டான்சிங்ன்னு ஒரு காம்படிஷனையும் விடமாட்டேன். அந்த ஆர்வம்தான் என்னை சினிமாவுக்கு டைரக்ட் பண்ணுச்சுன்னு நினைக்கிறேன். காலேஜ் முடிச்சதும் ஒரு நல்ல நாள் பார்த்து சினிமாதான் ப்ரொஃபஷன்னு சினிமாவுக்குள் மூழ்கி முத்தெடுக்க வந்துவிட்டேன்.

வட இந்திய கலாசாரத்துல வளர்ந்த உங்களுக்கு தென்னிந்திய கலாசாரம் அதிர்ச்சியைக் கொடுத்துச்சா?

அது வித்தியாசமான அனுபவம். நார்த், சவுத்ன்னு பிரிச்சுப் பார்க்கிறளவுக்கு கலாசார மாற்றங்கள் பெரிசா எதுவுமில்லை. வெளிநாடுகளுக்கு டூரிஸ்ட்டா போகும்போது அங்குள்ள மக்கள், மொழி, உணவு என ஒவ்வொரு அம்சங்களையும் வியந்து பார்த்து என்ஜாய் பண்ணுவோம். அதுமாதிரிதான் சவுத்துக்கு வந்தபோதும் சவுத் கலாசாரங்கள், உடை, உணவு என ஒவ்வொரு அம்சத்தையும் ஆர்வமாகப் பார்த்தேன்.

சினிமாவுல நடிப்பதற்கு முன் விளம்பரப் படங்கள் பண்ணியதால் ஒர்க் பற்றிய எந்த டென்ஷனும் இருந்ததில்லை. மும்பை என்று வரும்போது வீட்ல இருந்து ஸ்டூடியோ, ஸ்டூடியோவிலிருந்து வீடு என்று இருப்பேன். இங்கு அப்படி இல்லை. படக்குழுவினருடன் இருக்க வேண்டும். ஆனால், இங்கு எல்லோரும் தங்கள் ஃபேமிலி மெம்பர்போல்  அன்பு செய்கிறார்கள். அது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

சினிமாதான் லைஃப்ன்னு  முடிவானதும் எப்படி தயாரானீர்கள்... என்ன மாதிரி படங்களைப் பார்த்து சினிமா அறிவை வளர்த்துக்கொண்டீர்கள்?

‘ரங்கீலா’, மணிரத்னம் சார் இயக்கிய ‘பம்பாய்’, ‘அலைபாயுதே’ உட்பட பல படங்கள், தமிழ் ரீமேக் படங்கள் என ஏராளமான படங்களைப் பார்த்துதான் என்னுடைய சினிமா அறிவை வளர்த்துக்கிட்டேன். அனுபம்கெர் ஆக்டிங் ஸ்கூலில் படிச்சதும் உதவியா இருந்துச்சு.

‘ஹிட்லர்’ அனுபவம் எப்படியிருந்துச்சு?

அது சூப்பர் அனுபவம். இயக்குநர் தனா சாரின் ஸ்டைல் ஆஃப் டைரக்‌ஷனில் என்ஜாய் பண்ணி நடிக்க முடிஞ்சது. படத்துல நடிச்ச எல்லாருக்கும் ஸ்பேஸ் கொடுத்திருந்தார். அப்படி என்னுடைய கேரக்டரை சென்டிமென்ட், எமோஷன் என எல்லாம் கலந்த கலவையா உருவாக்கியிருந்தார். 

ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணுவதற்கு முன்பே என்னுடைய சீன், டயலாக் எல்லாத்தையும்  கொடுத்துட்டதால படப்பிடிப்புக்கு ஆயத்தமா வர முடிஞ்சது. என்னுடைய கேரக்டரை சிறப்பா பண்ண முடிஞ்சதற்கு அதுதான் முக்கிய காரணமா இருக்கும்ன்னு நினைக்கிறேன். அதுதவிர இயக்குநருடன் ஸ்கிரிப்ட் ரீடிங், டயலாக் ரிகர்சலும் இருந்துச்சு.

தனா சார் சினிமா பேஷன் உள்ளவர். அவருக்கென தனி ஸ்டைல் இருந்தாலும் பல இடங்களில் மணிரத்னம் சார் பட சாயலில் வேலை செஞ்சதைப் பார்க்க முடிஞ்சது. ரொம்ப பொறுமையா எல்லோரையும் வழிநடத்தி படத்தை சுமுகமா கொண்டுபோனார். 

தெரியுமா உங்களுக்கு? தனா பெஸ்ட் ஆக்டர். ஆர்ட்டிஸ்ட் எப்படி நடிக்கணும் என்பதை விளக்கமா சொல்வதோடு, கேமரா முன் நின்று எப்படி எக்ஸ்பிரஷனை வெளிப்படுத்தணும்ன்னு நடிச்சும்காட்டுவார். அந்த மாதிரி டைரக்டருடன் ஒர்க் பண்ணும்போது அது ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு ரொம்ப ஈசின்னு சொல்லலாம்.

விஜய் ஆண்டனி...?

சார் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப சைலன்ட்டா இருப்பார். ஸ்பாட்லேயே எடிட்டிங்கும் நடக்கும் என்பதால் எப்பவும் பிசியா இருப்பார். ப்ரொமோஷன் டைம்லதான் அவர் எவ்வளவு ஜாலியான பெர்சன்னு தெரிஞ்சது.  ரொம்ப ஃப்ரெண்ட்லி டைப். பேசுவதற்கு இனிமையானவர். ஷூட்டிங் டைம்ல பலர் தங்கள் சொந்தப் பிரச்சனைகளை சொல்ல வருவாங்க. அதை அழகா பேசி சால்வ் பண்ணுவார்.

மணிரத்னம் சார் படம் பிடிக்கும்ன்னு நான் சொன்னது ஞாபகம் இருக்கா? அதே மாதிரி இதுல நடிச்ச கெளதம் வாசுதேவ் மேனன் சார் படங்களும் எனக்கு பிடிக்கும். அவர் படங்களுடைய ஹீரோயின் மாதிரி ரோல் பண்ணணும்னு எனக்கும் ஆசை உண்டு. ‘ஹிட்லர்’ல அவருடன் நடிப்பேன்னு  நினைச்சுப் பார்க்கல. அவருடன் சேர்ந்து நடிச்ச அனுபவம் மறக்கவே
முடியாதது. நான் சந்திச்ச ஜென்டில்மேன்களில் அவரும் ஒருவர்.

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் படம் செய்றீங்க. எந்த மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீங்க?

அப்படி எந்த எண்ணமும் வந்ததில்லை. மொழிகளை வெச்சு சினிமாவை பிரிச்சுப்பார்த்த காலம் இப்போ இல்லை. எல்லா மொழி நடிகர், நடிகைகளும் எல்லா மொழிகளிலும் நடிக்கிறாங்க. அப்படிதான் எனக்கு  இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது.மலையாளத்துல நடிக்கணும் என்பது நீண்ட நாள் ஆசை. மலையாள சினிமா இப்போது நார்த் சைடிலும் பேசப்படுது. கேரக்டர் உருவாக்கம், ஃபிலிம் மேக்கிங் என எல்லா அம்சங்களும் பிரமாதமா இருக்கு.

ஆனால், அதிகபட்சமா உள்ளூர் நடிகர், நடிகைகளை வெச்சுதான் அவர்கள் படங்கள் எடுப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனாலும் எனக்கு மலையாள சினிமா பண்ணணும்
என்பது ஆசை.

எந்த மாதிரி கேரக்டரில் நடிக்க ஆர்வமா இருக்கீங்க?

காமெடி ரோல் பண்ணணும். அப்புறம் ரொமான்டிக் டிராமா. ஹீரோயின் என்றில்லாமல் பெர்ஃபாமன்ஸுக்கு முக்கியத்துவம் உள்ள ரோலும் பண்ணணும். ‘அந்தாதூன்’ல தபு மேடம், நயன்தாரா மேடம் பண்ணிய கேரக்டர்கள், ‘ரங்கீலா’வில் ஊர்மிளா மேடம் பண்ணியதுபோல் பண்ணணும்.   

உங்க விஷ் லிஸ்ட் நடிகர்களில் யாரெல்லாம் இருக்காங்க?

விஜய்சேதுபதி, தனுஷ், ஃபகத் பாசில், துல்கர் சல்மான்.நானி, சந்தானம், விஜய் ஆண்டனி போன்றவர்களுடன் நடிக்கும்போது எதைப்பற்றி அதிகம் பேசுவீங்க?

நானி சார் படம் பண்ணும்போது சினிமாவுக்கு நான் புதுசு. லைட்டிங், டயலாக் டெலிவரி என டெக்னிக்கல் அம்சங்களைத்தான் அதிகமா பேசுவோம்.சந்தானம் சார் பற்றி சொல்லவே வேண்டாம். எப்பவுமே ஜோக் அடிச்சுட்டே இருப்பார். 

சீரியஸ் பேச்சுக்கே அங்கே இடம் இருக்காது.  விஜய் ஆண்டனி சார் என்னிடம் பேசினார்ன்னு சொல்வதை விட நான்தான் அவரிடம் பேச்சு கொடுத்தேன். டிராவல் பற்றி அதிகம் பேசுவோம். லைஃப் பற்றி நிறையப் பேசுவோம். ‘எல்லோருடைய சிந்தனைகளும் ஒன்றில்லை. எல்லோருக்கும் சுதந்திரம் இருக்கு’ன்னு கொஞ்சம் தத்துவமாவும் பேசுவார்.ஆன்மிகமும் கிராஸ் ஆகும்.

பாலிவுட் வாய்ப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்?

சமீபத்துல நடந்த ‘தேவரா’ நிகழ்ச்சியில் ஜூனியர் என்டிஆர் சார் பேசும்போது, ‘வெவ்வேறு மொழி பேசுபவர்களா இருந்தாலும் சினிமா எல்லோரையும் ஒன்று சேர்த்துள்ளது’ என்றார். அதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன். பாலிவுட், கோலிவுட், டோலிவுட்ன்னு பிரிச்சுப்பார்த்த காலம் மலையேறிடுச்சு. இப்ப எல்லாமே சினிமா.

உங்களுக்கு கிடைச்ச பெஸ்ட் அட்வைஸ், மோசமான அட்வைஸ் எது?‘உன்னை நீ தெரிஞ்சுக்க. சுயத்தை அறியும்போதுதான் உன் திறமைகள் வெளிப்படும்’ என்று என்னுடைய அப்பா சொன்ன அட்வைஸ்தான் இதுவரை பெஸ்ட்டா பார்க்கிறேன். மோசமான அட்வைஸ் எதுவுமில்லை.

எஸ்.ராஜா