இந்திய முதியோர் மன்றம்!
நடந்து முடிந்த இந்திய பாராளு மன்றத் தேர்தலில் எத்தனை எம்பிக்கள் இளைஞர்கள்? பாதி... பாதிக்கு மேல்... பாதிக்கும் சற்றேறக் குறைவு..?
அதுதான் இல்லை. 10 சதவீதம்தான் இளைஞர்கள் என்று புள்ளிவிபரங்கள் தலையில் அடித்துக்கொள்கின்றன.இந்தத் தேர்தலில் 43.09 சதவீத எம்பிக்கள் 56 மற்றும் 70 வயதுக்கு உட்பட்டவர்கள்.
37.75 சதவீதத்தினர் 41 மற்றும் 55 வயதுக்கு உட்பட்டவர்கள். வெறும் 9.94 சதவீதத்தினர்தான் 25 மற்றும் 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்று சொல்கிறது புள்ளிராஜா. மொத்தத்தில் இப்போதிருக்கும் பாராளுமன்றத்தில் 41 லிருந்து 70 வயதுக்கு உட்பட்ட எம்பிக்களை கணக்கிட்டால் மொத்த கூட்டுத்தொகை 80.84 சதவீதம் வரும்.
இந்தியாவை ‘யங் நேஷன்’ என வெளிநாடுகள் செல்லமாக அழைப்பதுண்டு. காரணம், பல மேற்குலக நாடுகளில் எல்லாம் வயதானவர்கள்தான் மக்கள்தொகையில் அதிகமாக இருப்பார்கள்.
ஆனால், இந்தியாவை எடுத்துக்கொண்டால் 35 வயதுக்கு குறைந்தவர்கள் மட்டுமே மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 65 சதவீதம். இதுதான் இந்தியாவுக்கு இளைய நாடு எனும் பெத்த பெயரைக் கொடுத்திருக்கிறது.
ஆனால், இந்த இளைய இந்தியாவை பெரும்பான்மையாக ஆள்வது ‘தள்ளாடும்’ வயதானவர்கள்! உலக அளவிலும் இந்தியாவிலும் பல்வேறு பிரச்னைகளுக்கு உடனடியாக முகம் கொடுக்கவேண்டியிருக்கிறது. உதாரணம் ஏஐ, காலநிலை பருவமாற்றம், மற்றும் வேலையில்லாப் பிரச்னை. பாராளுமன்றத்தில் சீனியர் சிட்டிசன் எம்பிக்கள் குஜாலான படங்களையே கைபேசியில் நோண்டிக்கொண்டிருந்தால் இந்தியாவின் பிரச்னைகளைப் பற்றி யார்தான் பேசுவார்கள்?
பொதுவாக அரசியல் என்பது முதிர்ந்த வயதில்தான் சாத்தியப்படும் என்ற எழுதப்படாத ஒரு பாடத்தை இந்தியாவில் விதைத்திருக்கிறோம். இதன் விளைவுதான் இந்த நிலைக்குக் காரணம்.
யங் இண்டியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கப்போவது ஓல்ட் ஜெனரேஷன்தான் என்று நினைக்கவே கவலையாக இருக்கிறது.
அவர்கள் எதிர்கொண்ட வாழ்க்கை சவால்களே வேறு. இன்றைய ஒயர் லெஸ் வாழ்க்கை... கேட்ஜெட்ஸ்... குறித்த அடிப்படைகளை அவர்களால் எப்படி அலசி ஆராய முடியும்? எப்படி அதற்கான தீர்வுகளை சட்டமியற்றி அமல்படுத்த முடியும்..? அரசியலில் எப்போது இளைஞர்கள் மும்முரமாக இறங்குவார்கள் என்ற கேள்வியையும் இது மறைமுகமாக எழுப்புகிறது. ஜெய் யங் இந்தியா.
டி.ரஞ்சித்
|