ஆண் குலதெய்வத்தை மையமா கொண்ட படம் இது...
மேன் ஆஃப் மாஸஸ் ஜூனியர் என்டிஆர் Open Talk
‘‘ஆறு வருடங்கள் கழித்து என்னுடைய தனி ரிலீஸ்... ரொம்ப படபடப்பா இருக்கு. அதுவும் இல்லாம இது பான் இந்தியா திரைப்படம் என்கிறதால பயமும் அதிகமா இருக்கு...’’பரபரப்பும் படபடப்பும் ஒருசேர பேசத் துவங்கினார் ‘மேன் ஆஃப் மாஸஸ்’ மற்றும் ‘குளோபல் ஸ்டார்’ என தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜூனியர் என்டிஆர். பிரம்மாண்ட பொருட்செலவில் வெளியாக இருக்கிறது ‘தேவரா: பாகம் 1’ திரைப்படம். கொரட்டல சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், சயீப் அலி கான், பிரகாஷ் ராஜ், கலையரசன் மற்றும் மறைந்த இந்திய லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தென்னிந்திய மொழியில் அறிமுகமாகும் முதல் திரைப்படம் என்னும் கூடுதல் சிறப்புடன் வெளியாக இருக்கிறது. ‘தேவரா: பாகம் 1’... துவக்கத்திலேயே இரண்டு பாகங்களாதான் திட்டமிட்டிருந்தீங்களா?
எந்தப் படமும் ரெண்டு பார்ட் எடுக்கணும் அப்படின்னு முடிவு செய்து ஆரம்பிக்கிறதே கிடையாது. இந்தப் படமும் அப்படிதான் ஆரம்பத்துல கதையாக கேட்கும்பொழுது ஒரு பார்ட்டாதான் ஆரம்பிச்சோம். ஆனா, ஷூட்டிங் ஆரம்பிச்சு போகப் போக இந்தக் கதையை ஒரு பார்ட்டில் சொல்ல முடியாது அப்படின்னு எங்களுக்கே புரிய ஆரம்பிச்சது. மேலும் மூணு மணி நேரம் கொடுத்தா எல்லா படமும் வொர்க்கவுட் ஆகாது. ‘அனிமல்’ மாதிரி ஒண்ணு ரெண்டு படங்கள் மாஸ் காட்டும்.
‘தேவரா’ ரொம்ப விளக்கமா பொறுமையா சொல்ல வேண்டிய கதை. அதனால் ரெண்டு பாகம். அதேபோல பான் இந்தியா படமும் அப்படிதான். எல்லா கதையும் நாம் பான் இந்தியாவுக்குக் கொடுக்க முடியாது. ஒருசில கதைகள் தென்னிந்தியாவிலே மட்டும் வொர்க்கவுட் ஆகும், ஒரு சில கதைகள் இந்தியா அளவிலே வசூலாகும், சில படங்கள் உள்ளூரிலேயே வேலைக்கு ஆகாது.
ஆனால், இந்தக் கதை பான் இந்தியா பிராண்டுக்கு செட் ஆகும். தேவரா அப்படிங்கறது ரெண்டு கேரக்டர். ‘தேவரா’ மற்றும் ‘வரா’. எப்படி ‘காந்தாரா’ குலதெய்வ வழிபாட்டை மையமா வச்சு வந்ததோ அந்த மாதிரி இந்தப் படமும் ஒரு உட்புற குலதெய்வ வழிபாட்டு கதைதான். ஆண் குலதெய்வத்தை தேவரா என பொதுவா அழைக்கிறதுண்டு. அதை மையமாக வைத்துதான் இந்த ‘தேவரா’ கதை.
பான் இந்தியா திரைப்படமாக தனி ரிலீஸ்... எப்படி இருக்கு இந்த மொமண்ட்?
ஆரம்பத்தில் சொன்னது போல ரொம்ப பயமா இருக்கு. ‘ஆர் ஆர் ஆர்’ படவேளையில் ஜாலியா எந்தப் பயமும் பதட்டமும் இல்லாமல் மொத்த சுமையையும் ராஜமவுலி சார் மேல இறக்கிட்டு நாங்க சுத்திக்கிட்டு இருந்தோம். காரணம், எந்த மெனக்கெடலும் இல்லாமல் ஏற்கனவே ராஜமவுலி சார் ஒரு பிராண்ட் செட் செய்து வைத்திருந்தார். அதனால் எங்களுக்கு எந்த பொறுப்புமே அப்போ கிடையாது. போனோம் நடிச்சோம் வந்துட்டோம். ஆஸ்கர் வரையிலும் போயிடுச்சு அந்த படம். இப்போ இந்தப் படம் என் படமா ரிலீஸ் ஆகுது. கொஞ்சம் பதட்டமாதான் இருக்கு.
இயக்குநர் கொரட்டலா சிவா அவருடைய முழு உழைப்பையும் கொடுத்திருக்கார். ஒரு சில காட்சிகள் என்னால இப்போ சொல்ல முடியாத கட்டாயத்தில் இருக்கேன்.
எப்படி எடுத்தாங்க... எங்கே கேமரா இருந்துச்சு அப்படின்னு ஸ்பாட்டில் நடிச்ச எனக்கே தெரியலை. அந்த அளவுக்கு படத்தின் காட்சிகளை அவ்வளவு மெனக்கெட்டு எடுத்திருக்கார். அவருக்கும் இந்தப் படம்தான் பான் இந்தியா திரைப்படமாக புது முயற்சி. இதற்கு முன்னாடி அவர் டைரக்ஷன்ல வெளியான ‘ஸ்ரீமந்துடு’, ‘பரத் அனே நேனு’... இப்படி எல்லா படமும் தெலுங்கில் வெளியாகி ஹிட் ஆன பிறகு மற்ற மொழிகளுக்கு டப்பிங் ஆச்சு. அந்த ஸோன் வேற. ஆனா, இப்போ இது எங்க எல்லாருக்குமே புது சூழல்தான்.
தண்ணீருக்கடியில் காட்சிகள்... அந்த அனுபவம் பற்றி சொல்லுங்க..?
எனக்குத் தெரிந்து இந்தியாவிலேயே முதல் முறையா 35 நாட்கள் தண்ணீருக்கடியில் ஷூட்டிங் நடத்தின படம் இதுவாதான் இருக்கும்னு நினைக்கிறேன். சுறாமீன்கூட ஒரு சண்டை. அந்த சண்டை படத்தில் ரொம்பப் பெரிய விஷுவல் ட்ரீட்டா இருக்கும். சும்மா கிராஃபிக்ஸ்ல எல்லாம் ஏமாத்தவும் முடியாது. அந்த அளவுக்கு மெனக்கெட்டுதான் ஆகணும்.
அந்தக் காட்சி அவ்வளவு தத்ரூபமாகவும் அவ்வளவு பிரமாண்டமாகவும் வந்திருக்கு அப்படின்னா அதற்கு காரணம் சாபு சாருடைய உழைப்பு. தேசிய விருது பெற்ற ரெண்டு டெக்னீஷியன்கள், சாபு சார் ஆர்ட் டைரக்டர், ஸ்ரீகர் பிரசாத் சார் எடிட்டர் ரெண்டு பேரும் படத்துக்கு ரெண்டு பெரிய தூண்கள். உலகத்தர படமா குறிப்பா இந்தக் குறிப்பிட்ட காட்சி இருக்கும். சுமார் 20 அடி ஆழத்தில் அந்தக் காட்சி மட்டும் படமாக்கி இருக்கோம். படம் பார்க்கும்போது அதை நீங்களே உணர்வீங்க. அனிருத் இசை..? ஹையோ... நான் என்னன்னு சொல்றது. ‘இது அனி’ஸ் எரா’ன்னு கூட சொல்லலாம். சூப்பர் ஸ்டார், கமல் சார் இப்படி எவ்வளவோ ஜாம்பவான்களின் உழைப்பைக் கூட இப்போ இருக்கற தலைமுறைக்கு தெரிய வைக்க ஒரு ஃபோர்ஸ் தேவைப்படுது.
அந்த ஃபோர்ஸ் வேற யாரும் இல்ல, அனிருத்தான். இன்னைக்கு நான் சொல்றேன்... எப்படி ரகுமான் சார் உலகப் புகழ் அடைந்தாரோ, அதேமாதிரி அனிருத் மிகப்பெரிய உயரம் ரொம்ப சீக்கிரம் தொடுவார். அவருக்கு அவ்வளவு அசால்ட்டா மியூசிக் வருது. இந்தப் படத்துக்குள் அனிருத் வந்ததே ஒரு சுவாரசியமான ஸ்டோரிதான். படத்தின் அப்டேட் குறித்த செய்திகள் வரும்பொழுது சோசியல் மீடியாவில் நிறைய ரசிகர்கள் மியூசிக் அனிருத் வேணும், ப்ளீஸ் அனிருத் அப்படின்னு நிறைய இடங்களில் அனிருத்தை டேக் செய்ய ஆரம்பிச்சாங்க.
இப்படி நாங்க அனிருத்தை செலக்ட் செய்யல... ரசிகர்கள் சேர்ந்து செலக்ட் செய்ததுதான் அனிருத் இசை. நானாவது பக்கத்து மாநிலத்துக்காரன். நீங்க தினம் தினம் அனிருத் மியூசிக் இல்லாம உங்க வாழ்க்கைய கடக்கவே முடியாது. அந்த அளவுக்கு அனிருத் மியூசிக் கொஞ்சம் கொஞ்சமா வாழ்வியல்ல சேர்ந்திருக்கும். இது மிகைப்படுத்தலா இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. ‘அப்டேட் எப்போ?’ இந்த வார்த்தை ஏன் உங்களுக்கு அவ்வளவு பெரிய அழுத்தமா மாறுச்சு?
ஆமா... அந்த மேடை சம்பவம்... நான் மட்டும் இல்ல, இந்தியா முழுக்கவே இருந்த எல்லா மொழி முன்னணி ஹீரோக்களும் ‘எப்போ அப்டேட்?’ என்கிற கேள்வியால் ஒருவித மன உளைச்சலை சந்திச்சுக்கிட்டு இருந்தாங்க. அதுல நானும் ஒருத்தன். இந்த அப்டேட் கேட்கிறதோட விளைவு... சரி இவ்வளவு அழுத்தம் கொடுக்கறாங்களே, எதிர்பார்க்கறாங்களே அப்படின்னு ஒரு போஸ்டரோ அல்லது டீசரோ வெளியிட்டா அதுவே நமக்கு எதிர்மறையா மாறுது.
உடனே திட்ட ஆரம்பிக்கிறாங்க. இதெல்லாம் ஒரு அப்டேட்டா அப்படின்னு கலாய்க்கத் தொடங்கறாங்க. ‘அட நீங்கதானேப்பா அப்டேட் கேட்டீங்க’ன்னு நினைச்சா, படத்துக்கு கொடுக்கற முதல் அப்டேட்டே நெகட்டிவ்வா மாறிடுது. அந்த அழுத்தம் ஒரு நிகழ்ச்சியின் மேடையிலேயும் கொடுக்கவும்தான் வேறு வழியே இல்லாம ‘அப்டேட் இனிமே கேட்காதீங்க... அப்டேட் இருந்தால் என் குடும்பத்துக்குக் கூட நான் முதலில் சொல்ல மாட்டேன்... உங்களுக்குதான் சொல்வேன்’னு சொன்னேன்.
இதனுடைய அழுத்தம் நமக்கு மட்டும் இல்லை, மொத்த படத்தின் வேலைகளையும் பாதிக்கும். லைட்மேன் உட்பட சோசியல் மீடியா ஓபன் செய்தாலே நெகட்டிவ் கமெண்ட் பார்த்தா இனிமே இந்தப் படம் வொர்க்கவுட் ஆகாது போல என்கிற மனநிலையிலேதான் படம் முடியற வரைக்கும் வேலை செய்வாங்க. அப்டேட் என்கிறது சும்மா அறிமுகம் மட்டும் இல்லை... ஒரு படத்துக்கான முகவரியே அதுதான்.
ஜான்வி கபூர், சைஃப் அலி கான் காம்போவில் ஜூனியர் என்டிஆர்?
என்னவோ தெரியலை... இந்தப் படம் அறிவிப்பு வந்தது முதல் ஜான்வி கபூர் சைட்ல இருந்து நானும் இந்தப் படத்தில் ஒரு பார்ட்டா இருக்கணும்ன்னு கேட்டாங்க. ரொம்ப ஆர்வம் காட்டினாங்க. இதற்கு முன்னாடி எத்தனைய படங்களுக்கு தென்னிந்தியா சினிமா அவங்களை கூப்பிட்டும் வராதவங்க இந்தப் படத்துக்கு, தானாகவே இணைஞ்சாங்க.
மேடம் ஸ்ரீதேவிகாருடைய பொண்ணு. நடிப்பெல்லாம் அசால்ட் காட்றாங்க. இந்தக் கதைக்குன்னு ஒரு கேள்வி இருக்குமே... அதற்கான பதில் சைஃப் அலி கான். அதனால்தான் அவருடைய கேரக்டரை நாங்க டிரெய்லரில் கூட அதிகம் காட்டலை. சர்ப்ரைசா வெச்சிருக்கோம். எந்த ஈகோவும் இல்லாம நடிச்சார். செம கூல். ஆனால், டெடிகேஷன். உங்க அடுத்தடுத்த படங்கள்..? தமிழில் நேரடிப் படம் நடிக்கும் வாய்ப்பு இருக்கா?
அயன் முகர்ஜி டைரக்ஷன்ல ஹ்ருத்திக் ரோஷன் கூட ‘வார் 2’ இந்திப் படம். ‘கேஜிஎஃப்’ பிரசாந்த் நீல் இயக்கத்தில் என்னுடைய 31வது படம், அறிவிப்பு கூட வந்திடுச்சு. போஸ்ட் ப்ரொடக்ஷன் போயி ட்டு இருக்கு. அதுவும் ஒரு பான் இந்தியா படமாகத்தான் இருக்கும். தொடர்ந்து ‘தேவரா: பார்ட் 2’. தமிழில் நேரடிப் படம் அவ்வளவு சுலபம் இல்ல. என்னுடைய புரிதல் சரின்னா, தமிழ் சினிமா ரசிகர்களை அவ்வளவு சுலபமா திருப்திப்படுத்த முடியாது. அதனால் கவனமாதான் அடி எடுத்து வைக்கணும்.
தமிழ் சினிமாவுடைய தனித்துவமான வளர்ச்சி, இன்னும் சர்வதேச அங்கீகாரம் அடையணும்ன்னு நினைக்கிறேன். குறிப்பா லோகேஷ் கனகராஜ் மேக்கிங் ஸ்டைல்... அவர் உருவாக்கின வைப், சூப்பர் ஸ்டாரை அப்படி மாஸாக காட்டிய இயக்குநர் நெல்சன்... ப்பா... ‘ஜெய்லர்’ படம் பார்த்தேன்.
செம மாஸ்.அட ‘ஜவான்’ அட்லீயை எப்படி விட முடியும்! ரொம்ப ஜாலியா, அதே சமயம் புத்திசாலித்தனமா கதைகளை உருவாக்கறாங்க. அப்பறம் என்னுடைய ஃபேவரைட் இயக்குநர், நான் அவர் படங்களுக்கு ரசிகனும் கூட, வெற்றிமாறன் சார்.இப்படி இவங்கள மாதிரி ஒரு இயக்குநர் யார் கூப்பிட்டாலும் தமிழில் நான் நடிக்க தயாரா இருக்கேன்.
ஷாலினி நியூட்டன்
|