மதுபானம், குளிர்பானம்... தவிர்க்கும் ஜென் இசட்..!



சமீபமாக ஜென் இசட் எனப்படும் 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் குறித்து வெளியாகும் பல்வேறு ஆய்வுகள் ரொம்பவே ஆச்சரியப்படுத்துகின்றன.  ஜென் இசட்டான இன்றைய இளம் தலைமுறையினர் அதிகமாக குடித்து கூத்தடிக்கிறார்கள் என்பதுதான் நம் சமூகத்தின் பொதுவான பிம்பம். 
ஆனால், இன்றைய தலைமுறையினர் மிகக் குறைவாகவே ஆல்கஹால் எடுத்துக் கொள்கிறார்கள் என ஆச்சரியத் தகவலைத் தருகிறது ஓர் ஆய்வு. இதேபோல மற்றொரு ஆய்வு, இந்தியாவில் ஜென் இசட் பிரிவினர் சாஃப்ட் டிரிங்க்ஸ் எனப்படும் குளிர்
பானங்கள் குடிப்பதைக்கூட அதிகம் தவிர்க்கிறார்கள் என்கிறது.

இதற்குக் காரணம் ஜென் இசட் பிரிவினர் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்துவதுதான். உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அவர்கள் மிகுந்த ஆர்வமும் முனைப்பும் காட்டுவதாகச் சொல்கின்றன இந்த ஆய்வுகள்.

ஆல்கஹால் பற்றிய முதல் ஆய்வு, சமூக வலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஒன்று. இதில் இளைய தலைமுறையினர் தங்களுக்கு நல்லது எது, கெட்டது எது மற்றும் பழக்கவழக்கங்கள் என்ன ஆகியவை குறித்து நன்கு அறிந்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.

உண்மையில் மது அருந்துதல் உடல் ஆரோக்கியத்திற்கு நச்சுத் தன்மையுடையது என்பதை நன்றாகவே அறிந்து வைத்திருப்பதாக குறிப்பிடும் இந்த ஆய்வு, கடந்த தலைமுறையினரைவிட 20 சதவீதம் குறைந்த அளவிலேயே ஜென் இசட் பிரிவினர் ஆல்கஹால் எடுத்துக் கொள்வதாகச் சொல்கிறது. அடுத்த ஆய்வு இந்தியாவில் சாஃப்ட் டிரிங்க்ஸ் அருந்துவதை இன்றைய தலைமுறையினர் தவிர்க்கிறார்கள் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது. கடந்த தலைமுறையினரிடம் இருந்த ஆர்வம் இந்தத் தலைமுறையினரிடம் சுத்தமாக இல்லை எனச் சொல்கிறது.

அதனால்தான் பல குளிர்பான நிறுவனங்களின் விற்பனை இந்தியாவில் வெகுவாக சரிந்திருப்பதாகவும், விற்பனைக் குறைவால் அந்தப் பொருளின் விலையை அவர்கள் குறைத்திருப்பதாகவும் கோடிட்டுக் காட்டுகிறது. 

இதனாலேயே உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்கிறவர்களிடம் இலவசமாக குளிர்பானங்களை விற்கும் போக்கு அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக் காட்டுகிறது அந்த ஆய்வு. பொதுவாக ஒரு 500 மில்லி லிட்டர் குளிர்பான பாட்டிலில் 55 முதல் 60 கிராம் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. இது 13 டீஸ்பூன் அளவு கொண்டது. இந்தளவு உடல்நலத்திற்குத் தீங்கு என்பதை பல்வேறு ஊடகங்கள் மூலம் அறிந்துகொள்ளும் ஜென் இசட் பிரிவினர் அதனை தவிர்க்கவே நினைக்கின்றனர்.

இதேபோல, நுகர்வோர்கள் எதை, ஏன் விரும்புகிறார்கள் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ‘மின்டெல்’ என்ற அமைப்பு, இந்தியாவில் ஜென் இசட்டில் உள்ள 33% பேர் ஆரோக்கியமான உணவு முறையும், சரியான தூக்கமும் உடல்நலத்திற்கு தேவையென நினைப்பதாகச் சொல்கிறது.அவர்கள் ஆரோக்கியமான உணவில் கவனம் செலுத்த வேண்டுமென்றால் குளிர்பானங்களைத் தவிர்க்கச் சொல்லி நிபுணர்களே பரிந்துரைக்கின்றனர். இதன்காரணமாகவே அவர்கள் குளிர்பானங்களைத் தவிர்க்கின்றனர் எனக் குறிப்பிடுகிறது.

ஆனால், இந்தியாவில் குளிர்பான சந்தை வளர்ந்துதான் வருகிறது என்கிறார்கள் நிபுணர்கள். இன்று குளிர்பானங்களுக்குப் பதிலாக, இந்தியச் சந்தையில் சர்க்கரை குறைவான அல்லது சர்க்கரை இல்லாத பானங்களை விற்பனை நிறுவனங்கள் கொண்டு வந்துள்ளன என இதற்கு எடுத்துக்காட்டாக சுட்டிக் காட்டுகின்றனர்.

அதாவது மாற்று பானமாக இஞ்சி ஆல், டானிக் தண்ணீர் ஆகியவற்றை வழக்கமாகத் தயாரிக்கும் குளிர்பானங்களுடன் சேர்த்து சந்தைக்குக் கொண்டு வருவதாகக் குறிப்பிடுகின்றனர். இதனால், அதன் வளர்ச்சி எப்போதும் போலவே இருக்கிறது. இருந்தும் இதில் நிறைவாக ஒரு கெட்ட செய்தியும் இருக்கிறது.

அது, குளிர்பானங்களைத் தவிர்க்கும் அதே ஜென் இசட் பிரிவினர் தற்போது எனர்ஜி டிரிங்க்ஸ் எனப்படும் ஆற்றல் பானங்களை அதிகம்  நுகரகின்றனர் என்கிற குற்றச்சாட்டுதான்.
இது குளிர்பானங்களைவிட அதிக ஆபத்து கொண்டது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். 

இந்த ஆற்றல் பானங்களில் அதிகமாக காஃபின், சர்க்கரை மற்றும் பிற சேர்க்கைகள் கலக்கப்பட்டிருப்பதால் இதனைத் தேர்ந்தெடுக்கும் இளைஞர்கள் இதயப் பிரச்னை, உயர் இரத்த அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை, உடல் பருமன் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்னைகளுக்கு ஆளாகும் வாய்ப்புள்ளது என எச்சரிக்கிறார்கள் அவர்கள்.

பேராச்சி கண்ணன்