இறந்துபோன மகனை உயிருடன் மீட்டுத் தந்த கெளசர்!



துபாயில் இருந்து ஆசிப்மீரான்

அந்தப் பெண்மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு துபாயில் இருந்து வருகிறது. அழைத்தது துபா  யில் இருக்கும் தன் மகனாகத்தான் இருக்கும் என்று ஆர்வத்தோடு தொலைபேசியை எடுத்த அந்தத் தாய்க்கு பேரிடியாக வந்து இறங்குகிறது அந்தச் செய்தி.‘‘உங்கள் மகன் இறந்துவிட்டான். அவனது உடலை ஊருக்கு அனுப்பி வைப்பதற்காக ஆவணம் தயார் செய்து அனுப்புங்கள்...’’ என்று அந்தத் தொலைபேசி அழைப்பு சொல்கிறது.

பெற்ற மனம் பற்றி எரிய, யார் மூலமாக எப்படி அனுப்புவது என்று தெரியாமல் தனக்குத் தெரிந்த ஒரு நர்ஸ் மூலமாக உடலை அனுப்புவதற்குச் சம்மதம் சொல்லி, உரிய ஆவணங்களை அந்தத் தாய் கண்ணீரோடு அனுப்பி வைக்க, உடலை மகாராஷ்டிராவிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடக்கத் தொடங்குகின்றன. இதற்கிடையில், உடலைத் திரும்பப் பெறுவதற்கான காலம் நீண்டு கொண்டே போனதால், அந்தத் தாய்க்கு அறிமுகமான மருத்துவர் யார் மூலமாகவோ கௌசர் பற்றிக் கேள்விப்பட்டார்.

மத்திய கிழக்கு நாடுகளில் வேலைக்காக தமிழகத்தில் இருந்து - இந்தியாவில் இருந்து - சென்றவர்களுக்கு என்ன இடர்பாடுகள் ஏற்பட்டாலும் அவர்களை அள்ளி அணைத்து காப்பாற்றும், நல்வழி காட்டும் உள்ளம் படைத்தவர் இவர்.கொரோனா காலத்தில் எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் மத்திய கிழக்கு நாடுகளில் தவித்த இந்தியர்களை பத்திரமாக பாதுகாத்து தாயகம் அனுப்பிய இவரது செய்கை அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி தேசமே நெகிழ்ந்தது நினைவில் இருக்கலாம்.

அந்த கெளசருக்குதான் அந்தத் தாய் தொலைபேசியில் பேசினார். ‘‘ என் மகனின் உடலை அனுப்ப  உதவ முடியுமா?’’ என்று கேட்டிருக்கிறார்.  கௌசரும் தன்னால் முடிந்ததைச் செய்கிறேன் என்று வாக்களித்துவிட்டு தனது ‘ஹோப் அமீரக’ அமைப்பின் மூலமாக இந்தியத் துணைத் தூதரகத்தை அணுகியிருக்கிறார்.காவல் துறையின் தடையில்லாச் சான்றிதழ் வேண்டும் என்பதால், ஜெபல் அலி காவல் நிலையம் சென்று விசாரித்தபோது அங்கே அந்தப் பெயரில் - அந்த மகனின் பெயரில் - அப்படி ஓர் உடலே இல்லை என்பது தெரிய வருகிறது.

அதனைத் தொடர்ந்து துபாயில் ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் சென்று தேடியும், தலைமைக் காவல் நிலையத்தில் சென்று தேடியும் கூட அப்படி ஓர் உடல் இருப்பதற்கு உண்டான எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை. அவர் இறந்ததைக் குறித்து யார் தகவல் சொன்னார்கள் என்ற கேள்வியை மீண்டும் அந்தத் தாயிடம் கேட்டார். ‘‘துபாயில் இருந்தே அழைப்பு வந்தது...’’ என்று மட்டுமே அந்தத் தாயாரால் சொல்ல முடிந்திருக்கிறது.

‘‘பதினைந்து நாட்களாகி விட்டன. இறந்துபோன என் மகனின் உடலையாவது மீட்டுத் தாருங்கள்...’’ என்று அந்தத் தாய் கதறி அழுததால்,  எப்பாடுபட்டாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு தேடலை ஷார்ஜா உள்ளிட்ட பிற நகரங்களிலும் தீவிரமாக்கியபோது, இறந்து போனவரின் தொலைபேசி அழைப்புகளில் இருந்து ஃபிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் அந்த மகன் பேசியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

அவரைத் தொடர்பு கொண்டு கேட்டால், ‘‘இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் என்னோடு அவர் பணிபுரிந்தார் என்பதைத் தவிர தற்போது எங்கே இருக்கிறார் என்று எனக்கு எதுவும் தெரியாது...’’ என்று கைவிரித்துவிட,  தேடும் படலம் மீண்டும் முட்டுச் சந்தில் சென்று முட்டி நின்றது.என்ன செய்வது என்று தெரியாமல், அந்தத் தாயின் கண்ணீருக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருந்த வேளையில், அந்தச் செய்தி கௌசருக்குக் கிடைக்கிறது.

ஆம். யார் உயிரிழந்து விட்டார் என்று தேடிக் கொண்டிருந்தார்களோ அந்த மனிதர் சவுதி ஜெர்மன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் என்ற செய்திதான் அது.

மாண்டவர் மீண்டார் என்பது போன்ற ஓர் அற்புதம். இதைக் கேட்டதுமே உடனடியாக அந்த தாயின் கண்ணீரைத் துடைப்பதற்காக இந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல்வதற்காக கௌசர் தொலைபேசியில் அழைத்தபோது அவர் நம்பவில்லை.மாறாக, ‘‘இறந்துவிட்ட மகனின் உடலை ஊருக்கு அனுப்பாமல் இருப்பதற்காகப் புதிய கதைகள் சொல்கிறீர்களா?’’ என்று கேட்டு மீண்டும் அழுதிருக்கிறார் அவர்.

அவரது புகைப்படத்தை அனுப்பியும் கூட அந்தத் தாயாரால் தன் மகன் இறந்து விட்டான் என்ற அதிர்ச்சியிலிருந்தும், மனநிலையில் இருந்தும் விடுபடவே முடியவில்லை.
என் மகனோடு பேச வேண்டும் என்ற அந்த தாய் கேட்டதில் இருந்த நியாயத்தை உணர்ந்து கொண்ட கௌசர் பெரும் போராட்டத்திற்குப் பிறகு சவுதி ஜெர்மன் மருத்துவமனையின் மருத்துவர்கள் மூலமாக அந்தத் தாயாருடன் காணொளியின் காண்பிக்கச் செய்திருக்கிறார்.ஆனாலும் பெயர் சொல்லி அழைத்தபின்னும் தன் மகன் தன்னுடன் பேசாததால் அழுதிருக்கிறார் அந்தத்தாய்.

தலையில் அடிபட்டு அறுவை சிகிச்சைக்குப் பின், வலி தெரியாமல் இருப்பதற்கான மயக்க நிலையில் இருப்பதால் அவரால்  பேச முடியாதென்றும் அவர் நலம் பெற இன்னும் ஓரிரு வாரங்களாவது ஆகுமென்பதையும் புரிய வைத்ததற்குப் பின், இறந்து போனதாகக் கருதப்பட்ட தன் மகன் உயிரோடு இருப்பதை அறிந்து மீண்டும் ஒருமுறை கதறி அழுதிருக்கிறார் அந்தத் தாய் - இம்முறை ஆனந்தத்தினால்.

‘‘வழக்கமாக ஆட்கள் காணாமல் போனதாகத் தகவல் வரும். தேடுவோம். இறந்துவிட்டாரென்றோ அல்லது சிறையில் இருக்கிறாரென்றோ தகவல் வரும்.
முதல் முறையாக இறந்தவரைத் தேடும் பணியில் இறங்கினோம். மாண்டவரை மீண்டவராகக் கண்டடைந்திருக்கிறோம்...’’ என்கிறார் ‘ஹோப் அமீரகம்’ குழுவை நிறுவி, அதன் மூலம் பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டுவரும் கௌசர்.

எல்லா ஜன்னல்களும் அடைபட்டுவிட்டன. எல்லா கதவுகளும் மூடப்பட்டு விட்டன என்று நாம் நம்முடைய வலிமையை, நம்பிக்கைகளை, எதிர்பார்ப்புகளை ஒட்டு மொத்தமாகக்‌ களைந்து விட்டு நிற்கக்கூடிய சவாலான சூழல்களில் கூட, ஏதேனும் ஓர் ஒளி எங்கிருந்தேனும் கிடைத்து விடுகிறது - கௌசர் போன்ற நல்ல உள்ளங்களின் அயராத செயல்பாடு காரணமாக.