சிறுகதை-மனசில் இருக்கு மத்தாப்பு...
அவன் அறைக்கு டிபன் கொடுத்து விட்டதே முதலில் பிடிக்கவில்லை சுந்தரத்திற்கு. வாஷ் பேசினில் கையைக் கழுவி விட்டு வந்து தட்டின் முன் உட்கார்ந்தான் அமாவாசை. ‘‘ஒரு நிமிஷம் இரு வந்திடறேன்...’’ என்று அறையை விட்டு வெளியேறினான் சுந்தரம். அவனின் வேகம் அமாவாசையை உலுக்கியது.‘‘எங்கடா போற? சூடு ஆறிடப் போகுது. திரும்பவும் சுட வைக்கவா முடியும்? அம்மாவ சிரமப்படுத்தாத...’’ என்றான்.காதில் வாங்காது அடுப்படியை நோக்கி விரைந்தான் சுந்தரம்.
‘‘சாம்பார், சட்னி எல்லாம்தான் இருக்கே. இன்னும் எதுக்குப் போறே?’’ என்று மேலும் கத்தினான் அமாவாசை. நண்பனின் மனசு அறிந்து பேசுவது போலிருந்தது. எதுவுமே சுந்தரம் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை.‘‘அம்மா... இது உனக்கே நல்லாயிருக்கா..?’’ அடுப்படிக்குள் நுழைந்ததும் முதல் கேள்வியாக இதைக் கேட்டான் சுந்தரம். முகத்தில் கோபம் கொப்பளித்தது.‘‘எது?’’ என்று புரியாதது போல் கேட்டாள் சாவித்திரி. முகத்தைப் பார்த்து ‘‘என்னடா ஆச்சு?’’ என்றாள் சற்றே கோபமாக. ‘‘தெரியாத மாதிரி எப்படிம்மா உன்னால பேச முடியுது?’’ என்றான் மீண்டும் சுந்தரம்.
‘‘டேய்... வெளிப்படையாப் பேசு. இப்ப எதுக்கு இங்க சண்டைக்கு வந்து நிற்கிறே? போய் முதல்ல சாப்பிடு. டிபன் ஆறிடும்...’’‘‘மனசு சூடாயிடுச்சே? அத ஆத்திட்டுத்தான் தோசையைத் தொடணும். அதுக்காகத்தான் வந்தேன்...’’‘‘என்ன பெரிசா சூடாயிடுத்து... என்ன பண்ணிட்டாங்க இங்க? எல்லாம் எங்களுக்குத் தெரியும்.
போய் சாப்டுட்டு வெளில கிளம்புற வழியைப் பாரு...’’ ‘‘நேரடியாவே கேட்கிறேன்... ஏம்மா... ஹாலுக்கு வந்து டைனிங் டேபிள்ல டிபன் வைப்பேன்னு பார்த்தா ரூமுக்குக் கொடுத்தனுப்பறே? நீ சொல்றதையெல்லாம் மண்டையாட்டிட்டுச் செய்றதுக்கு உனக்கொரு அப்பா கிடைச்சாரு. ‘இந்தா டிபன் ரெடி... சாப்பிடுங்க ரெண்டு பேரும்’னு வச்சிட்டுப் போயிட்டாரு.
இங்க வச்சிட்டுக் கூப்ட்டா வரமாட்டமா..? அங்கயே சாப்பிடுங்கன்னு சொல்றது நல்லாயிருக்கா? அது அவன அவமானப்படுத்தின மாதிரி இல்லையா? வந்த விருந்தாளிகிட்டே இப்டி நடந்துக்கிறது தப்பும்மா! அது என்னையே நீ அவமானப்படுத்துற மாதிரி...’’இத்தனையையும் வரிசையாகக் கோர்த்ததுபோல் கிடு கிடுவென்று சொன்னான் சுந்தரம்.
கொஞ்சம் சத்தம் குறைவாகப் பேசினான். நண்பன் அமாவாசைக்குக் கேட்டுவிடக் கூடாதே என்று மெதுவாய்ப் பேசியது அவனுக்கே என்னவோபோல் இருந்தது. இப்டியெல்லாம் செய்ய வேண்டியிருக்கே என்று தோன்றியது.
‘‘இதுல என்னடா அவமானம் இருக்கு? அங்கன்னா உங்க இஷ்டம்போல பேசிச் சிரிச்சிட்டு சாப்பிடுவீங்க. ஹால்லன்னா அந்த சுதந்திரம் கிடைக்காது. அவனும் கூச்சப்படுவான். அது உனக்கும் சங்கடமாயிருக்கும். அதுனாலதான் அங்க கொடுத்தனுப்பினேன்...’’‘‘இல்லம்மா... நீ செய்தது தப்பு. அத உடனே சொல்லணும்னு எனக்குத் தோணித்து.
அதான் சட்னு இங்க ஓடி வந்தேன். என் மனசுக்கு எது பிடிக்குமோ அது மாதிரிச் செய்றது உனக்குப் பிடிக்கும்தானே? அப்படியே செய். இல்லன்னா அப்புறம் நான் ஊர்லயே இருந்திடுவேன். வர மாட்டேன்...’’‘‘அப்போ ஒவ்வொருவாட்டியும் யாரயாச்சும் கூட்டிட்டு ரெட்டையாத்தான் வீட்டுக்கு வருவியா? ஒத்தையா வரமாட்டியா? ரெட்டைன்னுட்டு வேறொண்ணை இழுத்திட்டு வந்து நின்னுடாதே! அது ரொம்ப விபரீதமாப் போயிடும். புரிஞ்சிதா?’’
‘‘வேறொண்ணைன்னா?’’ நின்று திரும்பிப் பார்த்தான் சுந்தரம். அம்மாவின் கேள்விகள் எப்போதுமே உள்ளர்த்தம் பொதிந்தவைதான். மனதுக்குள் தானாகவே பயந்துகொண்டு, வெளியே அதைக் கோபமாக வெளிப்படுத்துவாள்.‘‘வேறொண்ணைன்னா வேறொண்ணுதான். புரியும் உனக்கு. புரிஞ்சிட்டே எதுக்குக் கேட்கிறே? பேசாமப் போ...’’கொஞ்சம் எரிச்சல்பட்டதுபோல் இதைச் சொன்னாள் சாவித்திரி.
அவள் மனதுக்குள் என்னென்னவோ பயம் ஓடிக் கொண்டிருந்தது. இந்தக் காலத்தில் யாரைத்தான் நம்ப முடிகிறது? இது இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்கிற நியதிகளெல்லாம் உடைந்து கொண்டே வருகிறதே? கூட வந்திருக்கும் அவன் நண்பனைப் பார்த்தபோதே இப்படியெல்லாம் மனதில் கற்பனை ஓட ஆரம்பித்து விட்டது அவளுக்கு.
‘பால்ய கால நண்பன்னா அங்கயே பேசிட்டு, அங்கயே கட் பண்ணிட்டு வர வேண்டியதுதானே? அதென்ன கூடவே இழுத்திட்டு வர்றது? யார் யாரக் கூட்டிட்டு வர்றதுன்னு ஒரு விவஸ்தையில்லையா?’ மனதுக்குள் அவளுக்கு இந்தக் கோபம்தான். வெளிச்சமாய்க் கேட்க முடியாத நிலை. கோபத்தை முழுதாயும் மறைக்க முடியவில்லை.
‘‘எதையாவது அர்த்தமில்லாம நீயாக் கற்பனை பண்ணிட்டு பயந்திட்டிருக்கிறதே உனக்கு வேலையாப் போச்சு. நம்ம பய அப்டியெல்லாம் பண்ண மாட்டான். அவனை நாம அப்டியா வளர்த்திருக்கோம்? பூஜை, புனஸ்காரம், ஸ்லோகம், கோயில்னுதானே நல்வழிப்படுத்தியிருக்கோம்? நம்ம எண்ணங்களுக்கு முரணா எதுவும் செய்ய அவனுக்கு மனசு வருமா? அதெல்லாம் ஒண்ணும் நினைக்க வேண்டாம். எல்லாம் நல்லபடியாவே நடக்கும்...’’ சிவானந்தம் சாதாரணமாய்ச் சொன்னார். பையனுக்குக் கல்யாணத்திற்குப் பெண் பார்த்துக் கொண்டிருக்கும் வேளை. ஏதாவது வேறு விதமாய் ஆகிவிடுமோ என்று பதறுகிறாள். கூட வந்திருக்கும் நண்பன் உடன் படித்தவன். அவனுக்கான சலுகைகளைப் பெற்று கிடுகிடுவென்று உயர்ந்து இன்று மருத்துவராகி நிற்கிறான். தன் பையன் தன் வசதிக்கேற்பப் படித்து பரீட்சை எழுதி அரசு வேலைக்குப் போய், அஞ்சல் துறையில் வேலை பார்க்கிறான். அவரவர் வசதி அவரவர் வாய்ப்பு. அதற்கென்ன செய்ய முடியும்? அதற்காக நட்பை விட்டுக் கொடுக்க முடியுமா? இளம் பிராய நட்பு அத்தனை சுலபமாய் முறிந்து கொள்ளுமா?
இப்படித்தான் நினைக்க முடிந்தது சிவானந்தத்தினால். அதுக்காக நட்பில் விளைந்த நண்பன் போல, மனதில் பிறந்த முதிர்ந்த காதல் என்று சொல்லிக்கொண்டு ஏதாச்சும் ஒரு வேற்றுப் பெண்ணையும் இழுத்துக் கொண்டு வந்து நிற்பான் என்று அவளாகவே கற்பனை செய்து கொண்டு பயந்தால்...? விபரீதக் கற்பனைக்கும் ஒரு அளவில்லையா?
அவருக்கு வெளுத்ததெல்லாம் பால். யாரையும் தவறாய் நினைக்க மாட்டார். பழகியவர்கள், பழகாதவர்கள் எல்லோரும் ஒன்றுதான் அவருக்கு. விகல்பமில்லாமல் பேசுவார். எதிராளி யின் பேச்சு தன் பேச்சுக்குப் பொருந்தாமல் திசை மாறுகிறது என்று புரிந்தால், தன் பேச்சைக் குறைத்துக் கொண்டு அவர்கள் பேச்சுக்குத் தலையாட்ட ஆரம்பித்துவிடுவார். அதில் இவர் கருத்தென்ன என்று எதிராளி அறியவே முடியாது.
‘‘உங்களுக்கு எல்லாத்தையும் நான் கவனிச்சுச் சொன்னாத்தான் ஆச்சு. உங்களுக்கா எதுவும் தெரியாது. அதனாலதான் அநாவசியமா எனக்குக் கெட்ட பேரு...’’ ‘‘இப்ப யாரு உன்னை என்ன சொன்னாங்க? எதுக்கு இப்டி அலுத்துக்கிறே? அப்டியென்ன கெட்ட பேரு வந்து போச்சு உனக்கு? உன்னை யாரும் தப்பா நினைக்கல. ஒவ்வொருத்தர் குணம் ஒவ்வொரு மாதிரி. அதுல நீ ஒரு மாதிரி. மனுஷங்க எல்லாரும் ஒரே மாதிரியா இருப்பாங்க? மாறத்தானே செய்யும்?’’
‘‘அதத்தான் சொல்லிப் புலம்பறேன் நானும். அத மாதிரி நம்ம பையனும் ஏதும் மாறிச் செய்திடக் கூடாதேன்னு... அதுக்குத்தான் அடிச்சிக்கிறேன்...’’‘‘அடிக்கவும் வேண்டாம் பிடிக்கவும் வேண்டாம். எல்லாம் நல்லபடியா நடக்கும். நல்லதே நினை. அதுதான் உடம்புக்கும் மனசுக்கும் நல்லது...’’டிபன் முடித்து தட்டுகளை எடுத்து வந்து கொண்டிருந்தான் சுந்தரம். ரெண்டு பேர் தட்டுகளும் இருப்பதைப் பார்த்து, ‘‘நேரா ஸிங்க்ல கொண்டு போட்டுடு மத்தியானம் வேலைக்காரம்மா வந்து தேய்ச்சி அடுக்கிடும்...’’ சொல்லிவிட்டு அவர்கள் அறையில் வைத்திருந்த சாம்பார், சட்னி பாத்திரங்களை எடுக்கப் போனாள் சாவித்திரி.
‘‘ஆன்ட்டி... டிபன் பிரமாதம். சாம்பார் மணக்க மணக்க ரொம்ப ருசி. லேசா வெல்லம் போடுவீங்களோ ஆன்ட்டி?’’
‘ஆஹா... தன் கைபாகத்தைக் கண்டுபிடித்துவிட்டானே இந்தப் பயல்? இத்தனை நாள் இவர்களுக்குத் தெரியாத ரகசியத்தைச் சுடிதமாக இவன் சொல்லி விட்டானே?’ ஒரே சந்தோஷம் சாவித்திரிக்கு.‘‘எப்டிக் கண்டுபிடிச்சே? டக்குன்னு சொல்லிப்புட்டே?’’ மகிழ்ச்சியில் ஒருமையில் கேட்டு விட்டதை நினைத்து நாக்கைக் கடித்துக் கொண்டாள். தன் பையன் வயசுதானே அவனுக்கும்... மனசு சமாதானப்பட்டது.
‘‘இல்ல ஆன்ட்டி... எங்கம்மாவும் இப்டித்தான் சாம்பார் செய்வாங்க... அதான் கேட்டேன்...’’‘ஓ! அங்க வரைக்கும் போயிருச்சா நளபாகம்? இந்தக் காலத்துலதான் எல்லாமே யூடியூப்புல ஓடுதே... யார்தான் சொல்லித் தரணும்?’ நினைத்துக் கொண்டாள்.தன் கைபாகத்தைப் பெருமையாய் நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு சப்பென்று போய் விட்டது.
நாம செய்றதெல்லாம் நம்ம வீட்டு ஆம்பளைங்களுக்குத்தான் பெரிசு. புதுசு! வெளில எல்லாம் அரதப் பழசுதான் போலிருக்கு... எந்த மதிப்புமில்ல...‘‘ஆனாலும் உங்க டேஸ்ட் வரல்ல ஆன்ட்டி எங்க வீட்ல...’’ அந்தக் கடைசிப் பாராட்டில் அக மகிழ்ந்து போனாள் சாவித்திரி. ‘‘இது கல்யாண சாம்பாராக்கும்...’’ என்றாள் பெருமையோடு.
‘மனதாரச் சொல்கிறானா அல்லது பொய்ப் பாராட்டா? ஏதோ ஒன்று. வந்த இடத்தில் பொருத்தமாய்ப் பேசத் தெரிந்திருக்கிறதே! அந்தமட்டும் சமத்துதான் இந்தப் பிள்ளை.’ நினைத்துக் கொண்டாள்.‘‘அம்மா... ரெண்டு பேருக்கும் காப்பி வேணும்...’’ சுந்தரம் வந்து நின்றான். ‘‘போடறேன்...’’ என்றாள் சாவித்திரி.
கூடவே ‘‘காபிக்குன்னு உங்க ரூமுக்குப் போக வேண்டாம். இங்கயே இருந்து குடிச்சிட்டுப் போங்க ரெண்டு பேரும்...’’ என்றாள்.‘‘இல்லம்மா... நாங்க ரூமுலயே இருந்து குடிச்சிக்கிறோம்...’’ என்ற சுந்தரத்தை அர்த்தத்தோடு திரும்பிப் பார்த்தாள் சாவித்திரி.‘‘இந்தக் காப்பியக் கொண்டு அவங்ககிட்டே கொடுங்க...’’ என்றாள் சற்றே சிணுங்கியவளாய். ‘‘அங்க என்னத்துக்கு?’’ என்றவாறே ஹாலில் டைனிங் டேபிளில் கொண்டு வைத்துவிட்டு, ‘‘சுந்தரம்... ஆமா... ரெண்டு பேரும் வாங்க. காப்பி ரெடி...’’ என்று சத்தமாய் அவர்கள் அறையைப் பார்த்துக் குரல் கொடுத்தார் சிவானந்தம்.‘‘இதோ வந்துட்டோம்ப்பா!’’ இரண்டு குரல்களும் சேர்ந்து ஒரு சேர வெளிவந்ததைப் பார்த்த சாவித்திரி அதிசயமாய்த் தன் கணவரை வியப்போடு நோக்கினாள்.பெருமையோடு நோக்கிய சிவானந்தம் “மனசில் இருக்கு மத்தாப்பு...” என்றார் சாவித்திரியைப் பார்த்து.
உஷாதீபன்
|