Must Watch



த ஆர்ச்சீஸ்

இளமைத் துடிப்புடன், கொண்டாட்டத்துடன் கூடிய ஒரு படத்தைப் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கிறது ‘த ஆர்ச்சீஸ்’ எனும் இந்திப்படம். தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. அறுபதுகளில் படத்தின் கதை நிகழ்கிறது. ரிவர்டேல் எனும் அழகான மலைப்பிரதேசம். ஆங்கிலோ இந்தியர்கள்தான் அதிகமாக ரிவர்டேலில் வசித்து வருகின்றனர்.

அந்த ஊரின் அடையாளமாகத் திகழ்கிறது ஒரு பூங்கா. பல வருடங்களாக ரிவர்டேலின் ஓர் அங்கமாகவே திகழ்கிறது அந்த பூங்கா. ரிவர்டேலில் வசித்து வரும் பதின் பருவத்தினரான ஆர்ச்சி ஆண்ட் ரூஸ், பெட்டி கூப்பர், வெரோனிக்கா லாட்ஜ், மேண்டல், ஜோன்ஸ், ஈத்தல் ஆகியோர் நண்பர்களாக இருக்கின்றனர்.  ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலிக்கிறான் ஆர்ச்சி. நண்பர்களின் வாழ்க்கையும், ரிவர்டேல் மக்களின் வாழ்க்கையும் ஜாலியாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அந்த பூங்காவுக்குள் ஒரு பெரிய ஹோட்டலை கட்டுவதற்கு ஒரு பிசினஸ் மேன் திட்டம் தீட்டுகிறார். சூடுபிடிக்கிறது திரைக்கதை. ஷாருக்கான் மகள், அமிதாப்பச்சனின் பேரன், ஸ்ரீதேவியின் மகள் என ஸ்டார் கிட்ஸ் பட்டாளமே நடித்திருக்கிறது. படத்தின் இயக்குநர் ஜோயா அக்தர்.
   
தீப்பொறி பென்னி

அரசியலும், நகைச்சுவையும் கலந்த ஒரு மலையாளப்படம், ‘தீப்பொறி பென்னி’. ‘அமேசான் ப்ரைமி’ல் பார்க்க கிடைக்கிறது. சுயநலமற்ற, தீவிரமான ஒரு கம்யூனிஸ்ட், சேட்டாயி. ஊரில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காக தனது சொந்த நிலத்தையே கொடுத்தவர். எந்தப் பிரச்னை என்றாலும் முன் நின்று போராடுபவர். அவருடைய மகன் பென்னி. அரசு வேலைக்காக போட்டித் தேர்வுகளை எழுதி வருகிறான். முப்பதுக்கும் மேற்பட்ட தடவை போட்டித் தேர்வுகளை எழுதிய பிறகும் கூட அவனால் அரசாங்க வேலைக்குத் தேர்வாக முடியவில்லை.

தவிர, பென்னிக்கு அரசியல் மற்றும் அரசியல்வாதிகளை சுத்தமாகப் பிடிக்காது. குறிப்பாக அவனுக்கும் அப்பாவுக்கும் எப்போதுமே முரண்பாடுதான். எப்போதுமே அப்பாவின் அரசியல் செயல்பாடுகளைக் கிண்டல் செய்துகொண்டே இருப்பான். இப்படியான பென்னி கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகி அரசியல்வாதியாக மாறுகிறான். அவன் எதனால், எப்படி அரசியலுக்குள் நுழைகிறான் என்பதை அறிய படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.

ஓர் அரசியல்வாதி எப்படியிருக்க வேண்டும், எப்படியிருக்கக் கூடாது என்பதை ஜாலியாக சொல்லியிருக்கிறது இந்தப்படம். அர்ஜுன் அசோகன் பென்னியாக கலக்கியிருக்கிறார். ரஜீஷும், ஜோஜியும் இணைந்து படத்தை இயக்கியிருக்கின்றனர்.   

லீவ் த வேர்ல்டு பிஹைண்ட்

‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் ஆங்கிலப் படம், ‘லீவ் த வேர்ல்டு பிஹைண்ட்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. மனிதர்கள் மீது காரணமே இல்லாமல் வெறுப்புடன் இருக்கிறாள் அமண்டா. அவளுடைய கணவர் பேராசிரியர் கிளே. இத்தம்பதிக்கு ஆர்ச்சி என்ற மகனும், ரோஸ் என்ற மகளும் இருக்கின்றனர்.

டெக்னாலஜி மீது காதல் கொண்டவன் ஆர்ச்சி. எப்போதும் ‘ஃபிரண்ட்ஸ்’ வெப் சீரிஸைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் ரோஸ். மனிதர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பதற்காக ஒரு தீவில் தனியாக இருக்கும் வீட்டை வாடைகைக்கு எடுத்து, குடும்பத்தை அழைத்துச் செல்கிறாள் அமண்டா. தீவுக்குச் சென்ற முதல் நாள் அருகிலுள்ள ஒரு கடற்கரைக்கு நால்வரும் செல்கின்றனர். அங்கே கொண்டாட்டத்தில் திளைக்கின்றனர்.  

எண்ணெயை ஏற்றி வரும் கப்பல் ஒன்று கரைக்கு வந்து அவர்களின் கொண்டாட்டத்தைக் கெடுத்துவிடுகிறது. வீட்டில் இண்டர்நெட், மொபைல் என தொழில்நுட்பக் கருவிகள் எதுவும் வேலை செய்யவில்லை. அத்துடன் ஏதோ ஒரு பிரச்னை காரணமாக அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் தனது மகளுடன் அங்கே வந்துவிட, அமண்டாவின் திட்டம் என்னவாகிறது என்பதே மீதிக்கதை.   வித்தியாசமான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சாம் இஸ்மாயில்.

கடக் சிங்

சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்ற இந்திப்படம், ‘கடக் சிங்’. இப்போது ‘ஜீ 5’ல் காணக்கிடைக்கிறது.நிதி மோசடிகளில் ஈடுபடுபவர்களைக் கண்டுபிடிக்கும் துறையில் அதிகாரியாக இருக்கிறார் ஏகே வஸ்தவ். வீட்டில் ரொம்பவே கண்டிப்பாக நடந்துகொள்பவர். அதனால்  மகள் சாக்‌ஷியும், மகன் ஆதியும் அவரை கடக் சிங் என்று அழைக்கின்றனர்.

அம்மாவின் மரணத்துக்கு அப்பாதான் காரணம் என்று கடக் சிங்கின் மீது எப்போதும் வெறுப்புடன் இருக்கிறாள் சாக்‌ஷி. இந்நிலையில் தற்கொலைக்கு முயற்சி செய்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். உயிர் பிழைத்துக்கொண்ட அவருக்கு கடந்த கால நினைவுகள் எல்லாமே மறந்துவிட்டது. மகளைக் கூட அவரால் நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை.

அப்பா தற்கொலை செய்யக்கூடிய ஆள் இல்லை. அப்பாவின் நிலைக்குப் பின்னணியில் மர்மங்கள் இருக்கின்றன என்று நினைக்கிறாள் சாக்‌ஷி. உண்மையில் கடக் சிங்கிற்கு என்ன நிகழ்ந்தது என்பதற்கு பதில் சொல்கிறது திரைக்கதை. திரில்லிங் படப் பிரியர்களுக்கு நல்ல சாய்ஸ் இந்தப் படம். இதன் இயக்குனர் அனிருத்தா ராய் சௌத்ரி.

தொகுப்பு: த.சக்திவேல்