சிறுகதை-உறவுகள் மாறலாம்
ஏதோ சத்தம் வாசலில். சாருமதி கதவு திறந்தாள். சிறுவன் ஒருவன் குளிரில் நடுங்கியபடி அமர்ந்திருந்தான்.உடம்பு சரியில்லையா? யார் இவன் இந்த மாலை வேளையில்?“யாருப்பா?” என்றாள்.
“பக்கத்து ஊருமா... உடம்பு சரியில்ல. அதான் ஆஸ்பத்திரி தேடி நடந்து வந்தேன். நடக்க முடியல அம்மா. எல்லா வீட்லயும் வாட்ச்மேன் விரட்றாரு. இந்த வீட்லதான் திண்ணை இருந்துச்சு. கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போறேன்மா...” என்ற அவன் தேகம் நடுங்கிக் கொண்டிருந்தது.“இருப்பா...’’உள்ள போய் ஜுர மாத்திரையும் தண்ணீரும் எடுத்து வந்தாள்.
தண்ணீரையும் மாத்திரையையும் அந்தத் திண்ணையில் வைத்தாள், சற்று நேரத்தில் காப்பி கலந்து கொண்டு வந்து கொடுத்தாள்.“டம்ளரை அப்படியே திண்ணையிலே வை. நான் அப்புறமா எடுத்துக்கிறேன்...” அவன் தலையாட்டினான். யாரோ? என்ன இனமோ? டம்ளரை காலையில் எடுத்துக் கொண்டால் போச்சு.அது ஒரு இரண்டும் கெட்டான் ஊர். டவுனுக்கு ஒற்றையடிப் பாதை வழியாகத்தான் நடந்து போய் பஸ் பிடிக்க வேண்டும். அநேகமாக எல்லாமே தனி வீடுகள்தான்.
சில வீடுகள் இப்பொழுதுதான் அபார்ட்மெண்ட் ஆகிக் கொண்டிருந்தன. இன்னும் செல்போன் முழுவதுமாக வரவில்லை. முனிசிபாலிடி குழாய்கள் தெருக்களின் ஓரத்தில் இருந்தன. இவர்களின் வீட்டில் கிணறு இருக்கிறது. ஏதோ சொந்த ஓட்டு வீடுதான். வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது யாரோ மீண்டும் வாசல் கதவு தட்ட சீதாராமன் பள்ளியில் இருந்து வந்து விட்டானா? இன்று கொஞ்சம் லேட்.
கொல்லைப் புறம் போய் கால் கழுவிக்கொண்டு உள்ளே வந்தான் சீதாராமன். அதற்குள் சாருமதி சுடச்சுட இட்லி வார்த்து தட்டில் வைத்து மிளகாய் பொடி தூவி சட்னியுடன் கொண்டு வந்து கொடுத்தாள்.இட்லி சாப்பிட்டபடியே சீதாராமன் கேட்டான். “வாசல்ல யாரு பையன்?”
“நான் சொல்லலாம்னு இருந்தேன்...’’ என்று ஆரம்பித்து மெல்ல எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள் சாரு.சீதாராமன் ஏதும் சொல்லவில்லை. என்றுமே அவன் அதிகம் பேச மாட்டான். இவள் ஓர் இலையில் நான்கு இட்லிகளை வைத்து மிளகாய்ப் பொடி தூவி ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்தில் சட்னி வைத்து வாசலுக்கு எடுத்துப் போனாள்.“தம்பி உன் பேர் என்ன?” கேட்டாள்.“என் பேரு ராசா... என்னை எங்கம்மா அப்படித்தான் கூப்பிடும்...” கண் கலங்கினான்.
“சரி இட்லி வைச்சிருக்கேன். சாப்டுட்டு இந்தத் திண்ணையிலேயே படுத்துக்க. இந்த இருட்டுலே காய்ச்சலோட எங்கேயும் போக வேண்டாம். காலைலே போய்க்கலாம். என்ன?’’ அவன் தலையாட்டினான்.மறுநாள் காலை. இவள் வாசலுக்கு போன போது தெருக் குழாயில் தோட்டத்தில் கிடந்த பக்கெட்டில் தண்ணீர் பிடித்து வாசல் தெளித்து இருந்தான். வாசச் செடிகளில் பூத்திருந்த பூக்களை எல்லாம் ஒரு பிளாஸ்டிக் பையில் பறித்து வைத்திருந்தான்.“காபி எடுத்துக்கோ. ஆமா... நீ எங்க போகப் போற? யாராவது தெரிஞ்சவங்க இருக்காங்களா?” கேட்டாள்.
“ஏதாவது வேலை தேடணும். நாலாப்பு படிச்சிருக்கேன். ஏதாவது எடுபுடி வேலை கிடைச்சா போதும். யாரும் தெரிஞ்சவங்க இல்லம்மா. அம்மாவும் செத்துடிச்சு...” கண் கசக்கினான். “ராஜா... நீ எங்கேயும் போக வேண்டாம். இங்கேயே இரு. இதே மாதிரி தோட்ட வேலை பூப்பறிக்கிறது இதெல்லாம் செஞ்சா போதும். இதையெல்லாம் நானேதான் முன்னாடி செஞ்சிட்டு இருந்தேன்...”
“சரி மா...’’ அவன் முகத்தில் மகிழ்ச்சி. மறுநாளில் இருந்து ராஜா ரொம்ப சுறுசுறுப்பாக காலை ஐந்து மணிக்கு எழுந்து தெருக்குழாயில் தண்ணீர் அடித்து வந்து வாசல் தெளித்து பூ பறித்து... மெல்ல மெல்ல அவனுடைய எல்லைகள் விரிவடைய வீட்டுக்குள் நுழைந்து கிணற்று தண்ணீரை எடுத்து ட்ரம்மில் நிரப்பி... அவன் பணி தொடர்ந்தது. மார்க்கெட்டுக்கு சாருமதியுடன் போய் காய்கறி வாங்கி சமையலுக்கு ஏற்பாடுகள் செய்து... காய்கறிகள் நறுக்கித்தந்து...
சீதாராமனுக்கு பள்ளியில் வேலை என்பதால் மாலை டியூஷனுக்கு வீட்டிற்கு மாணவர்கள் வருவார்கள்.சீதாராமன் வீட்டில் வகுப்பு எடுப்பான். ராஜா திண்ணையில் அமர்ந்தபடி கேட்டுக் கொண்டிருப்பான்.“அதான் நாலாப்பு படிச்சிருக்கே இல்ல? உள்ள வந்து உக்காந்து கேளு...’’ இவள் சொன்னாள்.அதன் பிறகு சீதாராமனை வற்புறுத்தி அவனுடைய பள்ளியில் ராஜாவை சேர்ப்பித்தாள்.
“அந்த ராஜாவுக்கு நாம சம்பளம் கொடுக்கறது இல்லை. எத்தனை வேலை செய்யறான்? பேசாம பள்ளிக் கூடத்துலே சேத்து விட்டுடுங்க...” ராஜா பள்ளி செல்ல ஆரம்பித்தான்.பள்ளியில் படித்தால் கூட ராஜா தன் கடமைகளைச் செய்யத் தவற மாட்டான். சாருவுக்கு உதவி செய்வது, தண்ணீர் எடுத்து வைப்பது, காய்கறி நறுக்கிக் கொடுப்பது என்று அவனுடைய தினப்படி வேலைகளில் எந்தத் தடையும் கிடையாது.
“ஐயா...’’ என்று சீதாராமன் மீது பக்தியாக இருப்பான்.சீதாராமன் பள்ளி கிளம்பு முன் அவனுடைய செருப்பை எடுத்து ‘தேவர் மகன்’ கமலுக்கு அடியாட்கள் போடுவது போல பயபக்தியுடன் வைப்பான்.உடன் நடக்க மாட்டான். 10 அடி தள்ளியே நடப்பான்.ஆனால், படிப்பில் முதலாவதாக இருப்பான். பிறகு தரையில் உட்கார்ந்து சாப்பிட்ட ராஜா டைனிங் அறை வந்து சாப்பிட ஆரம்பித்தான்.
காலம் மாறியது. ராஜா டவுனுக்குப் போய் பப்ளிக் எக்ஸாம் எழுதினான்.ஸ்டேட் ஃபர்ஸ்ட் ஆக அவன் மார்க்குகள் வாங்க அவனின் மேற்படிப்புக்கு பல தொண்டு நிறுவனங்களின் ஸ்பான்சர் ஷிப் கிடைத்தது. தன் படிப்பைத் தொடர சென்னை கிளம்பினான்.கண்ணீருடன் விடை கொடுத்தாள் சாரு.அதன் பின் பல வருடங்கள்...
இப்பொழுது செல்போன் காலம். ஓய்வு பெற்றபின் சீதாராமனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனை வாசம். ஆஸ்பத்திரி ஸ்கேன் மருந்து மாத்திரை என்று வாழ்க்கையே தடம் மாறிப் போனது. பிராஸ்டேட் கிலான்ட்ஸ் வீக்கம்...சீதாராமன் மெல்ல மெல்ல படுத்த படுக்கையாகிப் போனான். ஆபரேஷனை உடம்பு தாங்காது என்பதற்காக கை நிறைய மாத்திரைகள் கொடுத்தார்கள்.இனி கடவுள் காப்பாற்றுவார் என்ற டாக்டருடைய உறுதிமொழியோடு சீதாராமன் வீட்டுக்கு வந்தான்.
சீதாராமனுடைய உடல்நிலை அதிகமாக இவள் தன் சகோதரனுக்கு செய்தி அனுப்பினாள்.ஒரே ஒரு சகோதரன் சென்னையில் இருக்கிறார். பார்த்து ரொம்ப நாட்கள் ஆயிற்று. கிராமத்து வீட்டை விற்கும் போது இவள் கையெழுத்து போடப் போனபோது மூர்த்தியைப் பார்த்தது.பங்காளிகள் சண்டை வந்து சொத்து பிரிப்பு... இவள் பங்குக்குக் கையெழுத்து மட்டுமே வந்தது.அதன்பிறகு மூர்த்தி சென்னைக்கு போனார். அப்படியே வாழ்க்கை எல்லோருக்குமே மாறிப் போனது.
செய்தி கேட்டு குழந்தை இல்லாத சீதாராமனுக்கு யார் இறுதிச் சடங்கு செய்வார்கள்? அதனால் இறுதிச் சடங்கை முடிக்க வேண்டியது தன்னுடைய கடமை என்று மூர்த்தி கிளம்பி வந்தார். அண்ணனும் தங்கையும் சிரித்தார்கள், அழுதார்கள். வாழ்க்கையினுடைய திசை மாறுதலை சொல்லி இருவருமே வேதனைப்பட்டார்கள். இத்தனை வருடங்களுக்குப் பிறகு இவள் தரப்பு சொந்தக்காரர்கள். யாரும் இல்லை மூர்த்தியைத் தவிர. ஒருவேளை சீதாராமனுக்கு யாராவது இருக்கலாமா என்பதும் தெரியாது.
இவள் சொன்னாள்.“அண்ணா... அவருடைய பெட்டியில் டைரி இருக்கு. அதுல ஏதாவது எழுதி வச்சிருக்காரா பாரு..? யாராவது தெரிஞ்சவங்க இருந்தா தகவல்
கொடுத்துடலாம்...’’மூர்த்தி பெட்டி திறந்தார்.மவுண்ட்டில் ஒட்டப்பட்ட அந்தப் புகைப்படத்தை பார்த்தவர் திகைத்தார் . “ சாரு... இந்த பையன் யாரு?”
பார்த்தாள். ராஜா... விடைபெறும் முன் அவனுடன் கோயிலுக்குச் சென்று அங்கிருந்த ஒரு போட்டோ ஸ்டூடியோவில் புகைப்படம் எடுத்துக் கொண்ட பழைய நினைவு வந்தது. இந்தப் படத்தை ஃபிரேம் போட்டுத் தாருங்கள் என்று சீதாராமனிடம் எத்தனையோ முறை சொல்லி இருப்பாள்.
“இது ராஜா... நம்ம வீட்டில்...” என்று ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள் சாரு.“இவன் யாரு தெரியுமா? இவன் உன் வீட்டுக்காரரோட பையன். அதாவது உன்னோட பையன். ஞாபகம் இருக்கா சாரு? நம்ம வீட்ல காவேரின்னு ஒருத்தி வேலைக்கு இருந்தாளே... லீவுக்கு சீதாராமன் அங்கே வருவான். அப்போ ஏற்பட்ட பழக்கம்.
யாருக்குமே தெரியாது. ஒரு நாள் காவேரி கர்ப்பமாகி தற்கொலைக்குச் செல்லும் நிலைக்கு வந்த போது நான் கண்டுபிடித்தேன். விவரம் புரிந்து கையில் பணம் கொடுத்து இனி இங்கு வராதே ஊரைவிட்டு ஓடிப்போ என்று அவளைத் துரத்தி விட்டேன். அதற்குப் பிறகு அவள் வரவே இல்லை. ஆனா, ஐந்து வருஷங்களுக்கு அப்பறமா... இதோ இந்தப் பையனைக் கூட்டிட்டு வந்தா. சீதாராமனோட விலாசம் கேட்டா. கடைசி தடவையா பாக்கணும்னு சொன்னா. கொடுத்தேன். அவ செத்துப் போனாளா?’’மூர்த்தி பேசப் பேச சாரு திகைக்கிறாள். அத்தான் ஓடி ஓடி ஊருக்கு வருவது தன்னைப் பார்க்கத்தான் என்று நினைத்து இருந்தாளே... தன்னைப் பார்க்க அல்ல, காவேரியை பார்க்க என்பது இப்போதுதானே புரிகிறது. போகட்டும் ராஜா சீதாராமனின் பையன். ராஜா... வரட்டும். தன் கையாலே கொள்ளி போடட்டும். அப்பாவுக்கு மகன் கொள்ளி போட்டால் அந்த ஆன்மா சாந்தி அடையும்.
“ ஐயா...’’ என்று கூப்பிட்டவன் அப்பா என்று கதறி அழட்டும்.இவள் மூர்த்தியிடம் சொன்னாள்.“அண்ணா எல்லா பத்திரிகையிலும் விளம்பரம் கொடு. ‘ராஜா வா வா’ன்னு கூப்பிடு. கண்டிப்பா வருவான். எனக்கு தெரியும்...’’ என்று சொல்ல பத்திரிகைகளில் எல்லா மொழிகளிலும் விளம்பரங்கள் வர...சீதாராமனுக்கு ஃபிட்ஸ் வந்து விட்டது. இனி சில மணி நேரங்கள்தான்.இறுதி யாத்திரை ஆரம்பிக்கப் போகிறது.
அப்போது வாசலில் டாக்ஸி வந்து நிற்க அதிலிருந்து “ஐயா...” என்று கதறியபடி ராஜா உள்ளே ஓடியே வந்தான். வாலிபனாக வளர்ந்திருந்தான்.
“ஐயா... என்ன பாருங்க ஐயா... நான் ராஜா வந்திருக்கேன்...”சீதாராமன் கைப் பிடித்து கதறினான்.
“ஐயா... என்று கூப்பிடாதே ராஜா... இனிமே அப்பான்னு கூப்பிடு. இவர்தான் உன்னுடைய அப்பா. தெரியுமா?” சாருமதி கேட்கிறாள்.அழுது கொண்டிருந்த ராஜா நிமிர்ந்தான்.“எனக்குத் தெரியும்மா. ஆமாம்மா. எங்க அம்மா சாகும்போது எல்லாம் சொல்லிட்டுதான் செத்துப் போச்சு. போட்டோ எல்லாம் கொடுத்துட்டுதான் செத்துப் போனாங்க. அட்ரஸ் எல்லாம் கொடுத்தாங்க. நான் போய் பள்ளிக்கூடத்துல ஐயாவை பார்த்தேன். ஐயாதான் சொன்னாரு...
‘சரி ஆனது ஆயாச்சு... உன்ன காப்பாற்ற வேண்டியது என்னுடைய கடமை. ஆனா, அந்த வீட்ல நீ நுழையணும்னா அம்மாவோட அனுமதி இல்லாமல் நுழைய முடியாது. நான் சொல்றபடி செய்...ஆனா, ஒண்ணே ஒண்ணு. எக்காரணத்தைக் கொண்டும் நீ என்னை அப்பான்னு கூப்பிடக்கூடாது. அது மட்டும் ஞாபகம் வச்சுக்கோ’னு சொன்னார்.
அதாம்மா ஐயா சொன்னபடி...” ராஜா விம்மினான்.சாருமதி திகைக்கிறாள். ஒரு போலி நாடகம் அவள் கண் முன் அரங்கேறி இருக்கிறது. எதுவுமே தெரியாத பைத்தியக்காரியாக பார்வையாளராக மட்டுமே இவள் இருந்திருக்கிறாள். என்ன கொடுமை இது? இந்த போலி உறவுக்காக, ஊமை உறவுக்காகவா அத்தனை சத்தியப்பிரமாணங்கள்?
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து சப்தபதி எடுத்து வைத்து அக்னி வலம் வந்து... எத்தனை எத்தனை சம்பிரதாயச் சடங்குகள்..?
திருமண உடன்படிக்கைகளை, அது எந்த மொழியாக இருந்தால் என்ன, அதை காப்பது கடமை அல்லவா? அதைத் தகர்த்தெறிவது எத்தனை நம்பிக்கை துரோகம்? இந்தக் கணவனுக்காகவா, தான் பூவுடன் பொட்டுடன் அவர் போவதற்கு முன் போய்விட வேண்டும் என்று இவள் வரம் கேட்டாள்? இந்த ஊமை உறவுக்கு என்ன பெயர்? மாங்கல்யம் என்பது சத்திய்ப பிரமாண ரட்ஷையா? அல்லது வெறும் தூக்குக் கயிறா?
காவேரியுடன் உறவு ஏற்பட்டதைக் கூட இவளால் மன்னிக்க முடியும். ஆனால், எதையுமே சொல்லாமல் நாடகமாடியதை எப்படி மன்னிப்பது? அந்த உறவுக்கு என்ன பெயர்?செடியிலிருந்து பறித்தாலும்... செடியிலேயே விட்டுவிட்டாலும் பூ வாடத்தான் செய்யும். பெண்மையும் அப்படித்தான்.ஆனாலும் மரத்தை வெட்டியபின்னும் அதன் நிழலில் அமர்ந்து பேசிய பல கதைகள் நினைவுக்கு வரத்தான் செய்கின்றன.“அப்பா...” ராஜா கதறுகிறான்.
குருேஸ்ரீத்திரப் போர்க்களத்திலே இறந்த தன் மகன் கர்ணனை தன் மடியில் கிடத்திக்கொண்டு குந்தி, “கர்ணா... என் மகனே...’’ என்று அழுத அதே குரல் இப்பொழுதும் கேட்கிறது. விளிச்சொற்கள்தான் வேறு. பந்தம் ஒன்றுதான்.இவள் எழுகிறாள் “ராஜா... போய் குளிச்சிட்டு வா. நானும் நல்லா குளிக்கணும்...” பேசியபடி நிற்கும் இவள் நெற்றியின் குங்குமம் இவள் வியர்வையில் மெல்ல மெல்ல கரைகிறது.
- விமலா ரமணி
|