நக்சலைட் to அமைச்சர்!



தனசரி அனசுயா சீதாக்கா - சொன்னதுமே திரண்டிருந்த மொத்தக் கூட்டமும் கைதட்டி ஆர்ப்பரிக்கிறது. மேடையேறி மைக் முன் கைகூப்பி நிற்கிறார் சீதாக்கா. அந்த ஆர்ப்பரிப்பு நிற்கவே சில நிமிடங்கள் ஆகின்றன.இந்த ஆர்ப்பரிப்பிற்கு இடையில் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு புன்முறுவலுடன், ‘நீங்க சொல்லுங்க...’ என்கிறார். உடனே, ‘தனசரி அனசுயா சீதாக்கா எனும் நேனு...’ என அவர் சொல்ல மீண்டும் ஆர்ப்பரிப்பு.

இந்த வீடியோ காட்சி செம வைரல். சமீபத்தில் நடந்துமுடிந்த தெலுங்கானா மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிப் மாபெரும் வெற்றியை ஈட்டியது. அப்போது அமைச்சராக பதவியேற்றவர்தான் தனசரி அனசுயா என்கிற சீதாக்கா. அவர் பதவியேற்கும்போதுதான் அத்தனை ஆர்ப்பரிப்பு. 
சீதாக்கா தெலுங்கானா மாநிலத்தின் முளுகு தொகுதியிலிருந்து எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதுமட்டுமல்ல. அவர் முன்னாள் நக்சலைட் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா காலத்தின்போது மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களுக்காக இவர் நிவாரணப் பொருட்கள் கொண்டு சென்ற புகைப்படங்கள் அப்போது வைரலானது.

தெலுங்கானா மாநிலம் ஜக்கன்னகுடெம் கிராமத்தில் கோயா பழங்குடி இனத்தில் பிறந்தவர் சீதாக்கா. தன்னுடைய 14வது வயதில் நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்தார். பிறகு, 1997ம் ஆண்டு அந்த இயக்கத்திலிருந்து வெளியேறி பொது மன்னிப்புத் திட்டத்தின்படி காவல்துறையில் சரணடைந்தார். பின்னர் சிறையில் இருந்தபடியே பத்தாம் வகுப்பு படித்து தேர்வானார். அங்கிருந்து அவருக்குப் படிப்பில் ஆர்வமும், வாழ்க்கையில் பிடிப்பும் உருவானது. தொடர்ந்து சட்டம் படித்து வழக்கறிஞரானார்.

2004ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். அப்போது நடந்த தேர்தலில் முளுகு தொகுதியிலிருந்து போட்டியிட்டார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் போடம் வீரய்யாவிடம் தோல்வியைத் தழுவினார். பிறகு, இதே போடம் வீரய்யாவை எதிர்த்து 2009ல் நின்றார். அப்போது மாபெரும் வெற்றியை ஈட்டி முதல்முறையாக ஆந்திர சட்டசபைக்குள் நுழைந்தார் சீதாக்கா.
தொடர்ந்து அவர் சார்ந்த கோயா பழங்குடியினர் பற்றி சமூகவிலக்கம் மற்றும் இழப்பு என்கிற தலைப்பில் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

‘‘என் சிறுவயதில் நான் நக்சலைட் ஆகணும்னு நினைக்கல. பிறகு நக்சலைட்டாக இருக்கும்போது, நான் வழக்கறிஞராக வருவேன்னு நினைக்கல. வழக்கறிஞராக இருக்கும்போது, எம்எல்ஏவாக ஜெயிப்பேன்னும் நினைச்சதில்ல. எம்எல்ஏவாக இருக்கும்போது, பிஎச்.டி படிப்பை முடிப்பேன்னு நினைக்கல. ஆனா, இதெல்லாமே நடந்தது. இப்போது நீங்கள் என்னை டாக்டர் அனசுயா சீதாக்கானு அழைக்கலாம்...’’ எனக் கடந்த ஆண்டு எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் குறிப்பிட்டார் சீதாக்கா.

தொடர்ந்து 2014ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்டார். அப்போது தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வேட்பாளர் அஸ்மீரா சந்துலாலிடம் தோற்றார். பின்னர் 2017ல் தெலுங்குதேசம் கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் சீதாக்கா. அங்கே அகில இந்திய மகிளா காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆனார்.

தொடர்ந்து 2018ல் மீண்டும் முளுகு தொகுதியிலிருந்து வெற்றிபெற்றார். 2020ல் கொரோனா லாக்டவுன் காலத்தில் தெலுங்கானா, சட்டீஸ்கர் எல்லையிலுள்ள சுமார் 400 கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை அளித்தார். இப்போது 2023 தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறையாக அமைச்சராகி இருக்கிறார்.