சாக்குப் பை ஜாக்கெட்



நியூயார்க்கைச் சேர்ந்த புகழ்பெற்ற ஃபேஷன் டிசைனர், கிறிஸ் மேனா. வித்தியாசமான ஃபேஷன் உடைகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்களில் அப்ளாஸை அள்ளி வருகிறார் கிறிஸ்.
இப்படி சமீபத்தில் அவர் உருவாக்கியதுதான் இந்த சாக்குப் பை ஜாக்கெட். வேண்டாமென்று தூக்கி வீசப்பட்ட தோல் பொருட்கள், காலியான சணல் சாக்குப் பை மற்றும் பழைய பொருட்களை வைத்து நவீன டிசைனில் ஒரு ஜாக்கெட்டை வடிவமைத்திருக்கிறார் கிறிஸ்.

இந்த ஜாக்கெட்டை உருவாக்க ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்டது. கடந்த வாரம் சாக்குப் பை ஜாக்கெட்டை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்தார். ‘‘பிரபல ஃபேஷன் நிறுவனங்களின் தயாரிப்புகளுக்குச் சவால் விடும் வகையில் இந்த  ஜாக்கெட் ஜொலிக்கிறது...’’ என்று  கிறிஸ்ஸின் டிசைனுக்குப் பின்னூட்டங்கள் குவிகின்றன. 

மட்டுமல்ல, பத்துக்கும் மேற்பட்டோர் தங்களுக்கும் சாக்குப் பை ஜாக்கெட் வேண்டுமென்று ஆர்டர் கொடுத்திருக்கின்றனர். இந்த சாக்குப் பை ஜாக்கெட்டின் விலை 2,400 டாலர். அதாவது இந்திய மதிப்பில் 2 லட்ச ரூபாய்!