மகள் திருமணத்தை பார்க்கவிடாமல் தடுத்தவரை தோற்கடித்தார்!



ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களும் காங்கிரஸ் கட்சியின் காலை வார, தெலங்கானா மாநிலத்தில் பெற்ற வெற்றி அக்கட்சியின் கவுரவத்தை கொஞ்சம் காத்துள்ளது. அந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ரேவந்த் ரெட்டி. தெலங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர். 
காங்கிரஸ் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் முதல் காங்கிரஸ் முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார் ரேவந்த் ரெட்டி.பாஜக, பாரத் ராஷ்டிர சமிதி ஆகிய 2 கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைத்திருக்கிறார் ரேவந்த் ரெட்டி. ஆனால், இதற்கு முன்பு அவர் இந்த 2 கட்சிகளிலும் இருந்தவர் என்பதுதான் விநோதமான உண்மை. இந்த 2 கட்சிகளில் மட்டுமின்றி தெலுங்கு தேசம் கட்சியில்கூட சில ஆண்டுகள் இருந்திருக்கிறார் ரேவந்த் ரெட்டி.

ரேவந்த் ரெட்டியின் அரசியல் வாழ்க்கை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தொடங்கியது. உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஏபிவிபி அமைப்பில் இணைந்து செயல்பட்டுள்ளார் ரேவந்த் ரெட்டி. பின்னர் வலதுசாரி பாதையில் இருந்து விலகிய அவர், சந்திரசேகர ராவுடன் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
 தனி தெலாங்கானா மாநிலத்தை உருவாக்குவதற்கான போராட்டத்தில் சந்திரசேகர ராவ் தீவிரமாக இருந்த காலத்தில், அவருடன் ரேவந்த் ரெட்டி சில காலம் இணைந்து செயல்பட்டுள்ளார். 2001 முதல் 2006ம் ஆண்டுவரை அவருடன் இருந்த ரேவந்த் ரெட்டி, பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்திருக்கிறார்.

2009ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கோடங்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அந்த கட்சியிலும் அவரால் நீண்ட காலம் இருக்க முடியவில்லை. தெலங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி பலவீனப்படத் தொடங்கிய காலத்தில், அக்கட்சியினர் பலரும் பி.ஆர்.எஸ் கட்சியில் இணைந்தனர். ஆனால், ரேவந்த் ரெட்டி அந்த ரூட்டில் பயணிக்காமல் காங்கிரஸ் பக்கம் பாதையைத் திருப்பினார்.

2017ம் ஆண்டில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு நெருக்கமானவராக மாறிய ரேவந்த் ரெட்டி, ராகுல் காந்தியின் பாத யாத்திரையிலும் முக்கிய பங்கு வகித்தார்.ரேவந்த் ரெட்டியின் குடும்பத்தினர் யாரும் அரசியலில் இருந்ததில்லை. அவர்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு ரேவந்த் ரெட்டி விவசாயம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் ஈடுபட்டிருந்தார்.

ஆந்திராவின் முன்னாள் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ப்பால் ரெட்டியின் உறவினரான கீதா ரெட்டியை திருமணம் செய்துகொண்டுள்ள ரேவந்த் ரெட்டியின் சொத்து மதிப்பு 30 கோடி ரூபாய்.அரசியல் தலைவர்கள் பலரும் சந்திக்கும் ஊழல் வழக்குகள் ரேவந்த் ரெட்டியையும் விடவில்லை.2015ம் ஆண்டில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக ரேவந்த் ரெட்டி மீது வழக்கு பதியப்பட்டது.

சிறையில் இருந்த நேரத்தில் அவரது மகள் நிமிஷாவின் திருமணம் நடைபெற்றது. ரேவந்த் ரெட்டியின் வழக்கறிஞர்கள் தீவிரமாகப் போராடியும், இந்தத் திருமணத்தில் பங்கேற்க சில மணி நேரங்கள் மட்டுமே ரேவந்த் ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்தது. அந்த சூழலில் சந்திரசேகர ராவை நிச்சயம் ஒருநாள் தோற்கடிப்பேன் என்று சவால் விட்டிருந்தார் ரேவந்த் ரெட்டி.
அந்த சவாலில் இன்று ஜெயித்துக் காட்டியுள்ளார்.

என்.ஆனந்தி