ரூ.12 ஆயிரம் கோடி! இது இந்திய இசை ஈட்டிய வருமானம்
இசை உலகில் கடந்த பல வருடங்களாகவே நடந்திராத அல்லது நடக்குமா என எதிர்பார்த்த விஷயம் அரங்கேறியிருக்கிறது.அதுதான் வருமானம்!கடந்த நான்கு, ஐந்து வருடங்களாக இசைக் கலைஞர்களும் இசையமைப்பாளர்களும் காப்புரிமை என்னும் பிரச்னையை கிளப்பி வருவதை நாம் பார்க்க முடிகிறது.
ஆனால், இந்த இசை உரிமத்திற்கான போராட்டமும் காத்திருப்பும்தான் இன்று இந்திய இசை உலகத்திற்கு வேறு ஓர் அங்கீகாரத்தை உலக அரங்கில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதாவது 2022 கணக்கின்படி ரூ.12 ஆயிரம் கோடி வருமானம் இசையால் மட்டும் கிடைத்திருக்கிறது என்பதுதான் அந்த ஆச்சரியம். பொதுவாக இந்த இசை காப்புரிமைகள் குறித்து கேட்கும் போதெல்லாம் ஒவ்வொரு இசைக் கலைஞரும் பலவாறான பிரச்னைகளைத்தான் சந்திக்கிறார்கள். ஆனால், இதன் பின்னணியில் உலக அரங்கில் நமக்கான எத்தனையோ அங்கீகாரங்கள் உள்ளன.
பல வருட போராட்டங்களுக்குப் பிறகு இந்த வரலாறு சாத்தியப்பட்டிருக்கிறது. சீரமைக்கப்பட்ட காப்புரிமை சட்டம் வந்தபின்புதான் உலக தரவரிசை பட்டியலில் நாம் குறிப்பிடத்தக்க அந்தஸ்தைப் பெற்றிருக்கிறோம். இதற்கு முன்பு வரை உலக அளவில் இசையின் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்து இந்தியாவுக்கு 25வது இடத்திற்குப் பிறகுதான் தரவரிசைப் பட்டியலில் இடம் கிடைத்தது. ஆனால், சமீபத்திய இசைக்கான உரிமைச் சட்டத்தை முறைப்படுத்தியதன் மூலம் உலக அளவில் இந்தியாவின் இசை மூலம் கிடைத்த வருமானத்தின்படி நமக்கு 14வது இடம் கிடைத்திருக்கிறது. இசையும் டிஜிட்டலும்
இந்திய இசை மார்க்கெட்டை பொருத்தவரையில் உலக அளவில் இந்த இடத்தை நாம் பெறுவதற்கு ஏராளமான தடைகளைத் தாண்டி வந்திருக்கிறோம். இந்தியன் பெர்ஃபார்மிங் ரைட் சொசைட்டி லிமிடெட் (IPRS) - இந்தியாவின் மிகப்பெரிய காப்புரிமைக்குழு இதுதான் - கூறியுள்ள தகவலின்படி கடந்த ஆறு வருடங்களில் மட்டும் இதிலுள்ள உறுப்பினர்கள் சுமார் ரூ.900 கோடியை காப்புரிமைத் தொகையாகப் பெற்றிருக்கிறார்கள்.
டிஜிட்டலில் இசையைக் கேட்டு ரசிக்கும் பழக்கம் வந்தது முதல் இந்திய இசையின் மதிப்பு உயரத் துவங்கிவிட்டது. பல்வேறுபட்ட இசைக் கலைஞர்கள் உருவாக்கிய இசையை டிஜிட்டலில் பலவிதமாக கேட்டு பயன்பெற்றதன் மூலம் உலக அளவில் 14வதாக தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது இந்திய இசை.
எனினும் இதில் இசை பிரசுரம் என்கிற விகிதாச்சாரத்தில் இன்றளவும் 23வது இடத்தில்தான் நாம் இருக்கிறோம். இதற்குப் பின்புலத்தில் சில சட்ட சிக்கல்களும் இசைக் கலைஞர்களின் சரியான தலையிடலும் இல்லாதது ஒரு காரணம். இதற்கு வழிவகுக்கத்தான் ‘த மியூசிக் கிரியேட்டர் எக்கனாமி’ என்னும் குழுமம் டிசம்பர் 5ம் தேதி நிறுவப்பட்டு இசை வெளியீட்டு வருமானத்தையும் கணக்கிடத் துவங்கியுள்ளது. இதில் இசையைக் கேட்டு ரசிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட அதிகாரபூர்வ செயலிகளான spotify மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட இதர பல செயலிகளும் இந்திய இசை மார்க்கெட்டில் தங்களது பெரும் பங்கை கொடுத்துள்ளன. டிஜிட்டல் களத்தில் ஒரு பாடலை எத்தனை முறை கேட்கிறோம்... எத்தனை முறை மற்றவர்களுக்கு பகிர்கிறோம்... என அத்தனையும் துல்லியமாகக் கிடைத்து விடும்.
இதனாலேயே 2022ம் ஆண்டிற்கான இசை வருமானம் பன்னிரண்டாயிரம் கோடி ரூபாயைத் தொட்டிருக்கிறது. அதேபோல் இசை லேபிள்கள் 2500 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி உள்ளது.
வெளியீட்டு வருமானத்தைப் பொருத்தவரை இன்னமும் சில தடைகள் நீக்கப்பட வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே தற்சமயம் ரூ.884 கோடி வருமானம் வரை மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது.
டிஜிட்டலில் வருமானம் 100% எனக் கொண்டால் இதில் இசையின் மூலம் கிடைத்த வருமானம் மட்டும் 47 சதவீதம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வருமானம் இந்தியாவில் இருக்கும் சுமார் 40,000 இசைக் கலைஞர்கள் உருவாக்கிய வருமானம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மியூசிக் கிரியேட்டர் எக்கானமி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி சுமார் 20,000 ஒரிஜினல் பாடல்கள் ஒவ்வொரு வருடமும் இந்திய இசைக் கலைஞர்களால் வெளியிடப்படுகின்றன.
இதில் டிஜிட்டல் தளங்களின் வழியே வருமானம் ரூ.5692 கோடியும், பிராட்காஸ்ட் ப்ளாட்பார்ம் மூலம் ரூ.4350 கோடி வருமானமும் கிடைத்திருக்கிறது. திரைப்படப் பாடல்களும் இசையும் ஒன்றிணைந்து ரூ.1200 கோடியும், லைவ் கான்சர்ட்டுகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒன்றிணைந்து எண்ணூற்று ஐந்து கோடி ரூபாயும் வருமானம் ஈட்டி இருக்கின்றன. கடந்த மூன்று வருடங்களை கணக்கிடுகையில் இந்த வருடம் கிடைத்துள்ள வருமானம் சுமார் 2.5 மடங்கு அதிகம் என்பதுதான் ஆச்சரியத்திற்குரிய விஷயம்.
*டேட்டாவிலும் வருமானம்
ஒவ்வொரு வருடமும் டிஜிட்டல் தளங்களின் மூலம் பாடல்களை கேட்டு மகிழும் தருவாயில் - பாடல்கள் கேட்கும் எண்ணிக்கை மட்டுமின்றி அதற்காக செலவிடப்படும் டேட்டாக்களின் அளவும் அதிகரிக்கும். இதனை டேட்டா ரெவென்யு என்பர். இந்த கணக்கீட்டின்படி இணைய பயனாளர்கள் இசையையும் பாடல்களையும் கேட்பதற்காக மட்டுமே 70 சதவிகித டேட்டாக்களைச் செலவிட்டு இருப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
*இசைக் கலைஞர்களுக்கு கிடைத்த சுதந்திரம்
அமெரிக்க இந்திய பாடகி மற்றும் நடிகை ஷனோன் கே இதுகுறித்து கூறுகையில், ‘‘டிஜிட்டல் தளங்கள் இசைக்கென தனி மேடை கொடுத்ததன் விளைவு இன்று இசையில் ஆர்வமுள்ள அல்லது அடிப்படை இசை தெரிந்த யார் வேண்டுமானாலும் இசை அமைத்து பாடல்கள் பாடி வரிகள் எழுதி தங்களது படைப்புகளை தங்களுக்கு பிடித்த தளங்களில் எங்கு வேண்டுமானாலும் வெளியிடலாம் என்கிற நிலை உருவாகி இருக்கிறது.
இதனால் தனித்திறமைகள் வெளிப்படத் துவங்கியிருக்கின்றன. இதற்கு இன்னும் அரசாங்கமும் சில வழிகளையும் சட்டதிட்டங்களையும் சீர்படுத்தினால் இன்னும் நிறைய கலைஞர்கள் மூலம் அரசுக்கும் பெரும் வருமானம் கிடைக்கும்...’’ என்கிறார்.இன்னும் ஆச்சரியத்திற்குரிய தகவல் என்னவென்றால் 47% டிஜிட்டல் காப்புரிமையில் தனி இசைப் பாடல்களும், பக்திப் பாடல்களும் - குறிப்பாக சர்வதேச இந்தியக் கலைஞர்களின் பாடல்கள்மட்டுமே 20% முதல் 25% வருமானத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறது.
*எந்த பாடல்... எந்த இடம்?
உலகளாவிய இசையில் எத்தனை தனி இசை பாடல்கள் வந்தாலும், எத்தனை பாடகர்கள் பிரபலமானாலும், இந்திய திரை இசைக்கு மட்டும் இன்றளவும் மதிப்பும் மரியாதையும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் ‘புஷ்பா’ படத்தில் சுனிதி சௌகான் பாடிய ‘சாமி...’ பாடல் மட்டும் 1.5 பில்லியன் பார்வையாளர்களுடன் யூடியூப்பில் இன்றளவும் முதலிடத்தில் அங்கம் வகிக்கிறது.
தொடர்ந்து அதே படத்தின் ‘ஊ அண்டாவா...’, மற்றும் ‘ஸ்ரீவள்ளி...’ பாடல்களும் முறையே ஒன்று புள்ளி 52 மற்றும் 1.3 பில்லியன் பார்வையாளர்களுடன் பிரம்மாண்டம் காட்டி இருக்கிறது.
இதற்கிடையில் நமக்கு கிடைத்த இசைக்கான ஆஸ்கர் உள்ளிட்ட விருதுகளும் கூட இந்த காப்புரிமை வருமானத்தில் மாபெரும் அங்கம் வகிக்கிறது.
இன்னமும் இருக்கும் சட்டதிட்டங்களை சீர்படுத்தி காப்புரிமைகளை ஒழுங்குபடுத்தினால் கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் முதல் மேடைகளில் பயன்படுத்தப்படும் பாடல்கள் வரையென அனைத்திலும் சீரான காப்புரிமை உருவாக்கினால் இந்த வருமானம் பன்மடங்கு உயரும் என்பது மட்டும் உறுதி. அப்போதுதான் தற்சமயம் இன்னொரு கோடியில் மட்டுமே இருக்கும் வெளியீட்டு வருமானத்தை அப்படியே இரண்டு மடங்காகப் பெறவும் சாத்தியங்கள் உண்டாகும். வெளியீட்டு வருமானத்தில் மட்டும்தான் இந்திய இசை மார்க்கெட் உலக இசை மார்க்கெட்டைவிட சற்று பின்தங்கி இருக்கிறது.
என்றாலும் உலக அரங்கில் இன்று உயர்ந்து நிற்கும் நாடுகளைக் காட்டிலும் இந்திய மார்க்கெட்தான் ஒவ்வொரு வருடமும் அதிக அளவில் பாடல்கள், இசைகளை வெளியிட்டு வருகின்றன.
இதனால் காப்புரிமையில் 14வது இடம் என்பதும் வெளியீட்டில் 23வது இடம் என்பதும் இன்னும் முன்னோக்கிச் செல்லலாம் என்கிறது உலக அக்கவுண்டிங் மற்றும் வரி ஆலோசனைகள் புரஃபஷனல் குழுமமான யேர்ன்ஸ்ட் மற்றும் யங் (EY).
ஷாலினி நியூட்டன்
|