மாறுது உலகம்... கெத்து காட்டுகிறது AI
Chatgptஐ விட வலிமை... வந்தாச்சு கூகுள் ஜெமினி!
‘ஜெமினி’ என்றாலே எஸ்.எஸ்.வாசனின் சினிமா தயாரிப்பு நிறுவனமும், நடிகர் ஜெமினி கணேசனுமே நம் நினைவிற்கு வருவார்கள். ஆனால், இப்போது அதனுடன் ஒரு செயற்கை நுண்ணறிவும் சேர்ந்திருக்கிறது!ஆம். பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், ‘ஜெமினி’ என்ற வலிமைமிக்க மல்டிமாடல் செயற்கை நுண்ணறிவை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஓபன்ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி என்ற ஏஐ மூலம் பல்வேறு பணிகளை எளிதாக சாத்தியமாக்கி வருகிறது. இந்நிலையில், கூகுள் இந்த ஏஐயை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சேவையானது நானோ, ப்ரோ, அல்ட்ரா (Nano,Pro,Ultra) ஆகிய மூன்று வடிவங்களில் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது. இதில் நானோவும், ப்ரோவும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. அல்ட்ராவை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளது கூகுள் நிறுவனம். இதில் ‘ஜெமினி அல்ட்ரா’ மிகப்பெரிய, திறமையான வகையைச் சார்ந்தது. ‘ஜெமினி ப்ரோ’ பரந்துபட்ட அளவிலான பணிகளைச் செய்கிறது. ‘ஜெமினி நானோ’ குறிப்பிட்ட பணிகள் மற்றும் மொபைல் சாதனங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏஐ மூலம் நம் பணிகளை எல்லாம் எளிதாக்கிக் கொள்ளலாம்; எந்த ஒரு விஷயத்தையும் வேகமாகச் செய்யமுடியும்; எதிர்காலம் ஏஐ காலம் என்றெல்லாம் சொல்லப்பட்டுவரும் நிலையில் கூகுள் ஜெமினி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஏஐ நிபுணர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமாரிடம் பேசினோம். ‘‘மனித நுண்ணறிவு - அதாவது நாம் யோசிப்பது, கற்பனை செய்வது, படைப்பது உள்ளிட்ட இன்டலிஜென்ஸ் விஷயங்களை இயந்திரங்கள் மூலம் சாத்தியப்படுத்துவதே செயற்கை நுண்ணறிவு. இதைத்தான் ஓபன்ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி மூலமும், கூகுள் நிறுவனம் ஜெமினி மூலமும் நமக்கு வழங்குகின்றன.
கூகுள் நிறுவனம் கடந்த 2000ம் ஆண்டில் இருந்தே இந்தச் செயற்கை நுண்ணறிவுக்கான பணிகளை முன்னெடுத்திட்டு வர்றாங்க. இதற்காக ‘கூகுள் ப்ரைன்’ (Google Brain), ‘டீப் மைண்ட்’ (Deep Mind)னு இரண்டு பிரிவுகளை உருவாக்கினாங்க. இவை ஏஐ தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சிப் பிரிவுகள். ஒருகட்டத்துல இந்த ரெண்டு பிரிவுகளையும் இணைச்சாங்க. இதுல டீப் மைண்ட் பிரிவில் சில முன்னேற்றங்களைக் கொண்டு வந்தாங்க. அதாவது, மோட்டார் ஸ்கில்ஸ்னு சொல்வோம். உட்கார்வது, எழுந்துபோவது, நடப்பது, குதிப்பது, ஓடுவது... இதுபோல உடல் அசைவுகள் எல்லாம் மோட்டார் ஸ்கில்ஸ்ல வரும்.
அடுத்து இன்டலிஜென்ஸ். யோசிப்பது, படைப்பது உள்ளிட்டவை இதனுள் வரும். இந்த மோட்டார் ஸ்கில்ஸையும், இன்டலிஜென்ஸையும் இணைக்கிற விஷயங்களை டீப் மைண்ட் பிரிவுல மேற்கொண்டாங்க. பிறகு, இந்த ரெண்டு விஷயங்களையும் எப்படி மிஷினுக்குக் கற்றுக் கொடுப்பதுனு யோசிச்சாங்க. அதற்கு கூகுள், ஆர்.எல்னு ஒருமுறையைக் கொண்டு வந்தாங்க. அதாவது reinforcement learningனு பெயர். இதுக்கு சில இலக்குகளை நிர்ணயம் செய்தாங்க.
உதாரணத்திற்கு நாம் குழந்தைகளிடம் இந்த நேரத்திற்குள் இந்த வேலையை முடித்துவிட்டால் நீ கேட்டதை வாங்கித்தருவேன்னு சொல்வோம் இல்லையா... அதுபோல இந்தச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கும் இலக்கு நிர்ணயிச்சு கத்துக்கொடுத்தாங்க. இந்தக் கற்றலுக்குப் பிறகு அது அனுபவத்தின் வழியாக சிறந்த பயிற்சியாளராக மாறுச்சு. இதற்கு Deep Q-Network (DQN)னு பெயர் வச்சாங்க. இது நிறைய விஷயங்களை ஆர்.எல் வழியாக கத்துக்கிட்டு இன்னும் பல நெட்வொர்க்கை உருவாக்கியது.
இப்படி டீப் மைண்ட் பிரிவு, இந்த ஆர்.எல் வழியாக டீப் க்யூ நெட்வொர்க்கை உருவாக்கி செயற்கை நுண்ணறிவைக் கொண்டு வந்தது. இதன்பிறகு பலகட்ட சோதனைக்கு இந்த ஏஐயை உட்படுத்தினாங்கஇதில் முதலாவதாக அடாரி (Atari)னு 2டி கேம்ஸ் இருக்கு. ரொம்ப சவாலான விளையாட்டு. இதுல கை,கால்களை அசைக்கணும் அதேநேரம் யோசிக்கவும் செய்யணும். இந்த செயற்கை நுண்ணறிவை ஐம்பது அடாரி கேம்ஸ்ல சோதனை செய்தாங்க. அது எல்லா விளையாட்டுகளிலும் எளிதாக ஜெயிச்சது. இதன்பிறகு, இதனை மறுஅளவீடு செய்றாங்க.
அதாவது அடாரி கேம்ஸைவிட கஷ்டமான விளையாட்டுகளைக் கொடுத்தும், அதுல வெவ்வேறு ஸ்டெப்ஸ் கொடுத்தும் விளையாடச் செய்தாங்க. அதிலும் வெற்றி பெறுது. அப்புறம், நிறைய விளையாட்டுகள் கொடுத்து இதில் எது பெஸ்ட்னு கேட்குறாங்க. அதையும் மதிப்பீடு செய்து கொடுக்குது.
இப்படி பல விஷயங்களைச் செய்யும் தொழில்நுட்பமாக வளர்ந்தது. அப்புறம், 3டி கேம்ஸ் உள்ள வந்தாங்க. இதன்பிறகு, 2016ம் ஆண்டு Goனு ஒரு கேம்ல விளையாட வைக்கிறாங்க. இதன்பெயர் ஆல்பாகோ (AlphaGo). இது கேரம் போர்டு காயின்ஸ் மாதிரி இருக்கும். ரொம்ப கஷ்டமானது. இந்த விளையாட்டுல இந்தச் செயற்கை நுண்ணறிவு உலக சாம்பியன் ஆனது. அப்புறம், ஆல்பாஸ்டார் (Alphastar)னு இதைவிட பவர்ஃபுல்லான கேமை உருவாக்குறாங்க. அதிலும் வெற்றி பெறுது. அப்புறம், புரோட்டீன் மூலக்கூறுகளை பகுத்தாய்வு செய்து தீர்வு சொல்லும்படி செய்தாங்க. இதற்கு ஆல்பாஃபோல்டு (AlphaFold)னு பெயர் வச்சாங்க.அடுத்து, ஆல்பாகோடு (AlphaCode). அதாவது நாம் கம்ப்யூட்டர்ல புரோகிராம் எழுதுறோம், கணக்குகளுக்கு தீர்வு காண்றோம் இல்லையா... இதை இந்தச் செயற்கை நுண்ணறிவுக்குக் கொடுத்து தீர்வு காண வச்சாங்க. அதுவும் சிறப்பாக தீர்வுகளைத் தந்தது.
இதனையடுத்து ஆல்பாடெவ் (AlphaDev)னு கொண்டு வந்தாங்க. அதாவது ஆல்பா டெவலப்பர்னு பெயர். இது வானிலையை துல்லியமாக கணக்கீடு செய்யும். அணு உலைகளின் வெப்பநிலை, கொதிநிலை இவற்றை ஆராய்ந்து கட்டுப்படுத்தும் பணிகளுக்கும் உதவியது. இப்படி பல்வேறு செயற்கை நுண்ணறிவை டீப் மைண்ட் பிரிவுல உருவாக்கினாங்க.இப்படி போயிட்டு இருந்தப்ப 2017ம் ஆண்டு LaMDAனு (Language Model for Dialogue Applications) ஓர் உரையாடல் செயலியை உருவாக்கறாங்க. இந்நேரம் ஓபன்ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி 3.5னு கொண்டு வர்றாங்க.
அடுத்து இவங்க PaLM (Pathways Language Model)னு கொண்டு வந்தாங்க. அவங்க சாட்ஜிபிடி 4னு கொண்டு வர்றாங்க. இதன்பிறகு கூகுள் Bard வந்தது. இது உரையாடலுக்கான செயற்கை நுண்ணறிவு. இதைத்தான் இப்ப நாம் பயன்படுத்திட்டு வர்றோம். இந்த Bard தொழில்நுட்பம் வழியாக டெக்ஸ்ட் டூ டெக்ஸ்ட் கொடுக்கலாம்.இதன்பிறகு டெக்ஸ்ட் டூ இமேஜிற்காக ‘imagen’னு கொண்டு வந்தாங்க. இதிலும் பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்காக project Euphoniaனு கொண்டு வர்றாங்க. இப்படி நிறைய வெர்ஷன்ஸை அவங்க உருவாக்கிக்கிட்டே வர்றாங்க.
ஓர் இடத்துல டெக்ஸ்ட் தேவைப்படுது. இன்னொரு இடத்துல இமேஜ் தேவைப்படுது. மற்றொரு இடத்துல ஆடியோவும், இன்னொரு இடத்துல வீடியோவும், ஓர் இடத்துல கம்ப்யூட்டர் கோடிங்கும், கணக்கு ஃபார்முலாவும் தேவைப்படுது. இப்படி பல தேவைகள். எல்லாவற்றையும் ஏஐ கொடுக்குது. ஆனா, இவையெல்லாமே கூகுள் உருவாக்கின தனித்தனியான மாடல்களாக இருக்குது. அதனால, நிறைவாக ஒரு மல்டிமாடல் உருவாக்கலாமேனு நினைக்கிறாங்க. அதுதான் ஜெமினி ஏஐ!’’ என விரிவாகக் குறிப்பிட்டவர், தொடர்ந்தார்.
‘‘இந்த மல்டிமாடல் நாம் கொடுக்கும் டெக்ஸ்ட், இமேஜ், வீடியோ, ஆடியோ, கோடிங்னு எதையும் ஒரே நேரத்தில் புரிஞ்சுக்கிட்டு எல்லாவற்றுக்கும் பதிலளிக்கும். பேப்பர்ல எழுதிக் காட்டினால்கூட அது என்னனு சொல்லும். இதனை அவங்க கொடுத்திருக்கிறடெமோ மூலமே அறியலாம்.இப்படியொரு செயற்கை நுண்ணறிவுக்காகத்தான்கடந்த இருபது ஆண்டுகளாக மேலே குறிப்பிட்ட அத்தனை சோதனைகளையும் ஒவ்வொன்றாக செய்தாங்க. அதனாலதான் இதை மோஸ்ட் பவர்ஃபுல்னு உலகமே வியக்குது.
இதுல நானோ என்பது சிறியது. இதில் ஏதாவது உள்ளீட்டைக் கொடுத்தால் அதை சுருக்கித் தரும் பணியைச் செய்யும். ஜிபோர்டுல சில வசதிகள் செய்து கொடுக்கும். வாட்ஸ்அப்லயும் ஜிபோர்டை பயன்படுத்தும்போது சில வசதிகள் தரும்.உதாரணத்திற்கு உங்களுக்கு யாரோ வாட்ஸ்அப்ல ஹாய் சொல்றாங்கனு வைப்போம். நீங்க அதுக்கு ஒரு பதில் அடிப்பீங்க. இந்த பதிலை நானோ ஏஐ அதுவே ஸ்மார்ட்டாக தயார் செய்து தந்திடும். நீங்க டைப் பண்ண வேண்டியதேயில்ல.
அப்புறம், நீங்க ஒரு மணி நேரம் சாட் பண்ணியிருக்கீங்க. சாட் முடிஞ்சதும் என்ன பேசினோம்னு இதனிடம் கேட்டால் சுருக்கமாக விஷயங்களைக் கொடுத்திடும். அந்தளவுக்கு ஜெமினி நானோ சிறப்பானதாக செயல்படும்.இதைவிட கொஞ்சம் கூடுதல் வசதிகள் உள்ளது ஜெமினி ப்ரோ. உதாரணத்திற்கு கூகுள் சர்ச், ஜிமெயில், டிரைவ், சாட் எல்லாம் கூகுளின் சர்வீஸ்கள். இவற்றில் எல்லாம் ஜெமினி ப்ரோ உதவிகள் செய்யும். இது டெவலப்பர்ஸுக்கும் உதவியாக இருக்கும்.
பொதுவா நீங்க கூகுள் சர்ச் எஞ்சின்ல ஏதாவது ஒரு விஷயத்தைத் தேடுறீங்க. அது பதில்களை அளிக்கும். ஆனா, இந்த ஜெமினி ப்ரோவுல அது பலமடங்கு வேகமானதாக இருக்கும். இந்த வடிவத்துல இறுதியாக வர்றதுதான் ஜெமினி அல்ட்ரா. அதை வச்சுதான் இதை இன்னும் வலிமையானதுனு சொல்றாங்க. ஏன்னா, இதை சோதிப்பதற்கு பென்ச் மார்க் டெஸ்ட்னு சொல்வாங்க. இதுல 32க்கு 30 பாஸாகியிருக்கு. அதனால, ரொம்ப ரொம்ப பெட்டர்னு சொல்றாங்க.
பொதுவாக, சாட்ஜிபிடி4 ஒற்றை மாடல் டெக்ஸ்ட்டை அடிப்படையாகக் கொண்டது. நமது உள்ளீட்டை (Input) ஒரு டிரில்லியன் சிறுதரவுகளாக மாற்றி (Token) யோசிக்கும். வல்லுனர் தேர்விலும் பெரிதாக வெற்றி பெறல. ஆனா ஜெமினி ஏஐ, பன்முக மாடல் கொண்டது. டெக்ஸ்ட், ஆடியோ, வீடியோ, இமேஜ்னு நமது உள்ளீட்டை ஐந்து டிரில்லியனுக்கும் மேற்பட்ட தரவுகளாக்கி யோசிக்குது. வல்லுனர் தேர்வுகள்லயும் வெற்றி பெற்றிருக்கு.
அதனாலேயே ஜெமினி ஏஐ, ஓபன்ஏஐனு நிறுவனத்தின் சாட்ஜிபிடியைவிட ரொம்ப வலிமையானதுனு சொல்றாங்க. சாட்ஜிபிடியைவிட சோதனைகள்லயும் ஜெமினி ஏஐ பெட்டராக பாஸாகி இருக்கு. இப்ப இந்த ஜெமினி ஏஐயை கூகுள் bard-லேயே சேர்த்து கொடுக்கறாங்க. அப்புறம், கூகுள் போன் pixel 8-ேலயும் ஆண்ட்ராய்டு 14-லேயும் ஃப்ரீயா தர்றாங்க.
இனி எதிர்காலத்துல ஏஐ பயன்பாடே அதிகமாக இருக்கும். கூகுள் டீப் மைண்ட் சிஇஓ டெமிஸ் ஹஸாபிஸ், ‘ஏஐ ரொம்ப சக்தி வாய்ந்த தொழில்நுட்பம். இதுவரை நமக்கு கிடைச்சிருக்கிற தொழில்நுட்பத்துல இதுவே ஆகச்சிறந்தது. கூகுள் நிறுவனம் பல சேவைகள் வழங்குது. அதிலெல்லாம் இந்த தொழில்நுட்பத்தைப் புகுத்தி மனிதர்களின் எல்லா தேவைகளுக்கும் பயன்படுவதுபோல் மாத்துறதுதான் எங்க நோக்கம்’னு சொல்லியிருக்கார். அதை நோக்கிதான் அவங்க பயணிக்கறாங்க. நாமும் அதன் பயன்பாட்டை புரிஞ்சுக்கிட்டு நல்வழியில் பயன்படுத்தணும்...’’ என்கிறார் ஐ.எஸ்.ஆர்.செல்வகுமார்.
பேராச்சி கண்ணன்
|