தமிழகத்தின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர்!



வைஷாலி என்றால் யார் என்று கேட்பவர்கள் கூட இளம் செஸ் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவின் சகோதரி என்றால் சட்டென்று அடையாளம் காண்பார்கள்.
ஆனால், பிரக்ஞானந்தாவை முன்னிலைப்படுத்தி வைஷாலியைக் குறிப்பிடுவது அவரது திறமையை நாம் அவமதிப்பதற்கு சமம்.ஏனெனில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வைஷாலி பெற்றிருக்கிறார்! ஸ்பெயினில் நடைபெற்ற செஸ் போட்டியில் பங்கேற்ற அவர், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தரவரிசைப் பட்டியலில் 2,500 புள்ளிகளுக்குமேல் பெற்று இந்தப் பட்டத்தை வென்றிருக்கிறார்.

இதன்மூலம் அவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் மூன்றாவது இந்தியப் பெண் எனும் பெருமையைப் பெற்றிருக்கிறார். இதற்குமுன் கோனேரு ஹம்பியும், ஹரிகா துரோணவல்லியும் இந்தப் பட்டத்தைப் பெற்றிருக்கின்றனர். தமிழக அளவிலோ இவர்தான் முதல்! ஆம். தமிழ்நாட்டு அளவில் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் வைஷாலிதான்.
ஏற்கனவே பிரக்ஞானந்தா கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றிருக்கிறார். இப்பொழுது இவரது சகோதரியான வைஷாலியும் அதே பட்டத்தை வென்றிருக்கிறார். இதனால் உலகிலேயெ கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் அக்கா - தம்பி என்ற பெருமையை இவ்விருவரும் தட்டிச் செல்கின்றனர்.

கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை இன்று வென்றிருக்கும் வைஷாலிக்கு வயது 22.  ஆனால், பதினொரு ஆண்டுகளுக்கு முன்பே - அதாவது 2012ம் ஆண்டு - 12 வயதுக்கு உட்பட்ட பெண்கள் உலக இளைஞர்கள் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வைஷாலி வென்றிருக்கிறார். அதேபோல் 2015ம் ஆண்டு, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவிலும் பட்டத்தை வென்றார். 2021ம் ஆண்டில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். இப்படி வுமன் இண்டர்நேஷனல் மாஸ்டர் பட்டத்தை தனது 15 வயதிலேயே பெற்ற பெருமை வைஷாலிக்கு உண்டு.

தனது 14வது வயதில் மும்பையில் நடந்த தேசிய பெண்கள் சேலஞ்சர்ஸ் போட்டியில் வைஷாலி வெற்றி பெற்றார். இளையோர்களுக்கான பல போட்டிகளில் அதற்குமுன் வைஷாலி வெற்றி பெற்றிருந்தாலும், அந்தப் போட்டியில் வெற்றி பெற்றதுதான் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. 

இதன் பிறகு சர்வதேச அளவில் அவர் பெற்ற - பெற்று வந்த - பட்டங்கள் அனைத்துக்கும் இப்போட்டியே பிள்ளையார் சுழி போட்டது.வுமன் இண்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் மட்டுமல்லாமல் 2021ம் ஆண்டு இண்டர்நேஷனல் மாஸ்டர் பட்டமும் வென்றார். அதற்கு முன்பாக 2020ல் கொரோனா காலத்தில் நடைபெற்ற ஆன்லைன் ஒலிம்பியாட் போட்டியில் இவரது ஆட்டத்தின் காரணமாகவே இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.

அதே போன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அவர் இடம்பெற்றிருந்த இந்திய பெண்கள் அணி வெண்கலப் பதக்கம் பெற்றது.

கடந்த 2017ம் ஆண்டு ஏஷியன் இண்டிவிஜுவல் பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வைஷாலி தங்கம் வென்றபோது இந்தியப் பிரதமர் அவரைப் பாராட்டினார்.
மறு ஆண்டே - அதாவது 2018ம் வருடம் வைஷாலி இந்தியாவின் பெண் கிராண்ட் மாஸ்டரானபோது, இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் செஸ் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் மனம் திறந்து பாராட்டி டுவிட் செய்தார்.உலக கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வெல்ல கிராண்ட் மாஸ்டர் நார்ம் (Grand master norm) எனப்படும், ரேட்டிங்கை மூன்று முறை பெற வேண்டும்.

வைஷாலி அதனை 2019ம் ஆண்டு முதல் முறையும், 2022ம் ஆண்டு இரண்டாவது முறையும் பெற்றுள்ளார். மூன்றாவது முறையும் வென்ற பிறகு சர்வதேச சதுரங்க ராணியாக வலம் வருவார்.

வைஷாலி கடுமையாக உழைப்பவர் என்றும் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்பது அவரது வாழ்நாள் லட்சியம் என்றும் அவரது பயிற்சியாளர் ரமேஷ் தெரிவிக்கிறார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக பயிற்சி அளித்து வரும் அவர், வைஷாலி இளம் வயது முதலே செஸ் ஆடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர் என்கிறார்.

“வைஷாலி கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதில் ஓர் அடி மட்டுமே எடுத்து வைக்க வேண்டியுள்ளது. இது அவரது வாழ்நாள் லட்சியம். நிச்சயம் அதை வெகு சீக்கிரம் பெற்று விடுவார்...” நம்பிக்கையுடன் சொல்கிறார் ரமேஷ். வைஷாலி ஏற்கெனவே பெண்கள் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். அதனால் உலகிலுள்ள முதல் 50 பெண் செஸ் வீரர்களில் ஒருவராக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

சென்னை பாடி பகுதியைச் சேர்ந்தவர் வைஷாலி. அவரது தந்தை கூட்டுறவு வங்கி மேலாளராகப் பணிபுரிகிறார். போலியோ நோயால் பாதிக்கப்பட்டதால், வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளுக்கு அவர் உடன் செல்வதில்லை. வீட்டை பராமரித்து வரும் அவரது தாய், தனது இரு பிள்ளைகளுடன் அவர்களின் போட்டிகளின் போது உடனிருந்து ஆதரவு அளித்து வருகிறார்.

இளம் வயதில், வீட்டில் இருக்கும் நேரத்தை உபயோகமாக செலவழிக்க வேண்டும் என்பதற்காக வைஷாலியின் பெற்றோர்கள் அவரை வீட்டுக்கு அருகில் உள்ள செஸ் வகுப்புகளுக்கு அனுப்பினர். அப்போதுதான் வைஷாலிக்கு செஸ் அறிமுகமானது.

தனது ஆறாவது வயது முதல் ஆடத் தொடங்கிய வைஷாலி கடந்த பதினாறு ஆண்டுகளாக பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வென்றுள்ளார். சென்னையில் சதுரங்கத்துக்கு போதுமான வசதிகள் இருந்தாலும், ஆரம்ப நாட்களில் சதுரங்கப் பயிற்சி மேற்கொள்ளவும், பயணச் செலவுகளை ஈடுகட்டவும் சிரமப்பட்டுள்ளார்.

ஆரம்ப நாட்களில் பயிற்சி மேற்கொள்ள வைஷாலியிடம் கணினி இல்லை. சதுரங்கத்தின் அடிப்படை அறிவைக் கற்றுக்கொள்ள பெரும்பாலும் புத்தகங்களைத்தான் நம்பினார்.2012ம் ஆண்டு உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகுதான் வைஷாலிக்கு ஸ்பான்சர்கள் மூலம் ஒரு மடிக்கணினி கிடைத்தது. அதுதான் வைஷாலியை ஒரு நல்ல சதுரங்க வீராங்கனையாக மேம்படுத்தியது.

அவரது பள்ளியும் கல்லூரியும் அவரது செஸ் ஆர்வத்துக்கு எப்போதுமே தடையாக இருந்ததில்லை. அவருக்குத் தேவையான ஊக்கத்தை தொடர்ந்து அளித்து வந்துள்ளன. நடைபெற்று வரும் ஆசிய போட்டிகளில் பத்து பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார் வைஷாலி. இந்தப் போட்டிகளில் விளையாடுவது மூலம் அவர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற முடியாது என்றாலும் இந்தியாவுக்காக விளையாடுவது பெருமையானதே.

“கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவது இந்தப் போட்டிகளின் மூலம் சாத்தியமாகாது. இவை டி20 போல வேகமாக விளையாடும் ஆட்டங்கள். டெஸ்ட் போட்டி போல மெதுவாக ஆடும் வேறு சில போட்டிகளின் மூலமே அவர் மூன்றாவது கிராண்ட் மாஸ்டர் நார்ம் பெற முடியும்...” என்கிறார் பயிற்சியாளர் ரமேஷ்.

ஒரு போட்டிக்காக மட்டும் என வைஷாலி எப்போதும் தன்னை தயார் செய்து கொள்வதில்லை. செஸ் ஆடுவது அவருக்கு தினசரி பழக்கமாக உள்ளது. “தினமும் உணவு உண்ணுவதைப் போல்தான் செஸ் ஆடுவது. தேர்வு நேரத்தில் மட்டுமே கூடுதலாக சாப்பிட மாட்டோம் இல்லையா? அதே போலதான் செஸ் ஆட்டத்துக்கான எனது தயாரிப்புகளும்...” புன்னகையுடன் சொல்கிறார் வைஷாலி.

ஜான்சி