விஷால் நம்மை நேருக்கு நேராகப் பார்த்தாலே அவர் கண்கள் எக்குத்தப்பாக இருப்பதாகவோ, அல்லது அவர் கண்கள் சரியாக இருக்கின்றவா என்று சரிபார்க்கவோதான் தோன்றுகிறது. எல்லாம் ‘அவன் இவனி’ல் பாலா செய்த மாயம். விஷாலும் அந்த மாய வளையத்துக்குள்ளிருந்து இப்போதுதான் சிறிது சிறிதாக விடுபட்டுக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்.
‘‘முதல்ல இப்படி கண்களை இடுக்கி மாறுகண் காட்டி நடிக்கப் போறேன்னு எங்க டாக்டர்கிட்ட ஆலோசனை கேட்டப்ப, ‘உனக்கென்ன பைத்தியமா, இப்படியெல்லாம் விபரீதமா பண்ணாதே...’ன்னுதான் அவர் சொன்னார். அதையும் மீறி நடிச்சேன். ஷூட்டிங்ல படாதபாடு பட்டேன். அதுவும் கண்களையும் இடுக்கி நவரசம் காட்ற சீன்ல என் உணர்வுகள் ரொம்பவும் தறிகெட்டுப் போச்சு. நான் உணர்ச்சிவசப்பட்ட நிலைக்குப் போனதைப் பார்த்து பாலாவே பதறிப் போய், ‘மீதியை நாளைக்குப் பாத்துக்கலாம்’னு ‘பேக் அப்’ சொன்னார். பிறகு டான்ஸ் மாஸ்டர் சிவசங்கரோட உதவியோட பொறுமையா அந்தக் காட்சியை முடிச்சேன். ஆனா அதுக்கெல்லாம் பலன் கிடைக்காமப் போகலை.

சத்யராஜ் சாரும், சிவகுமார் சாரும் படம் பார்த்துட்டு, ‘‘அடுத்த பல வருஷங்களுக்கு சாதிக்க வேண்டியதை ஒரே படத்தில சாதிச்சுட்டே... பட்ட கஷ்டத்துக்கு இனி எங்கேயாவது போய் மாசக்கணக்கா ஓய்வெடுத்துட்டு வா...’ன்னு சொன்னாங்க. ‘தெய்வத்திருமகள்’ பார்த்து, ‘ச்சே... விக்ரம் இப்படி பின்னியிருக்காரே...’ன்னு நினைச்சா... பக்கத்தில உட்கார்ந்திருக்க அவர் என் தோளைத் தட்டி, ‘அவன் இவன் படத்தோட யு.எஸ்.பி நீதான்...’ங்கறார். மணிவண்ணன் சார் போன் போட்டுப் பாராட்டியதை வெளியில சொல்லமுடியாது. அத்தனை உயர்ந்த பாராட்டு அது. வைஜெயந்திமாலா பாலி போன்ல வந்து, ‘இத்தனை அழகா நவரசங்களை எல்லா டான்சர்ஸும் கொடுத்துட முடியாது...’ன்னு பாராட்டும்போது அதுக்கெல்லாம் எப்படி ரீயாக்ட் பண்றதுன்னு தெரியாம குழம்பிக்கிட்டிருக்கேன். இப்படி இயலாமையோட இருக்கிறது எனக்கு ஒரு புது அனுபவம்.
உண்மையைச் சொன்னா இப்ப தான் என் கண்கள் இயல்புக்குத் திரும்பியிருக்கு. இன்னும் கூட டிவி ஸ்க்ரோலிங் எழுத்துகளைப் பார்த்தா கலங்கலாத் தான் தெரியுது. பின் மண்டையில சரியா அஞ்சு மணிக்கு ஒரு வலி வரும். அது இப்ப கொஞ்சம் தேவலாம்...’’ என்று சிரிக்கும் விஷால் அதற்குள் அடுத்த ‘வெடி’யைக் கொளுத்த இருக்கிறார்.
ஜி.கே. பிலிம்ஸ் கார்ப்பரேஷனுக்காக பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘வெடி’, இன்னும் ஒரு பாடல் படம்பிடித்தால் வெளியீட்டுக்குத் தயாராகும் அளவுக்குப் பரபரவென்று நடந்து முடிந்திருக்கிறது. அதைப் பற்றியும் தொடர்ந்தார் விஷால்...

‘‘கொல்கத்தால ஃபிசிக்கல் ட்ரெயினரா வர்ற என் வாழ்க்கையைப் பற்றிய உண்மைகள் தான் வெடியா வெடிக்கும். நம்ம ‘சிறுத்தை’ சிவா தெலுங்கில இயக்கிய ‘சௌரியம்’தான் இதுன்னாலும், அதைப் பார்த்து ரசிச்சுட்டு, அடுத்த படமா இதைப் பார்த்தாலும் ரசிக்க முடியும். பிரபுதேவாவோட நகைச்சுவை உணர்ச்சிஅலாதியானது. அது படம் முழுக்கத் தெரியும். அதோட பிளானிங்லயும், ஒரு சீனை இம்ப்ரூவைஸ் பண்றதிலயும் கில்லாடி அவர். இதை ரசிகர்களுக்கான ஒரு ஃபுல் மீல்ஸா கொடுத்திருக்கார் அவர்.
என்னோட உயரம், நிறம்னு எல்லாத்துக்கும் சரியா பொருத்தமான சமீரா ரெட்டி ஜோடியானதும் படத்துக்கு ப்ளஸ். பூனம் கவுர் இன்னொரு ஜோடி. என்னோட கல்லூரித்தோழன் விஜய் ஆண்டனி இசையமைச்சிருக்க பாடல்கள் செப்டம்பர் ஒண்ணில இருந்து ஊரைக் கலக்க ஆரம்பிச்சுடும். படத்தோட ஆரம்பப் பாடலுக்கு சமீரா கூட இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் போட்டிருக்க ஐட்டம் நம்பர் ஆட்டம் ஹைலைட்டா இருக்கும். நான், சமீரா, விவேக், பிரபுதேவா, விஜய் ஆன்டனி, ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்ன்னு ஆளாளுக்கு வெடிக்கிற வெடி ரசிகர்களுக்கு தீபாவளியைத் திரையில கொண்டுவந்துடும்..!’’
வேணுஜி