வங்கத்து வரவு என்றாலும் ரீமா சென் திரைப்படத்துக்குள் வந்ததும் வளர்ச்சியடைந்ததும் தென்னிந்தியப் படங்களில்தான். எனவே தென்னிந்தியப் படங்களின் மேல் ரீமாவுக்கு ஒரு ‘இது’... இளமை பூரிக்கும் காதல் படங்களிலேயே பொதுவாக அவரைப் பார்த்திருந்தாலும், செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவனி’ல் அபாரமான நடிப்பாற்றலில் மிரட்டியிருந்தார் ரீமா. அந்த ஆயிரத்தில் ஒரு பாத்திரம் தந்த மதிப்பில், ‘இனி நல்ல வேடங்களில் மட்டுமே நடிக்கவேண்டும்’ என்கிற உறுதியும் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
அப்படி அவர் உறுதி எடுத்துக் கொண்டால் ஆயிற்றா..? அதன் மேல் விழுந்த இடியாக ரீமா தன் தாய்மொழியான பெங்காலியில் 2004ம் ஆண்டு நடித்து வெளியான ‘இடி ஸ்ரீகாந்தா’, இப்போது தமிழில் ‘இளவரசி’யாக வெளிவரவிருக்கிறது. அந்தப்படத்தின் விளம்பரங்களில் அவர் தோற்றமளிக்கும் படங்களைப் பார்த்தால் அது ஒரு பாலியல் படம் போன்ற தோற்றத்தையே ஏற்படுத்த... அதைப் பார்த்து வெகுண்டு எழுந்திருக்கிறார் ரீமா. படங்களில் காதல் பார்வை மட்டுமே வீசத் தெரியும் என்று நாம் நினைத்திருந்த அவரது ரசகுல்லா கண்கள் கோபக்கனல் வீசியதைப் பார்த்தபோது சின்ன உதறலெடுத்தது நிஜம்.
‘‘இந்த ‘இடி ஸ்ரீகாந்தா’ படத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்னு எனக்குத் தெரியாது. சொல்றேன் கேளுங்க...’’ என்றபடி சொல்ல ஆரம்பித்தார். ‘‘புகழ்பெற்ற பெங்காலி எழுத்தாளர் சரத்சந்திர சட்டர்ஜி எழுதிய பிரபலமான புதினம் அது. வங்கத்தோட புகழ்பெற்ற எழுத்தாளரான அவரோட நாவல்கள் பல படமாகியிருக்கு. அதில ஒண்ணுதான் சாகாவரம் பெற்ற ‘தேவதாஸ்’ங்கிற காவியம். அதேபோல ஒரு காவியம்தான் இந்தப்படத்தோட கதையும். 1910ல இந்தக்கதையை சரத் சந்திரர் எழுதினார். ‘ஸ்ரீகாந்தா’ங்கிற மனிதனைப் பற்றிய கதை அது.
மனம் போன போக்கில வாழ்க்கையைத் தேடற அந்த மனிதனோட சிறுவயதுத் தோழியா நான் வர்றேன். காலத்தோட கோரத்தால என்னை ஒரு பாலியல் தொழிலாளியா சந்திக்கிறான் ஸ்ரீகாந்தா. அவன் மேல எனக்கு இருந்த பழைய நட்பு, உள்ளூர காதலாகுது. என்னை இந்தக் கொடுமையான சூழல்ல இருந்து மீட்கிற மீட்பனா அவனைப் பார்க்கிறதால, அவன் எனக்கு மட்டும்தான்ங்கிற மாதிரி ஒரு சுயநலத்தை ஏற்படுத்துது.

சொல்லப் போனா இந்தக் கதை இந்திய கலாசாரம், சமூகநீதி சார்ந்தது. சரத்சந்திரரோட எழுத்துல உருவான காவியம்ங்கிறதுக்காகவும், இரண்டு தேசிய விருதுகள் பெற்றவரும் சர்வதேச படவிழாக்கள்ல மதிக்கப்படும் வங்க இயக்குநருமான அஞ்சன்தாஸ் டைரக்ஷன்ல நடிக்கக் கிடைச்ச அற்புதமான வாய்ப்புங்கிறதுக்காகவும் இலக்கியத்தரமான இந்தப் படத்தில ஒத்துக்கிட்டு நடிச்சேன். இந்தப் படம் 2004ம் வருஷத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. ஆனா இத்தனை வருஷம் கழிச்சு இந்தப்படம் தமிழ்ல வரப்போறதையும், அதுவும் மூணாம்தரப்படம் போன்ற புரமோஷனையும் பார்த்து திடுக்கிட்டுப் போனேன். வெளியான அந்தப் படங்களும் கூட கிராபிக்ஸ் செய்யப்பட்டவை.
ஒரு காவியமான படத்தை இத்தனை கீழ்த்தரமா கண்ணியமில்லாம புரமோட் பண்றதை ஒருக்காலும் ஒத்துக்க முடியாது. இந்தப் படத்தோட புரட்யூசரும், டைரக்டரும் ஏற்கனவே தமிழ்ப்பட வெளியீட்டாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க. அப்படியும் இது தொடர்ந்தா நானும் சும்மா இருக்க மாட்டேன். இந்தப்படத்தின் மேல என்னோட நடவடிக்கையும் தொடரும்...’’
வேணுஜி