நோயாளிகள் இரண்டு ரகம்.
தங்கள் நோயை டாக்டர் கண்டுபிடிப்பதற்குள் & குறைந்தபட்சம் ஊகிப்பதற்கு ஸ்டெதஸ்கோப்பை எடுக்குமுன் & தாங்களே கடகடவென தங்களுக்கு என்ன கோளாறு, அதனுடைய முன்கதைச் சுருக்கம், நடுக்கதைச் சுருக்கம், பின்கதைச் சுருக்கம் என்று சகல விவரங்களையும் கூறி, சாப்பிட்ட மருந்து, மாத்திரைப் பட்டியலையும் கடகடவென ஒப்பித்துத் தள்ளிவிடுவார்கள்.
இன்னொரு ரகம் வாயே திறக்காதவர்கள். டாக்டரிடமுள்ள பயத்தால் அப்படி மௌனமாக இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. ‘டாக்டர்தான் நம்மிடம் ஃபீஸ் வாங்குகிறாரே இருநூறும் ஐந்நூறுமாக... அவரே கண்டுபிடிக்கட்டும்... நாமே சொல்லி, அப்புறம் அவரென்ன நமக்கு வைத்தியம் செய்யறது’ என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறவர்கள்.
இந்த ரகத்தினர் டாக்டரின் கேள்விக்கு ஓர் இஞ்ச், அரை இஞ்ச் அளவுதான் பதில் தருவார்கள். அந்த பதிலும் டாக்டரைக் குழப்புவதாகத்தான் இருக்கும்.
‘‘என்ன பண்ணுகிறது?’’ என்று விசாரிக்கிறார் டாக்டர்.
‘‘எங்க வீட்டிலே யாருக்குமே இல்லை’’ என்கிறார் நோயாளி.
‘‘என்ன இல்லை?’’
‘‘ஆஸ்த்மாதான்.’’
‘‘மூச்சு இரைக்கிறதாக்கும்?’’
‘‘ம்ஹும்... மூச்சிரைப்பு இல்லை. சும்மா கெர் கெர்னு தொண்டையில் கபம் சேர்ந்துவிட்டதோ, இல்லே வேறென்னவாவதோ தெரியலை. வறட்டு இருமல். கஷாயம் சாப்பிடறேன். கடுப்பாயிட்டுது.’’
‘‘வயிற்றுக்கடுப்பா?’’
‘‘ஊஹும்... கஷாயம் சாப்பிடறதுக்குக் கடுப்பா இருக்கு. க்ளைகோடின் பரவாயில்லையா? வோகடின் சாப்பிட்டிருக்கேன். இரண்டிலே எது தேவலாம்? ரெண்டையுமே இது ஒரு வேளை, அது ஒரு வேளை சாப்பிடலாமா?’’
டாக்டருக்கு இப்போ ரொம்பக் கடுப்பாகிவிட்டது... ‘‘நீங்க வெளியிலே போய் அரை மணி நேரம் வெயிட் பண்ணுங்க. முதலிலே பி.பி. பார்க்கணும்.’’
‘‘நான் நார்மல்தான். ஒன் ட்வென்டி பை நைன்ட்டி.’’
‘‘அது மாறிக்கொண்டே இருக்கும். நீங்க போய் வெளியே உட்காருங்கள்...’’ என்று நெட்டித் தள்ளாத குறையாக வெளியேற்றி விட்டார்.
பலவித நோயாளிகள் பற்றி நண்பன் நாராயணனிடம் பேசிக்கொண்டிருந்தேன். ஹாலில் மாட்டியிருந்த ராமகிருஷ்ணர், விவேகானந்தர் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவன், ‘‘புண்ணிய புருஷர்களைக்கூட நோய்கள் படுத்தி எடுப்பதுதான் எனக்கு விளங்காத புதிராக உள்ளது’’ என்றவன், நோயால் பாதிக்கப்பட்ட ஆன்மிகப் பெரியோர்களின் பட்டியலை கடகடவென ஒப்பித்தான்... ‘‘ஸ்ரீராமகிருஷ்ணர் தொண்டையில் கான்ஸர், விவேகானந்தர் தொண்டையில் புண், ரமண மகரிஷி கையில் கான்ஸர், சின்மயானந்தா இதய நோயால் பாதிக்கப்பட்டார்...
‘‘ஏன்? ஏன்? ஏன்?’’
அவனது கேள்விக்குப் பதில் சொல்லக்கூடிய தகுதி எனக்கு இல்லை.
சமீபத்தில் அவனுடன் எனது குருவின் ஆசிரமத்துக்குச் சென்றேன். (அது எங்கே இருக்கிறது, ஆசார்யரின் அப்பாயின்ட்மென்ட் கிடைக்குமா என்று செல்லைத் தூக்க வேண்டாம்!) மகானின் தரிசனம் சுலபத்தில் கிடைத்தது. பரபரப்போ, விளம்பரமோ இல்லாத ஆசிரமத்தில் அமைதியாக ஐந்தாறு பேர் கொண்ட கூட்டம் காத்திருந்தது.
பக்தர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லுமுன், குரு அனைவரையும் தமது பூஜை அறைக்கு முன் அமர வைத்தார். ஒவ்வொருத்தர் கையிலும் சிறு புஷ்பக்கூடை தந்தார்.
பூஜை அறையில் ஒரு சிவலிங்கம் எல்லாரது கண்ணுக்கும் தெரியும்படியாக பெரிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டி ருந்தது. உள்ளே சென்று அந்த லிங்கத்துக்கு மலர் தூவி பூஜிக்கவும் இட வசதி செய்யப்பட்டிருந்தது. ஆசார்யர் மந்திரத்தைக் கூறிக் கொண்டிருந்தார். ஒவ்வொருவராகச் சென்று தம் கைப்பட லிங்கத்துக்கு மலர் தூவி வணங்கி வந்தோம்.
எல்லோரும் வெளியே வந்து அமர்ந்த பிறகு ஆசார்யர் விசிட்டர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
‘‘மகான்களையும் நோய்கள் விட்டு வைப்பதில்லை... ஏன்?’’ & நண்பன் நாராயணன் என் குருவிடம் கேட்டே விட்டான்.
அவர் ஆற்றிய உரையின் சாராம்சத்தை (நான் புரிந்துகொண்ட அளவு) இங்கே தந்திருக்கிறேன்...
‘‘பக்தர்களின் நோய் நொடிகளைப் புண்ணிய புருஷர்கள் தங்களுடையதாக ஏற்றுக்கொண்டு அந்தத் துன்பத்தைத் தாங்களே அனுபவிக்கிறார்கள். மகான்களுக்கு உண்மையில் நோய், நொடிகள் கிடையாது. தெய்வமே அவர்கள் மூலமாக பக்தர்களின் வலியைத் தாங்கிக் கொள்கிறது. பக்தர்களின் வலியை மட்டுமல்ல... அவர்களது பிரச்னைகளையும், அவர்களுக்கு எதிரிகளால் நேரும் துன்பங்களையும் அவரே நீக்குகிறார்.
‘எனக்காக சண்டை போடுங்கள். என்னைக் காப்பாற்றப் போர் புரியுங்கள்’ என்று மனிதன் தனது ஆயுதங்களை இறைவனிடம் தருகிறான். நமக்காக சிரமப்படும் அவருக்கு ‘மெய் நோகுமே’ என்று விசிறி விடுகிறான். நமக்காக சோறு தண்ணீர் இல்லாமல் உழைக்கிறாரே என்று அவருக்கு விதவிதமாகச் சமைத்து பிரியத்துடன் படைக்கிறான். நமக்காக உழைத்துவிட்டு வந்த அவரது உடல் களைத்திருக்குமே என்று படுக்கையிட்டுப் படுக்க வைக்கிறான். அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறான். அவருக்கு திருஷ்டி கழிக்கிறான். பல்லாண்டு அவர் வாழ வேண்டுமென வாழ்த்துகிறான்.
ஒரு போலீஸ்காரர் நாம் திருட்டுக்கொடுத்த பொருளைத் தேடிக் கண்டுபிடிக்க சிரமப்படுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். ‘அது அவரது கடமை’ என்று பொருளைப் பறிகொடுத்தவன் கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தால் அவன் ஒரு முட்டாள். ஒரு டாக்டரிடம் செல்லும் நோயாளி, ‘ஃபீஸ்தான் கொடுக்கிறோமே... நமது நோயை டாக்டரே கண்டுபிடிக்கட்டும்’ என்று வாயை இறுக மூடிக்கொண்டிருந்தால் அது அறியாமை.நமக்காக உழைப்பவருடைய சிரமத்தைக் குறைக்க நாமும் முயலவேண்டும். நமக்காக வேலை செய்கிறவருக்கு வசதி செய்து தரவேண்டும். தெய்வங்களுக்கு மனிதன் ஆயுதங்களை அணிவிப்பது இதனால்தான்!’’
(சிந்திக்கலாம்...)
பாக்கியம் ராமசாமி