அல்வா...வயது வித்தியாசமின்றி அனைவரும் விரும்பும் இனிப்பு!
கோதுமை அல்வா, கேரட் அல்வா, பாதாம் அல்வா... இப்படி சில வகைகள் மட்டுமே நமக்குத் தெரிந்திருக்கும். சென்னையைச் சேர்ந்த சந்திரப்ரியா, விதம்விதமான அல்வா செய்வதில் எக்ஸ்பர்ட்! கார்ன்ஃபிளேக்ஸ், ஓட்ஸ், பார்லி என இவர் செய்கிற எல்லாமே சத்தான அல்வா வகைகள்!
‘‘இங்கிலீஷ் லிட்ரேச்சர் முடிச்சிட்டு, வேலை பார்த்திட்டிருந்தேன். குழந்தை பிறந்ததும் வேலையைத் தொடர முடியலை. சமையல்ல நான் எக்ஸ்பர்ட். குறிப்பா எல்லா வகையான ஸ்வீட்ஸும் பண்ணுவேன். என் பையனுக்கு அல்வா ரொம்பப் பிடிக்கும். அவனுக்காகவே தினம் தினம் ஏதாவது ஒரு அல்வா செய்வேன். அப்படியே சமையற்கலை வகுப்புகள் எடுக்க ஆரம்பிச்சேன். ஸ்வீட்ஸ் கிளாஸுக்கு, அதுலயும் அல்வா வெரைட்டி கத்துக்க நிறைய பேர் ஆர்வமா இருக்காங்க. வீட்டுக்குச் செய்யறதோட இல்லாம, இதை பிசினஸா எடுத்துச் செய்தாலும் நல்ல லாபம் பார்க்கலாம்’’ என்கிற சந்திரப்ரியா, கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.
என்னென்ன தேவை? முதலீடு?‘‘ஆரம்பத்துல வீட்டுல உள்ள கடாய், கரண்டி, பாத்திரங்களே போதும். என்ன அல்வா செய்யப் போறோமோ, அதுக்கேத்த மளிகைப் பொருள்கள், நெய், சர்க்கரை என எல்லாம் சேர்த்து, அவரவர் பட்ஜெட்டை பொறுத்து 500 அல்லது 1000 ரூபாய் போதும்.’’
எத்தனை வெரைட்டி? என்ன ஸ்பெஷல்?‘‘கடைகள்ல கிடைக்கிறது இல்லாம, வீட்ல இருக்கிற எந்தப் பொருளை வேணாலும் வச்சு அல்வா பண்ணலாம்ங்கிறதுதான் ஸ்பெஷல். மாம்பழம், வாழைப்பழம், பப்பாளினு பழங்கள்லயும், ஓட்ஸ், பார்லி, கார்ன்ஃபிளேக்ஸ்னு தானியங்கள்லயும், குழந்தைங்களுக்குப் பிடிச்ச மாதிரி சாக்லெட், பிரெட், ட்ரை ஃப்ரூட்லயும்கூட பண்ணலாம். அடிப்படையா 10 வெரைட்டி கத்துக்கிட்டாலே, அப்புறம் அவங்கவங்க கற்பனைக்கேத்தபடி எவ்வளவு வகை வேணாலும் பண்ணலாம்.’’
விற்பனை வாய்ப்பு? லாபம்?‘‘அக்கம்பக்கத்து வீடுகளுக்கு, தெரிஞ்சவங்களுக்கெல்லாம் அவங்க வீட்டு விசேஷங்களுக்கு கிலோ கணக்குல ஆர்டர் எடுத்து செய்து தரலாம். வீட்டுக்குப் பக்கத்துல உள்ள கடைகளுக்கு சின்னச் சின்ன பாக்கெட் போட்டுக் கொடுக்கலாம். ஒரு கிலோ அல்வா செய்ய ஆகற செலவுக்கு மேல, தாராளமா 100 முதல் 200 ரூபாய் வரை லாபம் வச்சு விற்கலாம். சின்ன அளவு ஆர்டர்களைவிட, கிலோ கணக்குல எடுத்துப் பண்றதுதான் லாபம் தரும்.’’
பயிற்சி?‘‘2 நாள் பயிற்சில 10 வகை அல்வா செய்யக் கத்துக்க, 500 ரூபாய் கட்டணம்.’’
ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்