வாவ் கபே



தில்லியில்  உள்ள சத்யா நிகேதன் எனும் இடத்தில் வீற்றிருக்கும் ‘எக்கோஸ்’ எனும் கபேவைப் பற்றித்தான் டுவிட்டரில் ஹாட் டாக்.

இங்கே கிடைக்கும் காபி, தேநீர், பீட்சா, கேக் வகைகளின் சுவைக்கு ஈடு இணை ஏதுமில்லை என்று வாடிக்கையாளர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர். ஆனால், விஷயம் இதுவல்ல. இந்த கபேவில் வேலை செய்யும் அனைவருமே வாய்பேச முடியாதவர்கள், காது கேளாதவர்கள்!நான்கு வருடங்களுக்கு முன்பு சில நண்பர்கள் இணைந்து இந்த கபேவை ஆரம்பித்தனர். இப்போது 40 ஊழியர்கள் இங்கே வேலை செய்கின்றனர். இவர்கள் எல்லாருமே வாய் பேச முடியாதவர்கள் அல்லது காது கேளாதவர்கள்.

வாடிக்கையாளர் கபேவுக்குள் நுழைந்தவுடன் ஊழியர் அவரை சைகை மொழியில் வரவேற்று அமர வைப்பார். உணவை ஆர்டர் செய்ய பிரத்யேகமான குறியீடுகள் உள்ளன.
அதை வாடிக்கையாளர்கள் நோட்டில் எழுதி சர்வர் காட்டினால் போதும். அடுத்த சில நிமிடங்களில் ஆர்டர் இருக்கைக்கு வந்து சேரும். தண்ணீர், பில் கேட்க டேபிளிலேயே சில கார்டுகளை வைத்துள்ளனர். இந்த கபே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

த.சக்திவேல்