பாதை மாறுகிறார்களா பள்ளி மாணவர்கள்..?



தேவநேயன்: அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் என்ற ஒரு மாயையை இந்த வீடியோக்கள் மூலம் உண்டாக்குகிறார்கள்..

சஃபி: நல்ல மாணவர்களை உருவாக்கும் பொறுப்பு ஒரு சமூகத்துக்குத்தான் உண்டு...

‘‘பள்ளி மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் கோடு போடுதல், பாக்ஸ் கட்டிங், ஒன் சைட் கட்டிங், ஸ்பைக் போன்றவற்றைத் தவிர்த்து, பள்ளிச் சூழலுக்கு ஏற்றாற்போல் சிகை அலங்காரம் செய்து கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  இது மாணவர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்த உதவும். வாருங்கள். ஒன்றுபட்டு புதிய தேசத்தை உருவாக்குவோம்...’’ என்ற வாசகம் பதிவு செய்யப்பட்ட ஒரு போஸ்டர் செம வைரலானது.

தென்காசி பக்கத்தில் உள்ள மேலகரம் ஊராட்சியை ஒட்டிய பகுதிகளில் இந்தப் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் தமிழகத்தில் மாணவர்கள் நிகழ்த்திய சேட்டை வீடியோக்கள் வெளியான பிறகே இப்படியான போஸ்டர்கள் பரவலானது. மட்டுமல்ல, இந்த வீடியோக்களின் பின்னணியில் இருப்பது எல்லாமே அரசுப்பள்ளிகள்.

முன்பே அரசுப்பள்ளிகள் குறித்து எதிர்மறையான பார்வைதான் இங்கே நிலவுகிறது. சில வருடங்களுக்கு முன்புகூட ‘அரசுப்பள்ளிகள் மூடப்படுமா’ என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டது. இருந்தாலும் அரசுப்பள்ளிகளின் சாதனைகள் பற்றி தொடர்ச்சியாக பல புள்ளிவிவரங்களும், ஆய்வுகளும் வெளிவந்தன. உதாரணமாக லாக்டவுன் காலத்தில் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப்பள்ளிகளுக்கு இடம்பெயர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தபோது இனி அரசுப் பள்ளிகளுக்கு சுபிட்சம்தான் என்று எண்ணத் தோன்றியது.

இந்நிலையில் எல்லா நம்பிக்கைகளையும் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது இந்த வீடியோக்கள். இதுகுறித்து குழந்தை உரிமை செயற்பாட்டாளரான தேவநேயனிடம் கேட்டோம்.

‘‘இந்த உலகமே சரியாக இருக்கிறது. ஆனால், அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமே குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் என்ற ஒரு மாயையை இந்த வீடியோக்கள் மூலம் உண்டாக்குகிறார்கள்.

அரசுப்பள்ளிகளில் குறை ஒன்றுமில்லை என நான் சொல்லவில்லை. குறை இருக்கிறது. அதைச் சீர்திருத்த அரசும் முயல்கிறது. ஆனால், இன்றைய குழந்தைகளுக்கு நன்மையைவிட, தீமையான சூழலே அதிகம். அதனால்தான் அவர்கள் இதுமாதிரியான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

திரைப்படங்களில் ஹீரோ சண்டை போட்டால் ஏற்றுக்கொள்கிறார்கள்; ஹீரோ ஸ்டைலாக சிகரெட் பிடித்தால் கைதட்டுகிறார்கள். அதையே ஒரு மாணவன் செய்தால் அருவருப்பாகப் பார்க்கிறார்கள். உண்மையில் ஒரு மாணவன் தப்பான செயலில் ஈடுபட்டால், அதை ஊரார் எல்லோருக்கும் பகிர்வதே இளம் சிறார் நீதிச் சட்டத்தின்படி குற்றமாகும்.

சமீபத்தில் வெளியான  10 வீடியோக்களில் 8 வீடியோக்கள் மிகவும் பழையவை. இரண்டு வீடியோக்கள் வந்ததுமே அதை தடை செய்ய அரசும், அதிகாரிகளும் முயற்சித்திருக்க வேண்டும்.

ஒரு குழந்தை குற்றம் செய்தால், அந்தக் குழந்தையை சீர்படுத்துவதற்கான முயற்சியைத்தான் அரசு செய்யவேண்டும். அதை விட்டுவிட்டு இந்த வீடியோக்களைப் பரப்பிய எல்லோருமே குற்றவாளிகள்...’’ என்று ஆவேசமாக ஆரம்பித்த தேவநேயன், இந்த பரப்பலுக்கான காரணத்தையும் விளக்கினார்.

‘‘லாக்டவுன் காலத்தில் தனியார் பள்ளிகளிலிருந்து சுமார் 15 லட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிகளுக்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர். அந்த மாணவர்களை மீண்டும் தனியார் பள்ளிகளுக்கு அழைக்கும் பிரசாரமாகத்தான் இந்த வீடியோக்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.  தனியார் பள்ளிகளிலும் குற்றங்கள் நடக்கின்றன. ஆனால், அவை வெளியே தெரிவதில்லை. அரசுப்பள்ளிகளில் நடந்தால் மட்டும் அவற்றை பூதாகரமாக்க முயற்சிப்பார்கள்.

உண்மையில் இந்த வளர் இளம் பருவம் என்பது உடலும், மனமும் மாற்றம் அடையும் காலம். இந்த நேரத்தில் ஒரு மாணவன் சில ரோல் மாடல்களைப் பின்பற்ற முயற்சிப்பான். ஆனால், நம்மிடையே இருக்கும் ரோல் மாடல்கள் எல்லாமே பொய்யான மாடல்கள். உண்மையில் ஓர் ஆசிரியர்தான் சிறந்த ரோல் மாடலாக இருப்பதற்குரிய நபர். ஆனால், ஆசிரியர்கள் அப்படியிருப்பதில்லை. கடந்த 5 வருடங்களில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை சுமார் 450 என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.  

சம்பளம், பி.எஃப் என்று வயிற்றுப் பாட்டைப் பார்க்கவே ஆசிரியர்களுக்குச் சரியாக இருக்கிறது. மாணவர்களின் பிரச்னைகளைப் பேசும் ஆசிரியர் சங்கங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டோம்...’’ என்கிற தேவநேயனிடம், ‘எல்லா மாணவர்களுமே இப்படித்தான் எனும்போது இது லாக்டவுன் காலத்துக்குப் பிறகான பிரச்சனையா அல்லது என்றுமே இருக்கும் பிரச்னையா..?’ என்று கேட்டோம்.

‘‘மாணவப் பருவம் என்பதே சில அடையாளங்களை உருவாக்கும் காலமாகும். இந்தப் பருவத்தில் உடை, அலங்காரம், செயல்களில் எல்லாமே சில வித்தியாசங்கள் உருவாகும். குறிப்பாக இந்த வயதில் எல்லோருமே கொஞ்சம் சேட்டை செய்யக்கூடியவர்களாகத்தான் இருப்பார்கள். இன்றைய காலத்தில் நல்லதைவிட, கெட்ட சூழல் அதிகம். அதைப் பகுத்துப் பார்க்கும் மனநிலை மாணவர்களிடையே இல்லை.

இதை ஆசிரியர்கள்தான் தீர்த்து வைக்கவேண்டும். ஆனால், ஆசிரியர்களைவிட மாணவர்கள்தான் அதிகமாகத் தெரிந்துகொள்பவர்களாக இருக்கிறார்கள். ஆசிரியர்கள் நாட்டு நடுப்புகளை அறியாதவர்களாக இருக்கிறார்கள். எல்லா ஆசிரியர்களையும் நான் சொல்லவில்லை. தேவைப்படும் இடங்களில் ஆசிரியரின் உதவி மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை.

பாடத்தைத் தாண்டி மனித மதிப்பீடுகள், வாழ்க்கைக் கல்வி போன்றவற்றை ஓர் ஆசிரியர் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கவேண்டும். உண்மையில் ஒரு பள்ளி இருக்கும் ஊரில் ஆசிரியர், மாணவர்கள், அந்த ஊர் மக்கள் எல்லோருமே சேர்ந்து ஒரு மாணவனின் வளர்ச்சியில் ஈடுபட வேண்டும். இந்த முயற்சியின் மூலம் விளையாட்டு, அறிவியல், சமூகப் பார்வையை அந்த மாணவனுக்குக் கடத்த முடியும். உண்மையில் ஓர் ஆசிரியர் ஒரு மாணவனுக்கு முன்மாதிரியாகத் திகழும்போதுதான் அந்த மாணவனுக்கு அந்த ஆசிரியரின் மேல் ஒரு மதிப்பு வரும்.

உதாரணமாக ‘திருப்பூருக்குப் பக்கத்தில் இருக்கும் ஓர் அரசுப்பள்ளி மாணவன் ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்க முயற்சி’ என்று ஒரு வீடியோ உலாவியது. உண்மையில் அந்த மாணவன் கொஞ்சம் அதிகமாகத்தான் முடி வளர்த்திருந்தான். ஆனால், வகுப்பறையில் அந்த மாணவனைப் பார்த்து, ‘ஏண்டா பன்னி மாதிரி முடி வளர்த்திருக்க...’ என்று அந்த ஆசிரியர் சொன்னார். இது அவனைக் கோபமடையச் செய்யும் என்ற உளவியல்கூட அந்த ஆசிரியருக்குத் தெரியவில்லை.

ஒரு மாணவனுக்கு சுயகௌரவம், சுயமரியாதை உண்டு. அதைச் சொல்வது மாதிரி சொன்னால் இந்த மாதிரியான வீடியோக்கள் வர வாய்ப்பே இல்லை.  கையைக் கட்டிப்போட்டுவிட்டார்கள் என்று ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். அடிப்பதன் மூலம் படிப்பு வரும் என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா என்ன... அடிமைகளைத்தான் அடிப்பார்கள். அதிகாரம் செலுத்தாமல், சொல்லும் முறையில் சொன்னால் திருந்துவது நடக்கும். ஒழுங்கு என்பது அழகுதான். அந்த ஒழுங்கை அதிகாரம் இல்லாத தொனியில் சாதிப்பதுதான் ஆசிரியர்களின் கடமையாக இருக்கவேண்டும்.

நிறைய குழந்தைகள் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்துகொள்கிறார்கள். குழந்தைகளின் தேவையைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்றமாதிரி நடத்துவது ஓர்
ஆசிரியரின் கடமை. உண்மையில் ஓர் ஆசிரியருக்கு உளவியல் ஆலோசகராக இருக்கவேண்டிய பொறுப்பும் உள்ளது...’’ என்று தேவநேயன் முடிக்க, உளவியல் நிபுணரான சஃபியிடம், ‘இளம் வயது மாணவர்களின் செயல்பாடுகள் என்ன மாதிரியாக இருக்கும்? அதை எப்படிப் புரிந்துகொள்வது..?’ என்று கேட்டோம்.‘‘மாணவப்பருவம் என்பது அடையாளச்சிக்கல் ஏற்படும் காலம் என்று உளவியல் நிபுணர்கள் சொல்கின்றனர். சிலர் தன்னை ஒரு நடிகர், ஒரு சாதித் தலைவர், ஒரு விளையாட்டு வீரர் என்று அடையாளப்படுத்தும் காலம் இது.

இதனால்தான் இந்தப் பருவத்தில் ரசிகர் மன்றத்தில் போய்ச் சேர்வது, சாதிச் சங்கத்தில் உறுப்பினராவது போன்றவை நடக்கிறது. சில ஒழுங்குகளை எதிர்த்து நீச்சல் போடும் வயதுதான் இது. இந்த வயதில் உடலிலும், உள்ளத்திலும் ஏற்படும் மாற்றங்கள் வெளிப்பட்டுத்தான் தீரும். முதலில் அவை சரி, தவறு என்று மாணவர்கள் பார்ப்பதில்லை. முயற்சித்துப் பார்ப்போம் என்றுதான் எல்லா மாணவர்களும் இறங்குகிறார்கள்.

இதை சரிபண்ணுவது ஒரு சமூகத்தின் கடமை. உதாரணமாக, ‘படித்தால் மட்டும் வேலை கிடைக்குமா’ என்று மாணவர்கள் நினைத்தால் படிப்பில் எப்படி ஆர்வம் வரும்..? ஆகவே, நல்ல மாணவர்களை உருவாக்கும் பொறுப்பு ஒரு சமூகத்துக்குத்தான் உண்டு. இன்று சூழல் நிறைய மாறியிருக்கிறது. அதை சரியான முறையில் புரிந்துகொண்டு திசைதிருப்பும் பொறுப்பு ஆசியர்களுக்கு உண்டு.

உதாரணமாக, இன்று கிராமத்தில் வசிக்கும் மாணவிகள் கூட உடலில் டாட்டூ போட்டுக்கொள்கின்றனர். இதை தவறு என்று ஓர் ஆசிரியர் முதல் கணமே கண்டிப்பது சரியாகாது. முதலில் டாட்டூவின் நன்மை, தீமைகள் பற்றி அந்த ஆசிரியர் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு  அதை வைத்து ஓர் உரையாடலை நடத்துவதன் மூலம் அந்த மாணவியின் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்க முடியும்...’’ என்று முடித்தார் சஃபி.

டி.ரஞ்சித்