அரண்மனை குடும்பம் - 18



குலசேகர ராஜாவிடம் போனில் பேசிவிட்டு கணேசன் திரும்பிய நொடிகளில் எஸ்.ஐ. சாமிக்கண்ணு சாலையோர இடுப்புயர தடுப்புச் சுவர்மேல் கிடந்த சதீஷின் உடலருகே சென்று உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தார்.
அப்படியே சற்றுத் தள்ளி ஒரு டோர் திறந்திருக்கும் நிலையில் சாலை ஓரமாக சற்று கோணலாக நின்று கொண்டிருந்த சதீஷின் காரையும் பார்த்தார்.“எஸ்.ஐ. சார்... டயத்துக்கு வந்திருக்கீங்கன்னுதான் சொல்லணும். உங்கள மாதிரிதான் நானும். ஒரு அஞ்சு நிமிஷம்தான் இருக்கும் இங்க வந்து...” என்று நடந்த அவ்வளவையும் சொல்லி முடித்தான் கணேசன்.

எஸ்.ஐ சாமிக்கண்ணுவின் புருவத்தில் நிறையவே ஆச்சரிய மடிப்புகள்... மனதுக்குள்ளும் நிறைய கேள்விகள். “ரொம்ப பெக்கூலியரா இருக்கு கணேசன் சார்... என் சர்வீஸ்ல சிறுநீர் கழிக்க இறங்கின ஒருத்தரை பாம்பு கடிச்சதுங்கறதை இப்பதான் பாக்கறேன். காரைப் பாருங்க... திறந்த டோரைக் கூட மூடாம வந்திருக்கார். அவ்வளவு அர்ஜன்சி.

ஆனா, கூட ஒருத்தன் வந்தான்- அவன் சேலம் பஸ் வரவும் அதைப் பிடிச்சி ஓடிட்டான்னு சொன்னதுதான் இடிக்குது...” என்று அந்த இருளுக்குள் நின்றபடியே பேசினார்.
அவர் ஜீப்பை ஓட்டி வந்திருந்த கான்ஸ்டபிள் ஜீப்பை விட்டு இறங்கி நிற்பதும் கருப்பாய் திட்டாய் தெரிந்தது.“மாரியப்பன், ஜீப்போட ஹெட் லைட்டை கொஞ்சம் இங்க பாஸ் பண்ணுங்க...” என்று உடனே குரல் கொடுக்கவும் அடுத்த சில நொடிகளில் வெளிச்சம் அங்கே ஒரு நேர்க்கோட்டில் பாய்ந்ததில் சதீஷ் சாம்பல் நிற பேன்ட், பூப்போட்ட வெளிர் மஞ்சள் சட்டைக்குள் மொத்த உடலும் நீலம் பாரித்திருக்க ஒரு கருப்பு பூதம் போலத்தான் அந்த சுவர்
திட்டின் மேல் தெரிந்தான்.

உதட்டோரம் நுரை ததும்பி அது காய்ந்தும் போயிருந்தது. அக்காட்சியை தன் செல்போனில் உடனேயே படமும் பிடித்துக் கொண்டார். அப்படியே “வெரி பிட்டி... இந்த ஆளுக்கு இங்க சாவுன்னு அந்த பிரம்மா எழுதியிருந்தா அதை யாரால மாத்த முடியும்? ஆமா... ஆம்புலன்சுக்கு சொல்லியாச்சா?” என்று கணேசனைப் பார்த்தார்.“இல்ல சார்... உங்கள பாக்கவும் நான் என் மாமா கிட்ட கட் பண்ணிட்டேன்...”“இருங்க... முதல்ல அதுக்கு போன் பண்ணிட்றேன்...” என்ற சாமிக்கண்ணு ஆம்புலன்சுக்கு போன் செய்து விட்டு கணேசனின் கார் அருகே போய் நின்று கொண்டார். கணேசனும் உடன் நின்று கொள்ள ஒரு பரஸ்பரப் பேச்சும் தொடங்கியது.

 “பை த பை, உங்க பங்களாவுல வேலை பார்த்த மார்ட்டின்கறவன்தானே முந்தா நேத்து ஆக்சிடென்ட்டுல இறந்தது..?”

“ஆமாம்... அப்படித்தான் நான் கேள்விப்பட்டேன். உங்க ஸ்டேஷன்ல இருந்து இன்ஸ்பெக்டர் பேசினார். அப்பதான் எனக்கே தெரியும். பை த பை, அந்த மார்ட்டினை நான் சரியா கூட பார்த்ததில்ல. என் மாமாதான் வேலைக்கு வெச்சிருந்திருக்கார். அதனால அவர்கிட்டயே பேசிக்குங்கன்னு சொல்லிட்டேன்...”
“ஐ.சீ... இப்ப இந்த நபர் கூட உங்க மாமாகிட்ட வேலைபாக்கறதா சொன்னீங்க... இல்ல?”

“ஆமாம்... அது கூட எனக்கு இந்த நபரோட பாக்கெட்ல இருக்கற செல்போன் ரிங்காகி அதை எடுத்துப் பேசவும்தான் தெரியும்...”“அது ஒரு ஆக்சிடென்ட்... கிட்டத்தட்ட இதுவும் அப்படித்தான். ஆமா... அது என்ன உங்க மாமா ஆட்களா சாகறாங்க... அதுவும் ஆக்சிடென்ட்லயே..? இந்த ஏற்காடு மலை மேலயே..?”

“இதே கேள்வியை நான் இப்ப அவர்கிட்டயும் கேட்டேன்... அவரே இதை எதிர்பார்க்கலன்னு நல்லா தெரியுது...”“அதெல்லாம் சரியாதான் இருக்கு. கூட ஒருத்தன் வந்தான்... அவன் இறங்கி ஓடிட்டான்னு சொன்னதுதான் எனக்கு இடிக்குது... ஆமா அவன் எப்படி இருந்தான்?”“லுங்கி சட்டைன்னு கூலி வேலைக்காரன் மாதிரிதான் இருந்தான்...”“கூட வந்தவன் இக்கட்டான நேரத்துல இருக்கும் போது அவனை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போகாம ஓடிப் போயிட்டான்னா, அது சரியா தெரியலியே எனக்கு..?”

“ரொம்ப சிம்பிள்... அவன் பயந்துட்டான் சார்... அப்புறம் நான்கூட ‘உடம்பை தூக்கு... ஆஸ்பத்திரிக்கு போவோம்’னேன்... ‘இல்ல  சார்… நீலம் பாரிச்சு நுரை தட்டிருச்சு... கருநாகத்தோட விஷம் ரொம்ப வேகமா ஏறும்... இங்க ஏற்காடு ஜி.எச்.ல நிச்சயம் இதுக்கான ஊசி இருக்காது. சேலம்தான் போகணும். ஆனா, ஒரு மணி நேரமாயிடும்... அது வரை தாங்காது’ன்னு தெளிவா பேசினான் சார்...”

“அப்படியா... எங்க திரும்ப ஒருதடவை அவன் சொன்னதை அப்படியே சொல்லுங்க பார்ப்போம்...”“என்ன சார் இந்த சாவுல உங்களுக்கு எதாவது சந்தேகம் வந்துடிச்சா... உங்க என்கொயரிய இங்கயே ஆரம்பிச்சிட்டீங்களே..?”

“சந்தேகப்பட்றதுங்கறது எங்க ஜாப்ல ஒரு பார்ட். மிஸ்டர் கணேசன்... இங்க நடந்ததை எல்லாம் பார்த்தா இதை ஒரு எதிர்பாராத இன்சிடென்டா மட்டும் என்னால நினைக்க முடியல...”

“அஃப்கோர்ஸ்... முந்தா நாள் ஒரு வேலைக்காரன்! இன்னிக்கும் ஒருத்தன்! இரண்டு பேரும் இந்த மலை மேலயே இறந்திருக்காங்க... அந்த ஒத்துமை காரணமா..?”
“அது மட்டுமில்ல... கருநாகம் கடிச்சதா அந்த ஓடிப் போனவன் சொன்னதா சொன்னீங்களே... அங்கதான் எனக்கு பெருசா இடிக்குது...”

“எப்படி..?”“இந்த இருட்டுல அது கருநாகம்தான்னு அவனுக்கு எப்படி தெரிஞ்சிச்சு? அப்புறம் அதுக்கான விஷமுறிவு ஊசி இங்க இருக்காது, சேலம் ஜி.எச்லதான் இருக்கும்னு அவன் சொல்லியிருக்கான்... சம்திங் ஃபிஷ்ஷி...”எஸ்.ஐ. சாமிக்கண்ணுவின் கேள்விகள் கணேசனையும் குடையத் தொடங்கின.

அவனும் தீவிரமாய் யோசித்த அந்த நொடிகளில் “மாரியப்பன்...” என்று கான்ஸ்டபிளை அருகில் அழைத்தார் சாமிக்கண்ணு. அவரும் ஓடி வந்தார்.
“ஜீப் செக்போஸ்ட்ல நம்ம ஆட்கள் இருக்காங்க இல்ல?”“மாணிக்கம் மட்டும் இருப்பார் சார்... கொரோனா ஸ்பெஷல் செக் ஸ்டாப்பிங்குக்காக நம்ம ஸ்டேஷன்ல இருந்து நாமதான் சார் அனுப்பினோம்...”“அவர் போன் நம்பர் இருக்கா..?”“இருக்கு சார்...”

“அவருக்கு போன் பண்ணி ஏற்காடுல இருந்து சேலம் போய்க்கிட்டிருக்கற பஸ் இந்த நேரத்துல கிராஸ் ஆயிடிச்சான்னு கேளுங்க... கமான் க்விக்! ஆகலேன்னா அதை நிறுத்தி உள்ள கைலி சட்டையோட ஒருத்தன் இருந்தா அவனை அரெஸ்ட் பண்ணிட்டு உடனே நமக்கு தகவல் தரச் சொல்லுங்க... கமான் க்விக்... க்விக்...”கான்ஸ்டபிள் மாரியப்பனுக்கு உத்தரவிட்டவர் திரும்பியபோது, ஆம்புலன்சும் உச்சி மண்டையில் விளக்கொளியோடும் அதற்கே உண்டான சப்தத்தோடும் வந்து கொண்டிருந்தது.கணேசன் கொஞ்சம் போல கலங்கிப் போயிருந்தான்.

“என்ன சார்... இந்த சாவுல உங்களுக்கு பெரிய அளவுலயே சந்தேகம் இருக்கு போலயே... ரொம்ப ஸ்பீடா ஸ்டெப் எடுக்கறீங்க..?”
“எடுக்கணும்... அதானே எங்க வேலையே...”“அஃப்கோர்ஸ்... நீங்க சொல்லவும்தான் நானும் யோசிக்கிறேன்... நிறைய கேள்விகளுக்கு இடமிருக்கு...”
“இப்ப எனக்கு உங்ககிட்டயே சில கேள்விகள் இருக்கு. கேட்கலாமா?”சாமிக்கண்ணு அப்படிக் கேட்கவும் கணேசனுக்கு மலைக்குளிரை மீறிக் கொண்டு கொஞ்சம் சூடானது உடம்பு.

அதற்குள் ஆம்புலன்ஸ் அருகில் வந்து நின்று அதிலிருந்து இருவர் இறங்கி ஓடி வந்தனர். சாமிக்கண்ணுவும் அவர்களிடம், “ஒரு ஸ்நேக் பைட் கேஸ்... ஆள் இறந்துட்டாரு. பேர் சதீஷாம்... நீங்க பாடிய எடுத்துக்கிட்டு போய் ஜி.எச்ல ஃபார்மாலிட்டீஸை பண்ணிக் கிட்டிருங்க. நான் பின்னாலயே வந்துட்றேன்...” என்று கூற அவர்களும் ஓடிப்போய் ஸ்ட்ரெச்சரை இறக்கி அதில் சதீஷின் உடலைத் தூக்கிப்போட்டு ஆம்புலன்சிலும் ஏற்றிக் கொண்டனர்.

திரும்பவும் சப்தம் எழுப்பிக் கொண்டே அது அங்கிருந்து ஓடியும் போயிற்று. கான்ஸ்டபிள் மாரியப்பன் போன் செய்துவிட்டு வந்திருந்தார்.“மாரியப்பன்... நீங்க அந்த காரை எடுத்துக்கிட்டு ஸ்டேஷனுக்கு போயிடுங்க. நான் ஜீப்பை எடுத்துக்கிட்டு வந்துட்றேன்...” என்று கூறவும் அவரும் சதீஷின் காரைக் கிளப்ப காலெடுத்தார்.

“கீழ மாணிக்கத்துக்கு போன் பண்ணி சொல்லிட்டீங்கதானே..?”“சொல்லிட்டேன் சார்... பஸ் இன்னும் கிராஸ் ஆகல. ஆகற டைம்தான் சார்... விக்டிமைப் பிடிச்சவுடனே உங்களுக்கும் போன் பண்றேன்னார் சார்...”“குட்... நீங்க கிளம்புங்க...” மாரியப்பனை அனுப்பிவிட்டு திரும்ப கணேசனிடம் வந்தார்.

குளிருக்கு இதமாக ஒரு சிகரெட்டும் இதழ்களுக்கு இடையில் ஏறிக்கொண்டது. கணேசனுக்கும் நீட்டினார்.“என்கிட்ட இருக்கு சார்... தேங்க்ஸ்... என் பிராண்ட் வேற...” என்று தன் பாக்கெட்டில் இருந்து கருப்பு நிறத்தில் இருந்த சிகரெட்டை எடுத்து அவனும் பற்ற வைத்தான்.போலீஸ் ஜீப்பின் ஹெட்லைட் வெளிச்சம் நீடித்தபடியே இருந்தது.“ஏதோ என்கிட்டயும் கேள்வி கேட்கணும்னு சொன்னீங்களே..?” கணேசனே புகையை உமிழ்ந்தபடி அவரைத் தூண்டினான்.

“ஆமா... அது எப்படி அவ்வளவு கரெக்ட்டா இந்த இடத்துக்கு இந்த சதீஷுக்கு பாம்பு கடிச்ச நேரமா பாத்து வந்தீங்க..?” கேள்வியில் கணேசன் மேலும் அவருக்கு சந்தேகம் இருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.“சார்... நான்தான் சொன்னேனே... ஆத்தூர் மணியன்கறவரோட பங்களாவும், எஸ்டேட்டும் விலைக்கு வருது, அதை பாக்கப் போயிருந்தேன்னு...”
“ஆமால்ல... நீங்க சொன்னீங்க... நான்தான் மறந்துட்டேன். அப்ப அதைப் பார்த்து பேசி முடிச்சிட்டீங்களா?”

“இல்ல சார்... பாதிக்குமேல கொரட்டு பூமி. அவர் சொல்ற விலையும் அதிகம். இது தெரிஞ்சிருந்தும் என் மாமா என்னை போய் ஏன் பாக்கச் சொன்னார்னுதான் எனக்குத் தெரியல...”
“அது சரி... இப்ப உங்க மாமா எங்க இருக்காரு..?”“சேலத்துலதான் இருக்கணும்...”“அப்ப அவருக்கு போன் பண்ணி கொஞ்சம் ஸ்டேஷனுக்கு உடனே வரச் சொல்
றீங்களா?”“நிச்சயமா சொல்றேன்... தயவு செய்து இதுல என்னை இழுத்துடாதீங்க. என்ன உண்டோ எல்லாத்தையும் நான் சொல்லிட்டேன். என் கிட்ட நீங்க இவ்வளவு கேள்விகள் கேட்டதே கூட பிடிக்கல. நான் பரிதாபப்பட்டு உதவி செய்ய நினைச்ச ஒருத்தன். எனக்கும் உதவி செய்ய மட்டும்தான் தெரியும்...”

“புரியுது மிஸ்டர் கணேசன்... என்னை தப்பா எடுத்துக்காதீங்க. நானும் என் ட்யூட்டியைத்தான் செய்தேன். பை த பை, அந்த ஓடிப்போன ஒருத்தன் மூலமா அப்நார்மலா எங்களுக்கு எதாவது தெரிய வந்தாலோ... இல்லை அவன் நான் இல்லை... எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொன்னாலோ... அவனை அடையாளம் காட்ட நீங்க ஸ்டேஷனுக்கு வரவேண்டியிருக்கும். அப்ப
மட்டும் கொஞ்சம் வந்துட்டு போயிடுங்க...”எஸ்.ஐ. சாமிக்கண்ணுவின் கோரிக்கையை ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல் ஒருமாதிரி தலையாட்டினவன் “அப்ப நான் கிளம்பட்டுமா?” என்று கேட்டான்.

சாமிக்கண்ணுவும் தோளை உயர்த்தி முகபாவங்களாலேயே சம்மதம் தரவும், தன் காரை நோக்கி நடந்தான்.அதிக பட்சம் ஒரு அரை மணி நேரத்திற்குள்தான் எத்தனை திருப்பங்கள்! நினைத்துக்கொண்டே காரில் ஏறி அதை இயக்கவும் அதுவும் பங்களா நோக்கி புறப்பட்டது. ஒரு நூறு மீட்டர் தொலைவில்  மரம் ஒன்றின் ஓரமாக ஒரு கார் நின்றபடி இருக்க, கணேசனின் கார் அதைக் கடந்து மறைந்தது.மரத்தடியில் நின்றிருந்த காருக்குள் தீவிர சிந்தனையில் குலசேகரராஜா!

(தொடரும்)

ஞானமணி தேசிகர் என்கிற அந்த வைத்தியரின் முன்னால் அசோகமித்திரன்  ஸ்தம்பித்துவிட்டிருந்தார் என்று கூட சொல்லலாம். இரண்டு கண்களையும், கை விரல் நகங்களையும் மட்டுமே வைத்து இவரால் எப்படி தனக்கிருக்கும் நோய்ச் சிக்கலை மிகச்சரியாகச் சொல்ல முடிந்தது? என்கிற கேள்விதான் அவர் ஸ்தம்பிப்புக்குக் காரணம். இப்படி ஒரு சிக்கல் இருப்பதைக் கண்டறிய சென்னையில் ‘ஸ்கேன், எக்ஸ்ரே, ப்ள்ட் டெஸ்ட்’ என்று கிட்டத்தட்ட 30,000 ரூபாய்களைச் செலவழித்திருந்தார்.

ஆனால், இங்கோ 30 நொடிகள் கூட ஞானமணி தேசிகருக்கு தேவைப்படவில்லை.“நல்ல வேளை... சரியான சமயத்துல இங்க வந்துட்டீங்க. கவலைப்படாதீங்க. உள்ள சிறுநீர் வழித்தடத்துல, அதாவது யுரித்ராவுல புண்கள் உருவாகி கட்டியா அது மாற இருக்கு. அதிகபட்சம் ஒரு மாசத்துக்குள்ள நீங்க சிகிச்சை எடுத்துக்கலைன்னா அது புற்றுக்கட்டியா மாறிடும்! அப்புறம் பெரிய போராட்டமாயிடும் வாழ்க்கை. எப்பவோ நீங்க செஞ்ச புண்ணியம்தான் இங்க நீங்க என்னைப் பார்க்க வந்தது.

ரசகந்தி மெழுகு மாத்திரைகளோட, சில சூர்ணங்கள் தரேன். சாப்பிடுங்க. பூரணமா குணமாயிடுவீங்க...” என்று சற்று விரிவாக எழுதிக் காட்டியவர், அப்போதே ஒரு மண் கலயம் நிறைய ஒரு லிட்டருக்கும் குறையாத அளவுக்கு தண்ணீரைக் கொடுத்து, அதை குடிக்கும் முன் வாயைத் திறக்கச் சொல்லி நாக்கில் ஒரு மூலிகைப் பொடியை சிறு பொட்டலத்தை திறந்து கொட்டிவிட்டு தண்ணீரையும் குடிக்க வைத்தார். அந்தப் பொடி வாய்க்குள்ளேயே ஓர் இனம்புரியா மணத்தை உணரச் செய்திருந்தது. குடித்த குளிர்ந்த தண்ணீர் கூட இதற்கு முன் குடித்திராத சுவையில் இருந்தது.

ஞானமணி தேசிகரும் திரும்பவும் அவரோடு பேச வேண்டியதை ஒரு நோட்டில் எழுதத் தொடங்கியிருந்தார்.‘தினமும் காலை, மதியம், மாலை இப்படி மூணுவேளை இந்தப் பொடியை வாய்ல போட்டு இப்படி ஒரு லிட்டர் தண்ணியை ஒரு மூச்சால குடிக்கணும். அப்புறம் நான் தரப்போற ரசகந்தி மெழுகு மாத்திரைகளையும் ஒரு நாளைக்கு ஆறு மாத்திரைன்னு ஒரு மண்டலம், அதாவது 48 நாள் சாப்பிடணும்.

அவ்வளவுதான்... இந்தப் பிரச்னையே அதுக்குப் பிறகு எப்பவும் இருக்காது. உங்களுக்கு ரொம்பவே மன உறுதி... அதனால சிறுநீர்ப்பை ஆரோக்யமா இருக்கு. பயப்படறவங்களுக்குத்தான் அது சீக்கிரம் கெட்டு குட்டிச்சுவரா போகும்.இந்த 48 நாள்ங்கறது 27 நட்சத்திரம், 12 ராசி, 9 கிரகங்களோட கூட்டுத் தொகை. இதுல ஏதோ ஒரு நட்சத்திரத்தாலயும், ராசியாலயும், கிரகத்தாலயும்தான் உங்களுக்கு இப்படி ஒரு வியாதி உருவாச்சு. இந்த மூணுல ஒண்ணுதான் புண்ணுக்கான கிருமி வளரக் காரணம். அந்த கிருமி உங்களை அடைய உங்க கர்மம் காரணம்!

பட்டணத்து டாக்டர்கள் கிருமிங்கற ஒண்ணை கண்டுபிடிச்சு, அதை அழிக்கற மருந்தை மட்டும்தான் கொடுப்பாங்க... அதனால தற்காலிக நிவாரணம் கிடைக்கும். பூரணமா கூட கிடைக்கலாம். அது உங்க ஜாதக தசாபுத்திகளைப் பொருத்தது...

ஆனா, உங்களுக்கு தசா புத்தி சிறப்பா இருக்கு. அதான் இந்த ஊருக்கு வந்திருக்கீங்க. எங்க ஊர் சிவபெருமான் ரொம்ப சக்தி வாய்ந்தவர். அவரை தரிசிக்கிற பாக்யம் எல்லாருக்கும் கிடைக்காது. தரிசனம் பண்ணிட்டு மருந்தோட புறப்படுங்க. எனக்குத் தெரிஞ்சு இன்னும் 30 வருடங்கள் நீங்க ஆயுசோட ஆரோக்யமா இருப்பீங்க...’ என்று அவர் ஒரு நோட்டில் எழுதி நீட்டியதைப் படித்த அசோகமித்திரனுக்கு ஞானமணி தேசிகரின் ஒவ்வொரு செயலுமே ஆச்சரிய அதிசயமாக இருந்தது.

ஒரு வார்த்தை கூட பேசாமல், தன்னையும் பேசவிடாமல்; ஆனால், தனக்கு இருக்கும் வியாதி, அதன் காரணம், அதற்கான மருந்து, அதுபோக தன் மன அமைப்பு என்று சகலத்தையும் ஒரு சீட்டுக்கட்டைப் பிரித்துப்போடுவது போல பிரித்துப் போட்டுவிட்டாரே? அதில் எதுவும் பொய் இல்லை. அவ்வளவும் துல்லியம். இது ஒரு மனிதனுக்கு எப்படி சாத்தியம்?
அசோகமித்திரனுக்குள் அதுதான் இப்போதைய கேள்வி!

இந்திரா செளந்தர்ராஜன்

ஓவியம்: வெங்கி