டர்ன் ஓவர்: நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்!



அன்று: 6ம் வகுப்பில் தோல்வி... ஆங்கிலம் வராது...

இன்று: இட்லி / தோசை மாவு, பரோட்டா, சப்பாத்தி விற்பனையாளர்...


யெஸ். பி.சி.முஸ்தபாவின் இந்த வெற்றிக் கதை, சர்வநிச்சயமாக அனைவருக்கும் எனர்ஜி தரும். வாழ வேண்டும் என்ற எண்ணத்தை பலப்படுத்தும். வாழலாம் என நம்பிக்கையை அளிக்கும்.
காரணம், 6ம் வகுப்பில் தோல்வியுற்றவர்தான் பி.சி.முஸ்தபா. ஆனால், இன்று தொழில் அதிபர்! பல்லாயிரம் கோடிக்கு அதிபதி! ‘iD Fresh Food’ குறித்து இன்று அறியாதவர்கள் இல்லை... ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டா, இட்லி - தோசை மாவு... என கச்சிதமான பேக்கிங்கில் சூப்பர் மார்க்கெட்டில் தரமாகக் கிடைக்கும் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி & இணை நிறுவனர் சாட்சாத் இவர்தான்.

இன்று, ஐடி ஃப்ரெஷ் ஃபுட் 8க்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களில் உள்ள வீடுகளில் காற்றைப் போல் புழங்குகிறது. அத்துடன் துபாய் உட்பட பல நாடுகளுக்கும் இந்நிறுவனத்தின் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.இன்று இட்லி / தோசை மாவுடன், ஒரு நாளைக்கு 2,000 கொத்தமல்லி மற்றும் தக்காளி சட்னி பாக்கெட்டுகள்;200,000 பரோட்டா மற்றும் 40,000 சப்பாத்திகளை ஐடி ஃப்ரெஷ் ஃபுட் விற்பனை செய்கிறது. இதற்காக 3000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்நிறுவனத்தில் உழைக்கிறார்கள்.

தென்னிந்தியாவின் அழகிய மாநிலமான கேரளாவின் வயநாடு மாவட்டத்தின் தொலைதூர கிராமமான சென்னலோடில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த பி.சி.முஸ்தபாவின் தந்தை தினசரி கூலித் தொழிலாளி. தாயார் படிக்காதவர். முஸ்தபாவின் தந்தைக்கு தன் மகன் நன்றாகப் படிக்க வேண்டும் என்பது ஆசை. இதற்காகவே அந்த கிராமத்தில் இருந்த ஒரேயொரு பள்ளியில் தன் மகனைச் சேர்த்தார். வீட்டுச் சூழலைப் புரிந்துகொண்டு முஸ்தபா பள்ளிக்குச் சென்றபடியே வேலைக்கும் செல்ல ஆரம்பித்தார். ஆம். தன் 10வது வயதிலேயே
கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்.

படிப்பைப் பொறுத்தவரை முஸ்தபா சராசரி மாணவர். ஆனால், கணிதத்தில் சிறந்தவர். பள்ளிக்குச் செல்ல பல மைல்கள் நடக்க வேண்டும்; நடந்தார். படித்தார். படிக்க முயற்சித்தார்.
ஆனாலும் சில காரணங்களால் 6ம் வகுப்பில் அவர் தோல்வியடைந்தார். இதனால் பள்ளிக்குச் செல்லும் ஆர்வம் குறைந்தது. தந்தையுடன் தினசரி கூலித் தொழிலாளியானார்.
இப்படியே வாழ்க்கை நகர்ந்திருந்தால் இன்று முஸ்தபா குறித்த கட்டுரையை நாம் எழுதும் நிலை ஏற்பட்டிருக்காது! Life is stranger than fiction இல்லையா..? அது முஸ்தபாவின் வாழ்க்கையில் கச்சிதமாகப் பொருந்தியது.

யெஸ். முஸ்தபாவின் பள்ளி ஆசிரியர்களில் ஒருவருக்கு இப்படி அவர் பாதியிலேயே பள்ளியை விட்டு நின்றதில் உடன்பாடில்லை. தேர்வுகளில் வெற்றியும் தோல்வியும் சகஜம். தோல்வியை வெற்றியாக மாற்றத்தான் முயற்சி செய்ய வேண்டுமே தவிர ‘இனி படிக்கவே மாட்டேன்’ என பின்வாங்கக் கூடாது... என்றெல்லாம் முஸ்தபாவிடம் எடுத்துச் சொன்னார்.
கல்லும் கரைந்தது.

முஸ்தபாவும் மீண்டும் தன் படிப்பைத் தொடர ஒப்புக்கொண்டார். ஆனால், இம்முறை தன்னை விட வயது குறைவானவர்களுடன் அமர்ந்து கற்க வேண்டியிருந்தது. மனதை இது சங்கடப்படுத்தியபோதும் முஸ்தபா அதை எதிர்கொண்டார். விளைவு... பள்ளி ஆசிரியர்களே ஆச்சர்யப்படும் வகையில் 7ம் வகுப்பிலும் 10வது வகுப்பிலும் முதலிடம் பிடித்தார்! 

உயர்கல்விக்குச் செல்ல வேண்டுமென்றால் பள்ளிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், முஸ்தபாவின் அப்பாவிடம் பணம் இல்லை. கோழிக்கோட்டில் உள்ள ஃபாரூக் கல்லூரியில் உள்ள விடுதியில் இலவச உணவு மற்றும் இலவச தங்குமிடம் வழங்கப்படுவதை அறிந்து அங்கு சேர்ந்தார். அங்கு இலவச உணவு மற்றும் இலவச தங்குமிடத்துடன் கல்வி பயின்ற 15 மாணவர்களில் முஸ்தபாவும் ஒருவர்.

ஆனாலும் ஆங்கிலத்தில் அவர் பலவீனமாக இருந்தார். இச்சூழலில்தான் நட்பின் அருமையை உணர்ந்தார். முஸ்தபாவின் நண்பர் ஒருவர், அனைத்து ஆங்கில விரிவுரைகளையும் தாய்மொழியில் மொழிபெயர்த்து புரியவைத்தார். கற்பூரமாக முஸ்தபாவும் பற்றிக் கொண்டார். கூடவே ஆங்கிலத்தையும் மெல்ல மெல்ல கற்கத் தொடங்கினார்.

விளைவு, பொறியியல் நுழைவுத் தேர்வில் மாநிலத்தில் 63வது இடத்தை முஸ்தபா பிடித்தார். பிராந்திய பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. கோழிக் கோட்டில் இருக்கும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (என்ஐடி) கணினி அறிவியலில் பட்டம் பெற்றார்.

இந்த நல்ல செய்தியுடன் அவர் ஊர் திரும்பியபோதுதான் அந்த அதிர்ச்சி அவருக்கு காத்திருந்தது. எந்த ஆசிரியர் எடுத்துச் சொல்லி புரிய வைத்ததால் மீண்டும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தாரோ... அந்த ஆசிரியர் உயிருடன் இல்லை. முஸ்தபாவால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் வாழ்ந்து காட்டுவதே தன் ஆசிரியருக்குச் செலுத்தும் மரியாதை என்பதை உணர்ந்தவர், மோட்டோரோலா நிறுவனத்தில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். மோட்டோரோலா அவரை அயர்லாந்திற்கு அனுப்பியது. மன்ஹாட்டன் அசோசியேட்ஸ் நிறுவனத்திலும் சிறிது காலம் பணியாற்றினார்.

இப்படியே படிப்படியாக உயர்ந்தவர் ஒரு கட்டத்தில் ஒரு லட்சம் சம்பளத்தில் துபாயில் உள்ள சிட்டி வங்கியில் சேர்ந்தார். மெல்ல மெல்ல ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்களிலும் பணியாற்றினார்.2000ம் ஆண்டு இன்டீரியர் டிசைனரான சஜ்னா என்பவரை முஸ்தபா திருமணம் செய்து கொண்டார்.

இன்று இத்தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள்.2003ல் பெங்களூருக்கு ₹15 லட்சம் சேமிப்புடன் திரும்பினார். வணிக மேலாண்மையில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். த இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் - ஐஐஎம் - பெங்களூருவில் உயர் கல்வி பயின்றார்.

அதுதான் அவர் வாழ்க்கையையே மாற்றியது! அவரைக் குறித்த இந்த சக்சஸ் ஸ்டோரிக்கும் அதுதான் பிள்ளையார் சுழி போட்டது!ஐஐஎம் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் படிக்கும் போது, ​​தனது உறவினர்களுடன் சேர்ந்து வெறும் ₹25000 முதலீட்டில் ‘ஐடி ஃப்ரெஷ்’ என்ற தோசை மற்றும் இட்லி மாவு தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார்.

2007ல், ஐஐஎம் - பெங்களூருவில் பட்டம் பெற்ற பிறகு, ‘ஐடி ஃப்ரெஷ்’ நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகச் சேர்ந்தார்; சந்தைப்படுத்தல் மற்றும் நிதித் துறையை இயக்கினார்.
2005ம் ஆண்டு ஒரு நாளைக்கு ஒரு கிலோ தோசை மற்றும் இட்லி மாவு கொண்ட 10 பாக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகின. 2007ம் ஆண்டு தலைமை நிர்வாக அதிகாரியாக முஸ்தபா பதவியேற்றதும் இந்த எண்ணிக்கை வளரத் தொடங்கி இன்று நாள்தோறும் 80 ஆயிரம் கிலோ விற்பனை ஆகும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இன்று இந்த பிராண்டின் மதிப்பு ரூபாய் ஆயிரம் கோடி!

ஆம். ஷம்சுதீன் டிகே, ஜாபர் டிகே, அப்துல் நாசர், நௌஷாத் டிஏ... என தன் நான்கு உறவினர்களுடன் முஸ்தபா வெறும் ரூ.25 ஆயிரத்தில் தொடங்கிய இந்நிறுவனத்தின் இன்றைய மதிப்பு இதுதான்! 550 சதுர அடியில் ‘ஐடி’ பிராண்ட் இயங்கத் தொடங்கியது. ஸ்கூட்டரில் டெலிவரி செய்தனர். அப்படிப்பட்டவர்கள்தான் இன்று அதே பெங்களூரில் 15 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்டமான ஆலைகளுடனும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுடனும் இயங்குகின்றனர்.

வெறும் இட்லி / தோசை மாவுடன் முஸ்தபா நின்றிருந்தால் இந்தளவுக்கு வளர்ச்சி சாத்தியமாகி இருக்காது. ராகி இட்லி / தோசை மாவு, மலபார் பரோட்டா, அரிசி ரவா இட்லி மாவு, முழு கோதுமை, ஓட்ஸ் தோசை... என இட்லி / தோசை மாவுகளில் பல வெரைட்டிகளை அவர் அறிமுகப்படுத்தியதே இந்த வளர்ச்சிக்குக் காரணம். இதுவேதான் நாம் கற்க வேண்டிய பாடமும்.
தொழில் செய்ய நினைப்பவர்கள் பெரியதாக யோசிக்க வேண்டும் என்று அவசியமில்லை. சிறியதாக ஆலோசித்தாலும் போதும். ஆனால், அதை சின்சியராகச் செய்ய வேண்டும். ‘அப்பாடா போதும்...’ என அமராமல் செய்யும் தொழிலையே இன்னும் எப்படி மேம்படுத்தலாம் என சிந்தித்தால் வாழ்க்கை சித்திக்கும்.

முக்கியமாக, தெரியாத விஷயங்களில் கால் பதிக்காமல் தெரிந்த விஷயத்தையே எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்று யோசித்தால்,  வாழ்க்கையே ஸ்பெஷலாக மாறும்.
முஸ்தபாவின் வாழ்க்கை கற்றுத் தரும் பாடம் இதுதான். இது மட்டும்தான்.நாம் அனைவரும் தினசரி நிறைய சிறிய பொருட்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் நிறைய பணம் சம்பாதிப்பவர்கள் இந்த உலகில் குறைவு. அந்தக் குறைவானவர்களில் முதன்மையாக இருப்பவர் முஸ்தபா.

‘‘நாங்கள் அனைவரும் தினமும் கூலி வேலை செய்தால் ரூ.10 கிடைக்கும். இதை வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு மூன்று வேளை மொத்த குடும்பமும் சாப்பிட முடியுமா..? உணவு என்பதே எனக்கு கனவாக இருந்தது... அதனால்தான் அந்தக் கனவையே இன்று என் வாழ்க்கைக்கான அடித்தளமாக - தொழிலாக நான் மாற்றிக் கொண்டிருக்கிறேன்; எனது பசியைப் போக்கி மற்றவர்களின் பசியையும் போக்குகிறேன்.

இன்று கோடிகளில் புரளும் இந்த நேரத்திலும் ‘கல்வியை விட உணவு முக்கியம்’ என்பதையே அழுத்திச் சொல்வேன். ஏனெனில் பசிதான் என்னை படிக்க வைத்தது... பசிதான் எளிய மக்களின் பசியைப் போக்குவதற்கான தொழிலில் என்னை நுழைய வைத்தது. பசிதான் இன்று எனக்கு மட்டுமல்ல... எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் சோறு போடுகிறது...
ஆம். எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்துத் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் மூன்று வேளையும் உணவிடுவது பசிதான்...’’ என அழுத்தமாகச் சொல்கிறார்
முஸ்தபா.வெற்றி பெற்றவர் சொல்கிறார் என்றால் அது சரியாகத்தானே இருக்கும்?!

ஜான்சி