தாய்வானின் பபுள் டீ...இப்போது சென்னையில்!



சின்ன பல்ப் போன்ற குடுவை... அதில் வண்ண வண்ண முத்துக்கள் மிதக்க பார்க்கவே கண்களுக்கு விருந்தாக இருக்கும் பபுள் டீ, 1980களில் தாய்வானில் அறிமுகமானது. இந்த பபுள் டீதான் இப்போது சென்னை இளைய தலைமுறையினரின் ஹாட் டிரிங்க்காக வலம் வந்துகொண்டிருக்கிறது!அதென்ன பபுள் டீ..? இதற்கும் வரலாறு இருக்கிறது! சீனாவைச் சேர்ந்த லிய ஹான் சேஜே, தன் டீக்கடையில் குளிர்ந்த டீயினை வழங்கி வந்தார். பலர் விரும்பியதால் அதில் சில மாற்றங்கள் செய்ய எண்ணி அதில் மரவள்ளிக்கிழங்கு முத்துக்களைச் சேர்த்துள்ளார்.

பருகிய எல்லாருக்கும் பிடித்துப் போக... அப்படியே மற்ற நாடுகளுக்கும் பிரபலமானது. 80களில் சீனாவில் பிரபலமான அந்த டீயைத்தான் 21ம் நூற்றாண்டில் சென்னை மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளார் கோமதி. இவர் சென்னை நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலையில் ‘டாக்டர் பபுள்ஸ்’ என்ற பெயரில் பபுள் டீயினை அறிமுகப்படுத்தியுள்ளார். ‘‘எனக்கும் உணவுக்கும் சம்பந்தமே கிடையாது. நான் பொறியியல் பட்டதாரி. படிப்பை முடிச்சிட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் கடந்த 17 வருடங்களாக வேலை பார்த்து வந்தேன். வேலை காரணமா அமெரிக்கா, நைஜீரியா, ஆப்பிரிக்கா... என பல வெளிநாடுகளில் இருந்தேன்.

கடந்த வருடம் மகளின் படிப்புக்காக சென்னையில் செட்டிலானேன். இங்கு வந்தபிறகு ஏதாவது ஒரு தொழில் செய்யலாம் எனத் தோன்றியது. அந்த சமயத்தில்தான் என் மகள், ‘ஏன் நீ பபுள் டீ உணவகம் ஆரம்பிக்கக் கூடாது’ என்று கேட்டாள்.அவளுக்கு பபுள் டீ ரொம்ப பிடிக்கும். எந்த ஊருக்கு போனாலும் பபுள் டீக்கடையைத் தேடுவாள். அப்படியே சென்னையில் தேடியவள், கிடைக்காமல் போகவே என்னையே ஆரம்பிக்கச் சொல்லிவிட்டாள்!

மகள் சொன்ன யோசனை எனக்குள் ஒரு ஆவலை ஏற்படுத்த, பபுள் டீ குறித்த ஆய்வில் ஈடுபட்டேன். எனக்கு உணவுத் துறையில் அனுபவம் கிடையாது என்பதால், டைன் இன் ரெஸ்டாரன்ட் செட்டாகாது. சிறிய அளவிலான உணவகம்தான் என்னால் நடத்த முடியும் என்பதில் உறுதியாக இருந்தேன். எல்லாவற்றையும் விட சிம்பிளாக, சிறிய அளவில் ஒரு உணவகம் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ‘டாக்டர் பபுள்ஸை’ ஆரம்பித்தேன்...’’ என்றவர் பபுள் டீ குறித்து விவரித்தார்.

‘‘என்னதான் டீயாக இருந்தாலும், அதைத் தரமாகவும் சுவையாகவும் கொடுக்க வேண்டும். எனவே அதன் தயாரிப்பு குறித்த பயிற்சியில் சேர்ந்தேன். எப்படி தயாரிக்க வேண்டும்... என்ன ஃபிளேவர்ஸ் சேர்க்க வேண்டும்... என்பதையெல்லாம் தெரிந்துகொண்டேன். தொடர்ந்து வாஃபில்ஸ் (waffles) மற்றும் பேபி பேன்கேக் (baby pancake) பற்றியும் கற்றுக் கொண்டேன். அதன்பிறகு மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் இணைந்து இதனை ஆரம்பித்தேன்.

என்னதான் நான் பயிற்சி எடுத்துக்கொண்டாலும், சென்னை மக்களுக்கு இதனை எப்படி கொடுக்கலாம் என்று யோசித்து அதற்கான மெனுவை தயாரித்தேன். என்னைப் பொறுத்தவரை, எல்லா உணவுகளையும் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எதைக் கொடுத்தாலும் சிம்பிளாக சிறப்பாகக் கொடுக்க வேண்டும்...’’ என்றவர் பபுள் டீ பற்றி விவரித்தார்.‘‘பபுள் டீ என்பது ஃபிளேவர்ட் பிளாக் டீதான். இதில் மரவள்ளிக்கிழங்கினால் தயாரிக்கப்பட்ட சின்னச் சின்ன முத்துக்களைச் சேர்த்துத் தருவோம். இந்த முத்துக்களை போபா பேர்ள்ஸ் (boba pearls) என்று சொல்வார்கள்.

கருப்பு நிறத்தில் இருக்கும் இந்த முத்துக்கள், ஜவ்வரிசியின் பெரிய வடிவம் போல் இருக்கும். டீயைக் குடித்துக் கொண்டே அந்த முத்துக்களை மென்று சாப்பிட வேண்டும்.
பபுள் டீயை இங்கு ஐந்து விதமாகக் கொடுக்கிறோம். பபுள் டீ, பபுள் ஷேக், பிரீமியம் ஷேக், பபுள் மில்க் டீ, பபுள் லசி. பபுள் டீ என்பது ஃப்ரூட் ஃபிளேவர் ஐஸ் டீ. பேஷன் பழம், கிரீன் ஆப்பிள், லிட்சி, ப்ளூபெரி, கிவி, தர்பூசணி, ஸ்ட்ராபெரி, கிவி, பைனாப்பிள், கிரான்பெரி, கொய்யா, பல்பி ஆரஞ்ச், மாம்பழம்... போன்ற ஃபிளேவர்களில் ஐஸ் டீயைக் கொடுக்கிறோம். இதில் பால் சேர்க்கப்படாது.

ஸ்ட்ராபெரி, கிவி, ப்ளூபெரி, லிட்சி வாட்டர்மெலன், கிரான்பெரி... போன்ற ஃபிளேவர்கள் கொண்ட டீயுடன் ஐஸ்கிரீம் சேர்க்கப்படுவது, பபுள் ஷேக். பபுள் டீயின் கிளாசிக் ஃபிளேவர்களான ஹாங்காங், தாய், வியட்நாம் பர்ப்பிள் தாரோ, ஜாப்பனீஸ் மாட்சா கிரீன் மற்றும் ஹேசில் நட் காபி ஃபிளேவர்களை அறிமுகம் செய்து, பபுள் மில்க் டீயாகக் கொடுக்கிறோம். இவை அனைத்தையும் பிளாக் டீயுடன் பால் சேர்த்து தருகிறோம். அப்போதுதான் அந்த டீயின் ஃபிளேவர்களை உணர முடியும்.

வெனிலா, பட்டர்ஸ்காட்ச், சாக்லெட், கோல்ட் காபி, கிட்கேட்... இந்த ஃபிளேவர் ஐஸ்கிரீம்களை ஷேக்காக தயாரித்துக் கொடுப்பதே பிரீமியம் ஷேக். கடைசியாக லசி. தயிருடன் மாம்பழம், லிட்சி, கொய்யா, ஸ்ட்ராபெரி, கிரான்பெரி, லிட்சி வாட்டர்மெலன், வெனிலா, ப்ளூபெரி போன்ற ஃபிளேவர்களைச் சேர்த்து லசி போல் அடித்துத் தருகிறோம். எல்லா பபுள் டீயுடனும் போபா முத்துக்கள் சேர்த்து தரும் போது அதன் சுவை மேலும் அதிகரிக்கும்.

இந்த முத்துக்களும் மூன்று வகையாக வருகிறது. அதனை ஒவ்வொரு டீக்கு ஏற்ப கொடுக்கிறோம். இதில் பாரம்பரியமானது மரவள்ளிக்கிழங்கால் தயாரிக்கப்பட்ட முத்துக்கள். இந்த முத்துக்களை பெரும்பாலும் பால் சார்ந்த டீ, ஷேக் மற்றும் லசியில் சேர்த்து தருகிறோம். ஃப்ரூட் ஃபிளேவர் கொண்ட ஐஸ் டீக்களுக்கு பாபிங் முத்துக்கள் பெஸ்ட் காம்பினேஷன். இந்த முத்துக்களை மென்று சாப்பிட வேண்டாம். வாயினுள் நுழைந்த அடுத்த வினாடி வெடிக்கும். கிவி, கிரீன் ஆப்பிள், எலுமிச்சை, மாம்பழம், ஸ்ட்ராபெரி, கிரான்பெரி பழச்சாறு கொண்டு முத்துக்கள் நிரப்பப்பட்டிருப்பதால், வெடிக்கும்போது அந்த பழத்தின் சுவையினை உணரமுடியும்.

அடுத்து லிட்சி, காபி, தேங்காய் போன்ற ஃபிளேவர்களில் ஜெல்லி போபா வரும். இவை எல்லாம் குளிர்ச்சியாக பருகக் கூடியவை. தாரோ மில்க் டீ, மாட்சா ஜாப்பனீஸ் டீ, ஹாங்காங் டீ, ஹேசில் நட் காபி, ஹாட் சாக்லெட் மற்றும் தாய் கிரீன் டீ போன்ற சூடான பானங்களும் உண்டு. இவற்றில் போபா முத்துக்களை சேர்ப்பதில்லை.

குளிர்ச்சி பானங்களில் முத்துக்களையும் சேர்த்து ஸ்ட்ராவில் உறிஞ்சி சாப்பிட முடியும். அதற்காக பெரிய வடிவ ஸ்ட்ராக்களை பயன்படுத்துகிறோம். சூடாக குடிக்கும் போது, ஸ்ட்ரா கொண்டு குடித்தால் நாக்கு வெந்துவிடும் என்பதாலேயே சூடான பானங்களில் போபா முத்துக்களைச் சேர்ப்பதில்லை...’’ என்றவர் வாஃபில்ஸ் மற்றும் பேபி பேன்கேக்ஸ் பற்றியும் விவரித்தார்.

‘‘பபுள் டீயுடன், வாஃபில்ஸ் மற்றும் பேன் கேக்கும் அறிமுகம் செய்திருக்கிறோம். ஃபிரெஞ்ச் ஃபிரைஸ், மோமோஸ் எல்லா இடங்களிலும் கிடைப்பதால், நான் இதை வித்தியாசமாகக் கொடுக்க விரும்பினேன்.

பொதுவாக இனிப்புச் சுவையில்தான் வாஃபில்ஸ் வரும். நான் அதை காரமாகவும் கொடுக்கிறேன். உருளை வாஃபில்ஸ் இங்கு ஃபேமஸ். வாஃபில்ஸில் வேகவைத்த உருளை, சீஸ், பார்பெக்யு சாஸ், சில்லி கார்லிக், ஜலாபென்னோ சீஸ், சால்சா மெக்சிகன் போன்ற பல வகை ஃபிளேவர்களில் தருகிறேன். வாஃபில்ஸ் இனிப்பாக இருக்கும். அதனுடன் காரமாக உருளை சேர்த்து சாப்பிடும் போது, வித்தியாச சுவையைத் தரும். வாஃபில்ஸினை பபுள் வடிவம், அமெரிக்கன் வாஃபில்ஸான சதுர வடிவம் மற்றும் கோன் வடிவத்திலும் தருகிறோம்.
வாஃபில்ஸை காரமாக மட்டுமில்லாமல் ஐஸ்கிரீமுடனும் தருகிறோம். இதில் எங்களின் சிக்னேச்சர், நாச்சோஸ் வாஃபில்ஸ்.

நாச்சோஸ் வடிவத்தில் வாஃபில்ஸினை செய்து அதில் ஐஸ்கிரீம் சாக்லெட் சாஸ் சேர்க்கப்பட்டிருக்கும். பேபி பேன்கேக்ஸ்... சிறிய வடிவ பேன்கேக்கில் வாழைப்பழம் நுட்டெல்லா, பெல்ஜியன் சாக்லெட், ஸ்ட்ராபெரி கிரீம் மற்றும் ஐஸ்கிரீம் சேர்த்து தருகிறோம். இப்போது மொஜீட்டோ பபுள் டீயை அறிமுகம் செய்யும் எண்ணம் உள்ளது...’’ என்றவர் தமிழகம் முழுதும் பபுள் டீயை அறிமுகம் செய்யும் எண்ணம் இருப்பதாக தெரிவித்தார்.

‘‘முதலில் சென்னையில் காசாமேஜர் சாலையில் கடந்த வருடம் ஜனவரி மாசம் ஆரம்பிச்சோம். ஆறே மாசத்தில் சென்னை அண்ணாநகரில் மற்றொரு கிளையைத் தொடங்கினோம். அடுத்து அடையாரில் துவங்க இருக்கிறோம். இப்படியாக சென்னையில் பல இடங்களில் இதனை ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது. பிறகு அப்படியே திருச்சி, மதுரை, கோவை, ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களிலும் பபுள் டீக்களை தொடங்கும் திட்டமுள்ளது. சிறிய தொழிலாக இருந்தாலும், அதனை பல மடங்காகப் பெருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.

போபா முத்துக்கள் முதல் வாஃபில்ஸ் மாவு வரை அனைத்தையும் ஒரே டீலரிடம் இருந்தே நாங்கள் வாங்குவதால் எந்தக் கிளையில் சாப்பிட்டாலும் - பருகினாலும் - சுவை மாறாது.
பல இடங்களில் கிளைகளைத் திறக்கும் போது, பலருக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரமுடியும். பெரிய பெரிய உணவகம் போல் ஒரு மாஸ்டர் செஃப் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. எங்களின் பயிற்சி முறையைப் பின்பற்றினாலே போதும். ஒரே வாரத்தில் அவர்கள் ஷேக் முதல் வாஃபில்ஸ் வரை செய்ய கற்றுக் கொள்வார்கள்...’’ என்றார் கோமதி.l

செய்தி: ப்ரியா

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்