கன்னட பெண் ஒளிப்பதிவாளர்னு நான் மட்டுமே இருக்கேன்! சொல்கிறார் ப்ரீத்தா ஜெயராமன்



தமிழ் சினிமாவில் பெண் தொழில்நுட்பக் கலைஞர்களே மிகவும் குறைவு. அதிலும் ஆண்கள் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் ஒளிப்பதிவுத் துறையில் உள்ள பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.
இதில் இந்திய அளவில் குறிப்பிடத்தகுந்த பெண் ஒளிப்பதிவாளராக ஜொலிப்பவர் ப்ரீத்தா ஜெயராமன்.‘கண்ணாமூச்சி ஏனடா’, ‘அபியும் நானும்’, ‘கௌரவம்’, ‘ஹே சினாமிகா’ என பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களின் வழியே தமிழ் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர். அதுமட்டுமல்ல. தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு என நான்கு மொழிகளில் படுபிஸியான கேமரா வுமன் இவர். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமின் பள்ளியில் படித்தவர்.

இப்போது ‘வானம் கொட்டட்டும்’ இயக்குநர் தனா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் ஒன்றில் கமிட்டாகி இருக்கிறார். இதுதவிர கன்னடம், தெலுங்கு படங்களில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் ப்ரீத்தா. ‘‘என்னுடைய குரு பி.சி.ஸ்ரீராம்சார்தான். பெரும்பாலான ஒளிப்பதிவாளர்களின் ஆதர்சம் அவர். ஆனா, எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்! ஏன்னா, அவர் என்னுடைய மாமா. அவரைப் பார்த்தே ஒளிப்பதிவாளராகும் கனவுடன் இந்தத் துறைக்குள் வந்தேன்.

இன்னைக்கு எனக்குனு ஓர் அடையாளத்துடன் பெயர் சொல்லும்படி செயல்பட்டுக் கொண்டிருக்கேன். ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...’’ என நம்பிக்கையுடன் புன்னகைக்கும் ப்ரீத்தா, தன் பயணம் பற்றி பகிர்ந்தார். ‘‘சின்ன வயதில் இருந்தே எனக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம். அப்பா ஜெயராமன் மெக்கானிக்கல் எஞ்சினியர். என் ரோல் மாடல் அப்பாதான். ஒரு காரியத்தை எப்படி சரியா செய்யணும் என்பதை அவரிடமிருந்தே கத்துக்கிட்டேன்.

தாத்தா டாக்டர். அம்மா லலிதா, ஹவுஸ்வொய்ஃப். சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத குடும்பம். ஆனா, கோடை விடுமுறைக்கு அம்மாவழி பாட்டி வீட்டுக்குப் போவேன். அங்க பி.சி. சார் எப்பவும் கேமரா மீட்டரை கையில் வச்சுக்கிட்டே இருப்பார். என்னையும் தங்கச்சி ரூபாவையும் மாடலாக நிறுத்தி ஆஃப் லைட்டிங்கில் பல்வேறு கோணங்கள்ல விதவிதமா புகைப்படம் எடுப்பார். அப்ப எனக்கு கேமரா பத்தி ஒண்ணுமே தெரியாது. எனக்கு பதினாறு வயசிருக்கும்போது என் அத்தை ஒரு சின்ன கேமராவை பரிசா தந்தாங்க.

அதை வச்சு எங்க வீட்டை சுத்தியிருந்த தென்னைமரம், படிக்கட்டுகள், இயற்கைக் காட்சிகள்னு எல்லாத்தையும் படம் பிடிச்சித் தள்ளினேன். பிறகு அதை லேபிற்கு எடுத்திட்டுப் போய் பிரிண்ட் போட்டுப் பார்ப்பேன். அது எனக்குள்ள ஒரு கற்பனை உலகத்தையே உருவாக்கியது. ஒருவிதமான ஈர்ப்பை ஏற்படுத்துச்சு. என்னை அறியாமலே சினிமா எண்ணத்தை எனக்குள் விதைச்சது.

பள்ளிப் படிப்பு முடிச்சதும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் சேரணும்னு ஒற்றைக்கால்ல நின்னேன். என்னுடைய பிடிவாதத்தால சரினு சொன்னாங்க. இதை பி.சி.சார்கிட்ட சொன்னதும், எப்படி இந்தப் பொண்ணு சினிமாட்டோகிராஃபியை ஹேண்டில் பண்ணுவானு அவருக்கு ஒரே குழப்பம். இருந்தும் ஆசீர்வதிச்சார். இன்ஸ்டிடியூட்ல சேர அப்ளிகேஷன் வாங்கி ரெடியா இருந்தநேரம், வகுப்பு ஆரம்பிக்க தாமதமாச்சு. அதுவரை சும்மா இருக்கக்கூடாதுனு ஆறுமாசம் சைக்காலஜிக்கல் கோர்ஸ் படிச்சேன்.

பிறகு ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தேன். எங்க பேட்ஜில் சேர்ந்த பதினைந்து பேரில் நான் மட்டுமே பெண். அந்த மூணு ஆண்டுகள் டிப்ளமோ கோர்ஸ்ல சினிமாட்டோகிராஃபி, ஸ்டில் போட்டோகிராஃபி, எடிட்டிங், டைரக்‌ஷன்னு அடிப்படை விஷயங்களை ஏ டூ இசட் கத்துக்கிட்டேன். இதுல எனக்கு ஒளிப்பதிவு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதை சிறப்பா செய்தேன். அதனால, பெஸ்ட் சினிமாட்டோகிராஃபர்னு அங்க தங்கப் பதக்கம் வாங்கினேன்.

வெளியே வந்ததும் சார்கிட்டயே சேரணும்னு போய் நின்னேன். என்னைப் பார்த்ததும், ‘நீ படிச்சதை செட்ல செய்துகாட்டு... எனக்கு திருப்தி இருந்தால் சேர்த்துப்பேன்’னு சொன்னார். எனக்கு ஒரே பயம். ஆனாலும் நம்பிக்கை தளராமல் செய்தேன். அவருக்குப் பிடிச்சது. ‘மே மாதம்’ படத்துல உதவியாளரா ஆரம்பிச்சு, ‘குருதிப்புனல்’, ‘பாசவலை’னு நிறைய படங்கள்ல அவருக்கு உதவியாளரா ஐந்து ஆண்டுகள் அவருடனே பயணிச்சேன். அந்த நாட்கள் ரொம்ப இனிமையானது.

பி.சி சாரைப் பொறுத்தவரை அவர் ஒரு இன்ஸ்டிடியூஷன்னுதான் சொல்லணும். அவ்வளவு திறமைகள் அடங்கிய மிக எளிமையான மனிதர். ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமா பண்ணணும்னு அவர் மெனக்கெடும் விதம், கூட இருப்பவங்களுக்கு மட்டுமே தெரியும். இப்பவரை அப்படியேதான் தன் பணிகளைச் செய்திட்டு வர்றார்.

அந்த வித்தைகளை அருகிலிருந்தே கற்றுக் கொள்ள முடியும். நமக்கு ஆர்வம் மட்டுமே வேண்டும். எனக்கு அந்த பாக்கியம் கிடைச்சது கடவுளின் ஆசீர்வாதம்தான்...’’ என நெகிழ்ந்தபடி தொடர்ந்தார்.  

‘‘பி.சி. சார்கிட்ட இருந்து வெளியே வந்ததும் என்.எஃப்.டி.சிக்காக ஒரு டாக்குமெண்ட்ரி ஃபிலிம் பண்றதுக்கு வாய்ப்பு கிடைச்சது. அதுக்காக தில்லிக்குப் போனேன். அங்க ஓராண்டு பணி செய்தேன். பிறகு, ஆஸ்திரேலியாவில் மாஸ்டர் இன் ஃபிலிம் டெக்னாலஜி படிச்சேன். 2003ல் திருமணமாச்சு. கணவர் ஸ்ரீகாந்த் பெங்களூர்ல பணிசெய்றார். அப்புறம் மகள் மீரா பிறந்தாள்.
இதுக்கிடையில் அனிதா உதிப்பின் பென்டா மீடியாவுடன் சேர்ந்து, ‘Knock Knock, I’m Looking to Marry’னு ஒரு ஆங்கிலப் படம் பண்ணும் வாய்ப்பு கிடைச்சது. இதுதான் நான் ஒளிப்
பதிவு செய்த முதல் படம்.

அப்புறம், ‘கண்டநாள் முதல்’ படம் இயக்கிய வி.ப்ரியா ‘கண்ணாமூச்சி ஏனடா’ பண்ண அழைச்சாங்க. தொடர்ந்து, ‘அபியும் நானும்’, ‘கௌரவம்’, ‘உன் சமையலறையில்’னு பிஸியானேன். இதுல ‘உன் சமையலறையில்’ படம் மட்டும் தமிழ், தெலுங்கு, கன்னடம்னு மூணு மொழிகள்ல பண்ணினேன். பிறகு கன்னடத்தில், ‘பாக்ஸர்’, ‘ஆதிலட்சுமி புராணா’, ‘படுவா ராஸ்கல்’ செய்தேன். இப்ப தமிழ்ல ‘ஹே சினாமிகா’ வெளியாகியிருக்கு. இப்படியாக என் பயணம் போகுது. ஆனா, இதுல பெண்ணா பல கஷ்டங்கள் இருக்கு...’’ என்கிறார் ப்ரீத்தா.  

‘‘என்னுடைய கேரியர்ல ஆரம்ப காலத்தில் நிறைய போராட்டங்கள் இருந்துச்சு. அதையெல்லாம் கடந்து வந்துட்டேன். ஏன்னா செட்ல ரொம்ப நேரம் நிற்கணும். ஃபீல்டு வொர்க் பண்ணணும். கேமராவை  ஹேண்டில் செய்யணும். இரவு நேர ஷூட்டிங்ல பணிபுரியணும். இப்படி நிறைய இருக்கு. அடுத்து குடும்பம் முழு சப்போர்ட் செய்யணும்.

அதனால நம்பிக்கையும், தைரியமும் இருந்தால்தான் சிறப்பா பணிகள் செய்ய முடியும். அப்புறம் மற்ற துறைகள் மாதிரி இந்தத் துறையில் உடனே கைநிறைய சம்பளம் கிடைக்காது. ஒரு இடத்தைப் பிடிக்கும் போதே உங்களுக்கான அங்கீகாரம் வரும்.  அதுவரை பொறுமையா காத்திருக்கணும்.

என்னைப் பொறுத்தவரை நான் எதைப்பத்தியும் கவலைப்படாமல் சுதந்திரமா என்னுடைய வேலைகள்ல ஓடிட்டே இருந்தேன். அப்புறம் குடும்பமும் நிறைய ஒத்துழைச்சாங்க. அவங்க சப்போர்ட்டால்தான் இன்னைக்கு நான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். இப்ப இந்தத் துறையில் இந்தியா முழுவதும் மொத்தத்துல 200 பெண்கள்தான் இருப்பாங்க.

நம்ம தென்பகுதியில் இன்னும் குறைவுதான். கர்நாடக மாநிலத்துல யாருமே இல்ல. நான் பெங்களூர்ல இருக்கிறதால கன்னட ஒளிப்பதிவாளர்னு நான் மட்டுமே இருக்கேன். இந்தத் துறையில் இன்னும் நிறைய பெண்கள் வந்து சாதிக்கணும் என்பதே என் ஆசை!’’ என கண்கள் மிளிர சொல்கிறார் ப்ரீத்தா!

ஆர்.சந்திரசேகர்