கும்பகோணம்-அரியலூர் சாலையில் அணைக்கரையை ஒட்டியுள்ள சிறிய கிராமம் கோடாலி கருப்பூர். ஒரு காலத்தில் இந்த கிராமத்தின் நெசவுத்தொழிலை உலகமே திரும்பிப் பார்த்தது. இங்கு தயாரிக்கப்பட்ட தங்க இழை காட்டன் சேலைகளை அணிவது கௌரவத்தின் அடையாளமாகவே கருதப்பட்டது. இந்தியாவில் மட்டுமின்றி பிற நாட்டு மன்னர்களும், தங்கள் பட்டத்தரசிகள் கோடாலி கருப்பூர் சேலையை அணியவேண்டும் என்று விரும்பினர். லண்டனில் இருக்கும் விக்டோரியா ஆல்பர்ட் மியூசியம், மும்பை சத்ரபதி சிவாஜி மியூசியம், அகமதாபாத் காலியோ மியூசியம், டில்லி நேஷனல் மியூசியம் போன்ற புகழ்பெற்ற மியூசியங்களில் கோடாலி கருப்பூர் சேலைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
ஒரிஜினல் தங்க ஜரிகையை 100 அல்லது 80ம் நம்பர் வெள்ளை காட்டன் நூலோடு ஊடையாக நெய்து, செடிகள், காய்கறிகளிலிருந்து உருவாக்கப்பட்ட இயற்கை வண்ணங்களால் சாயம் இடுவர். அதன்மேல், இயற்கை நிறங்களால் கைகளாலும், மர அச்சுகளாலும் ஓவியங்களை வரைவார்கள். கோடாலி கருப்பூர் சேலைகளின் தனித்துவம் இதுதான்! நூறாண்டுகளுக்கு முன்பே இச்சேலைகள் 500 வெள்ளி நாணயங்களுக்கு விற்கப்பட்டுள்ளன.

நாயக்கர் காலத்தில் தஞ்சைக்கு வந்த கவரச் செட்டியார்களே இந்த உலகப் புகழ் சேலைகளின் கர்த்தாக்கள். நாயக்கர் ஆட்சி மறைந்து, மராட்டியர் ஆளுமைக்குள் தஞ்சை வந்தபிறகு இம்மக்கள் கோடாலி கருப்பூருக்கு இடம்பெயர்ந்து விட்டனர். ஆங்கிலேய ஆதிக்க காலத்தில் இக்கலை ஊக்குவிக்கப்படவில்லை. உழைப்புக்கு இணையாக விலை அதிகமாக இருந்ததால் வாங்குவார் இன்றி காலப்போக்கில் இந்த கலைமரபே அழியும் நிலை உருவானது. ஆனாலும், கவரச் செட்டியார்கள் இக்கிராமத்தையும் நெசவையும் கை விடவில்லை. இன்றும் தனித்துவமான அடர்நிற காட்டன் சேலைகளை நெய்கிறார்கள்.
அண்மையில், மத்திய ஜவுளித்துறை மீண்டும் பாரம்பரிய முறைப்படி சேலைகளை நெசவுசெய்ய இங்குள்ள நெசவாளர்களுக்கு பயிற்சி அளித்தது. இயற்கை சாய உற்பத்தி, ஓவியம் வரைதல், துணியைப் பதப்படுத்துதல் உள்ளிட்ட பல நுணுக்கங்கள் கற்றுத்தரப்பட்டன. இதற்கென ஒரு கூட்டுறவு சங்கமும் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்போது இங்குள்ள முதலியார் தெரு, கவரைத் தெருக்களில் 200க்கும் அதிக நெசவாளர்கள் சேலை நெய்கிறார்கள். கவரச் செட்டியார்களோடு, முதலியார், தேவாங்க செட்டியார்களும் நெசவில் ஈடுபட்டுள்ளார்கள். ஊடாகவும் பாவாகவும் 100ம் நம்பர் காட்டன் நூலையே பயன்படுத்துவதால் சேலை பஞ்சு போல இருக்கிறது. பார்வையை உறுத்தாத அளவுக்கு அளவான ஜரிகை வேலைப்பாடுகள் செய்கிறார்கள். அடர்ந்த நிறமே இப்போதைய கோடாலி கருப்பூர் சேலைகளின் அடையாளம். ‘பளிச்’ என தனித்து அடையாளம் பெற விரும்பும் இளம்பெண்களுக்கு உகந்த சேலை. எல்லா தட்பவெப்பத்துக்கும் தகுந்தது. 450 முதல் 1500 ரூபாய் வரை விலை.
ஊரின் ஒதுக்குப்புறத்தில் காட்டன் சேலைகளுக்கான கூட்டுறவு சங்கம் ஒன்று இயங்குகிறது. நெசவாளர்களுக்கு நூல் வழங்கி, நெய்த சேலைகளை கொள்முதல் செய்து கோ&ஆப்டெக்ஸ் விற்பனை மையங்களுக்கு அனுப்பும் பணியை மேற்கொள்கிறது.
சில இளம் நெசவாளர்கள் பழைய மரபுப்படி சேலை உற்பத்தி செய்யும் முயற்சியில் இறங்கியிருப்பதும் குறிப்பிடத்தகுந்தது. மத்திய ஜவுளித்துறையின் பயிற்சிபெற்ற நெசவாளர் கணேசகுமார், மீண்டும் இயற்கை வண்ணங்கள் பயன்படுத்தி சேலை உற்பத்தி செய்கிறார்.
‘‘கோடாலி கருப்பூர் சேலைகள்ல கருப்பு, சிவப்பு, நீல நிறங்கள் பிரதானமா இருக்கும். சேலை முழுவதும் மொட்டு, கற்பக விருட்சம், யானை, பூக்கள், ஜிக் ஜாக் வளைவுகள், பல் போன்ற டிசைன்கள் இருக்கும். டீத்தூள், பீட்ரூட், அவுரி வேர், பனைவெல்லம், கடுக்காய், படிகாரம், ஆடாதொடைகள்ல இருந்து சாயம் தயாரிப்பாங்க. திரும்பவும் அதே டைப்ல இயற்கை சாயங்கள் போட்டு, மர டையிங்ல டிசைன் பண்ணி சேலைகளை தயாரிக்க முயற்சி செய்யறோம். இப்போ விரும்பிக் கேட்டு வர்றவங்களுக்கு மட்டும் தயார் பண்ணிக் கொடுக்கிறோம். இதையே பெரிய அளவில் செய்றதுக்கான வேலைகளும் நடந்துக்கிட்டிருக்கு. பழைய தரம் இல்லாட்டியும் கூட அந்த சாயலையாவது சேலைகள்ல கொண்டு வருவோம். ரொம்ப காலத்துக்கு கலர் மாறாம உழைக்கும்’’ என்கிற கணேசகுமார், ‘‘இதுபோன்ற சேலைகளை, இப்போதுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1500 ரூபாய்க்குள் உருவாக்க முடியும்’’ என்கிறார்.
அண்மைக்காலமாக, இளம்பெண்களைக் குறிவைத்து கூடுதல் ஜரிகை வேலைப்பாடுகள் உள்ள சேலைகளையும் உருவாக்குகிறார்கள். அச்சேலைகள் காட்டன் பட்டுக்கு இணையாக பார்வையை ஈர்க்கின்றன.
பொதுவாக அடர்நிறத்தில் சேலை கட்டினால் ‘வெறிக்கும்’ என்பார்கள். ஆனால், பார்டர் ஜரிகை, புட்டாக்கள் எல்லாம் சேர்ந்து மிக்ஸிங் வண்ணங்களாக ஜொலிப்பதால், அந்தச் சங்கடம் ஏற்பட வாய்ப்பில்லை. வண்ணத்தை தேர்வு செய்து உடுத்தினால் அழகைக் கூட்டும். குறிப்பாக பணிக்குச் செல்லும் பெண்களுக்கு தொந்தரவில்லாத, உகந்த சேலை ரகம் இது.
எங்கு கிடைக்கும்?கோடாலி கருப்பூர் அடர்நிற காட்டன் சேலைகள் கோ&ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் கிடைக்கும். பாரம்பரிய முறைப்படி உருவாக்கப்படும் கோடாலி கருப்பூர் சேலைகள் வாங்க விரும்பினால் இவ்வூரைச் சேர்ந்த நெசவாளர் கணேசகுமாரை 98432 94932, 04331&260209 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
வெ.நீலகண்டன்
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்
மாடல்கள்: குடந்தை ஸ்டார் கணினி மைய
மாணவிகள் பிரியங்கா, சாந்தி, கீதாராணி, சத்யா, கீதா.