‘‘நான் சினிமாவுக்கு வந்து பத்து வருஷங்கள் ஆச்சு. இந்தப் பயணத்தில பெரும்பாலும் என் தம்பி ஜெயம் ரவியை ஹீரோவா வச்சே படங்களை இயக்கியிருக்கேன். இப்ப மாஸ் ஹீரோவான விஜய்யை இந்தப்படத்தில இயக்கியிருந்தாலும், இதுக்கும் ரவியை வச்சுப் படமெடுத்ததுக்கும் பெரிய வித்தியாசமில்லை. அத்தனை சகோதர உணர்வோட இயல்பா பழகினார் விஜய்...’’ என்கிறார் ஆஸ்கர் பிலிம்ஸின் ‘வேலாயுதம்’ இயக்குநர் எம்.ராஜா.
படப்பிடிப்பே நூறு நாட்களுக்கும் மேல் தொடர்ந்த பிரமாண்டத்தில் படம் முடிந்து இசை வெளியீட்டுக்கான நிலையில் இருக்க, ‘வேலாயுதம்’ பற்றிப் பேசினார் ராஜா.
‘‘விஜய் படம்னாலே சந்தோஷம் இருக்கும். இதுல அந்த சந்தோஷம் வித்தியாசமா உணரப்படும். நினைச்சபடி படம் வந்திருக்கிறதிலயே இதோட வெற்றி உறுதியாகியிருக்கு. விஜய்யைத் தவிர இந்தப் படத்தோட கதைல யாராலயும் நடிக்க முடியாது. ஏன்னா ஒருமுகம் இல்லாம காமெடி, சீரியஸ், ஆக்ஷன், பாசம்னு பன்முகம் கொண்ட நடிப்புக்கு அவர்தான் சரியான தேர்வு. நான் எப்படி விஜய் படம் இயக்க ஆர்வமா இருந்தேனோ, அதே ஆர்வத்தில அவரும் இருந்தார். முதல் சந்திப்பிலேயே, ‘நாம ரெண்டுபேரும் ஒண்ணா டிராவல் பண்ணுவோம். உங்க தம்பியை வச்சு ஏகப்பட்ட ஹிட்டுகளைக் கொடுத்த நீங்க என்னை வச்சும் ஒரு ஹிட் கொடுங்க...’ன்னு எளிமையா கேட்டது மகிழ்ச்சியைத் தந்தது. அதே மகிழ்ச்சி ஷூட்டிங்கோட கடைசி நாள் வரை இருந்தது...’’ என்றவர் தொடர்ந்தார்.

‘‘இந்தப் படத்தோட கதைக்களம் மக்களுக்கானது. மக்கள்ல ஒருவன் மக்கள் தலைவனாகிற கதை. எங்கோ ஒரு கிராமத்தில பால் கறந்து பிழைச்சுக்கிட்டிருந்த ‘வேலு’ங்கிற தனி மனிதன், மக்களுக்கான ஆயுதமா... வேலாயுதமா மாறுவதுதான் கதையோட லைன். எதார்த்தமான ஒரு மனிதன் ஒரு சூப்பர் ஹீரோவா மாறும் இந்தக் கதைக்குள்ள மக்கள் பிரச்னை, முக்கோணக்காதல், தங்கைப்பாசம், அதிரடி ஆக்ஷன், அட்டகாச காமெடின்னு எல்லாமே இருக்கு. விஜய்யிடம் இதுவரை நாம ரசிச்ச எல்லா விஷயங்களும் இந்தப்படத்தில இருக்கும். அதுக்காகவே படத்தோட ஒவ்வொரு பிரேமையும் விஜய்யை மனசில வச்சே எழுதினேன்.
ரெண்டு முகங்கள்ல வர்ற அவருக்கு இந்தப்படத்தில ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானின்னு ரெண்டு ஹீரோயின்கள். இதில கிராமத்துப்பக்கம் ஹன்சிகாவும், நகரத்துப்பக்கம் ஜெனிலியாவும் வர்றாங்க. என் படங்கள்ல ஹீரோயினுக்கு எப்பவுமே ஹீரோவுக்கு ஈடான முக்கியத்துவம் இருக்கும். ‘சந்தோஷ் சுப்ர மணிய’த்தில ஹீரோவை விட ஒருபடி மேலயே ஜெனிலியா கேரக்டர் இருந்தது. அதுக்கு இணையான முக்கியத்துவமும், நடிப்பாற்றலும் இதுல ஜெனிலியாவுக்கு இருக்கு. இன்னொரு பக்கம், நடந்துவந்தா ஒரு கூட்டமே கூடும்ங்கிற அளவுக்கு கொஞ்சம் கிளாமர் தூக்கலான வேடம் ஹன்சிகாவுக்கு. ரெண்டு பேரும் அசத்தியிருக்காங்க.
விஜய்க்கு தங்கையா சரண்யா மோகன். இப்படி ஒரு அண்ணன் இல்லையேன்னு தங்கைகளும், இப்படி ஒரு தலைவன் இல்லையேன்னு மக்களும் ஏங்கற அளவில பாசமும், நேசமுமா இருக்கும் வேலாயுதத்தோட கேரக்டர். சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், சூரின்னு ஏகப்பட்ட காமெடி நடிகர்களால ரசிகர்கள் திக்குமுக்காடப் போறது நிச்சயம். இதுவரை இப்படி ஒரு திரைக்கதை இந்திய அளவில வந்ததில்லைன்னு தைரியமா சொல்லமுடியும்.

ரெண்டு ஹீரோயின்கள், அஞ்சு பாடல்கள், ஆறு சண்டைக் காட்சிகள், 15 வில்லன்கள், 30 காமெடியன்கள்னு ஒரு பிரமாண்ட ஃபார்முலாவோட எடுக்கப்பட்டிருக்க இந்தப்படத்துக்கு எப்படி விஜய் பொருத்தமான ஹீரோவா இருந்தாரோ, அப்படியே தயாரிப்பாளரும். வழக்கமா ஒரு கிராமத்தில ஷூட்டிங் எடுக்கிறதை மாத்தி, 50 நடிகர்கள், 200 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள்னு ஒரு கிராமத்தையே ஷூட்டிங் கூட்டிப்போனோம். அந்தத் தேவைகளைச் சரியா புரிஞ்சுக்கிட்டுத் தயாரிக்க ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் சாரை விட்டாலும் ஆளில்லைன்னு சொல்வேன்.
படத்தோட கிராமத்துப் பகுதிகளை பொள்ளாச்சியிலேர்ந்து திருமூர்த்திமலை போற பாதையில வல்லகுண்டாபுரத்தில படமாக்கினோம். அங்கே படமாக்கப்பட்ட விஜய்யோட அறிமுகப்பாடலுக்கு மட்டும் தப்பாட்ட, கரகாட்டக் கலைஞர்கள் நூறு பேரோட, சென்னையிலேர்ந்து 150 டான்சர்கள் மட்டுமில்லாம... மும்பை, ரஷ்ய டான்சர்களையும் பயன்படுத்தி எடுத்தோம். ப்ரியன் ஒளிப்பதிவைப்பற்றிச் சொல்லவே வேண்டாம். விஜய்யோட இசையமைப்பாளர் விஜய் ஆன்டனியின் காம்பினேஷன் எப்படி இருக்கும்னு ஏற்கனவே தமிழ்நாடு கேட்டிருக்கு. அது இன்னொரு முறை நிரூபணமாகும்.
என் படங்கள்ல எனக்கே ‘எம்.குமரன்...’ படம் அதிகம் பிடிக்கும். அதைவிட அதிகமா இந்தப்படம் பிடிச்சிருக்குன்றது மனப்பூர்வமான உண்மை. அதேபோல தன் படங்கள்ல அதிகம் பிடிச்ச படம்னு வேலாயுதத்தைப் பற்றி விஜய்யும் பெருமைப்பட்டுக்க
முடியும்...’’
வேணுஜி