போஸ்ட் கார்ட் புரொஃபசர்! இது நமக்குத் தெரிஞ்ச அஞ்சல் அட்டை அல்ல...



‘‘நம்மூர்ல அஞ்சல் அட்டைனாலே அது மஞ்சள் நிற அட்டைனுதான் நினைச்சிட்டு இருக்கோம். அப்படியில்ல. இதுல பல வகைகள் இருக்கு. இதை போஸ்ட்கிராஸிங் (https://www.postcrossing.com/) என்கிற இணையதளத்துக்குப் போனபிறகே நான் தெரிஞ்சுகிட்டேன்.

இன்னைக்கு அஞ்சல் அட்டைகள் பயன்பாடே குறைஞ்சு போயிடுச்சு. இருந்தும் உலகம் முழுவதும் இதன் பயன்பாடு ஓரளவு நடந்திட்டே இருக்கு. குறிப்பா, இந்த போஸ்ட்கிராஸிங் இணையதளம் மூலம் பலர் அஞ்சல் அட்டைகளை எழுதி அனுப்பி அதை உயிர்ப்புடன் வச்சிருக்காங்க.
இந்த இணையதளத்துல நானும் ஓர் உறுப்பினர். இப்ப ஏராளமான அஞ்சல் அட்டைகளை சேகரிச்சிட்டு இருக்கேன்...’’ சிரித்தபடியே பேசுகிறார் சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஜெய்சக்திவேல். அதென்ன போஸ்ட்கிராஸிங்?

‘‘இது அஞ்சல் அட்டையில் எழுது பவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட ஓர் இணையதளம். போர்ச்சுக்கலைச் சேர்ந்த ஒருத்தர் இதை 2005ல் உருவாக்கினார். இந்த இணையதளத்துல ரிஜிஸ்ட்டர் பண்ணிட்டு புரொஃபைல்ல உங்க ஆர்வத்தையும், நீங்க எதையெல்லாம் சேகரிக்கிறீங்கங்கிறதையும் போட்டா போதும். அதைத் தெரிஞ்சுகிட்டு இன்னொருவர் அது தொடர்புடைய அஞ்சல் அட்டையை உங்களுக்கு அனுப்புவார்.

இப்படி உலக நாடுகள்ல இருந்து நம்ம ஆர்வம் சார்ந்து அஞ்சல் அட்டைகள் அனுப்புவாங்க. வெறும் அஞ்சல் அட்டை மட்டுமல்ல. அதுல தங்களைப் பத்தி, தங்கள் நாட்டைப் பத்தினு எழுதி அனுப்புவாங்க. எப்படி உங்களுக்கு ஒரு நண்பர் அஞ்சல் அட்டையில் நலம் விசாரிச்சு அனுப்புவாரோ அதுமாதிரி அனுப்புவாங்க.

இப்படி வரும் அஞ்சல் அட்டைகளை சேகரிப்பாங்க. இப்ப இந்த இணைய தளம் தபால் தலை சேகரிப்பாளர்களுக்கு ரொம்ப பயனுள்ளதா மாறிடுச்சு. ஏன்னா, அந்த அஞ்சல் அட்டைகள் தபால்தலைகளுடன் வரும்போது அதை சேகரிக்கிறாங்க.  நான் தொடர்பியல் துறை ேபராசிரியர் என்கிறதால அது சார்ந்த ஆர்வத்தைப் பதிவு செய்திருந்தேன். டிவி, பத்திரிகை, ஹாம் ரேடியோனு போட்டேன். என்னுடைய துறை சார்ந்த ஸ்பெஷலைசேஷன் ரேடியோ. அதனால, அது தொடர்பான பல அஞ்சல் அட்டைகள் வந்தது. குறிப்பா ரஷ்யாவில் இருந்து ஆறு அஞ்சல் அட்டைகள்.

அவை ரஷ்யாவில் இருக்கிற ரேடியோ மியூசியம் பத்தினது. அந்த ரேடியோ மியூசியத்துல போட்ட அஞ்சல் அட்டைகளும், அது தொடர்பான தபால்தலைகளையும் ஒட்டி அனுப்பியிருந்தாங்க. அதேபோல பிபிசி லண்டன்ல இருந்து பிபிசிக்கான ஒரு தபால்தலை போட்டிருந்தாங்க. அதை ஒருவர் அஞ்சல் அட்டையில் ஒட்டி அனுப்பியிருந்தார். அந்தத் தபால்தலை 1972ல் வெளியான ஒண்ணு.

இந்த இணையதளத்தைப் போலவே இண்ட்போஸ்டேஜ், போஸ்ட்கார்ட் யுனெட்டெட் போன்ற இணையதளங்களும் அஞ்சல் அட்டை எழுத விரும்புபவர்களுக்கு முகவரிகளை வழங்குது...’’ என்கிறவர் போஸ்ட்கிராஸிங்குக்குள் வந்த கதை பற்றி தொடர்ந்தார்.‘‘நான் முதல்ல ேரடியோ கேட்டுட்டு இருந்தப்ப வெளிநாட்டு வானொலிகள் வாசகர்களுக்கு எல்லாம் QSL வண்ண அட்டை கொடுப்பாங்க. அதாவது, இந்த டைம்ல இந்த அலைவரிசையில் இந்த வானொலி நிகழ்ச்சியைக் கேட்டார்னு கொடுக்குற அட்டை அது. இதை அந்தந்த வானொலி நிலையங்கள் அஞ்சல் அட்டையில் அனுப்புவாங்க. இப்படியா நான் நிறைய க்யூஎஸ்எல் வண்ண அட்டைகள் சேகரிச்சேன்.

ஷார்ட்வேவ்னு சொல்லப்படுற சிற்றலை நிறுத்தப்பட்டதால நிறைய வானொலிகள் இந்த அட்டைகள் அனுப்புறதை நிறுத்தினாங்க. அப்ப நான் அஞ்சல் அட்டைகள் பத்தி இன்டர்நெட்ல தேடும்போது இந்த போஸ்ட்கிராஸிங் இணையதளம் பத்தி தெரிஞ்சுகிட்டேன்.

இதுல உலகம் முழுவதும் எட்டு லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்காங்க. தமிழகத்துல ரொம்பக் குறைவு. இப்ப என்னுடைய மாணவர்கள் நிறைய பேர் இதுக்குள்ள வந்திருக்காங்க.அவங்க எல்லோருக்கும் உற்சாகமாக அஞ்சல் அட்டை அனுப்புறாங்க. ஏன்னா, சோஷியல் மீடியாவிலேயே இருந்திட்டு இதுல வரும்போது எழுதும் திறன் வளருது. அப்புறம், மாணவர்களால் எங்கோ உள்ள வெளிநாட்டுக்காரர்களிடம் பேச முடியுது.

ஒரு மாணவனுக்கு ஆங்கிலம் தெரியாது. அவன் இதன் வழியா ஆங்கிலம் கத்துக்கிட்டேன்னு சொல்லும்போது சந்தோஷமா இருக்கு. நான் இதுல ரெண்டு ஆண்டுகளா இருக்கேன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகள் சேகரிச்சிருக்கேன். அதே அளவு நானும் அனுப்பியிருக்கேன்...’’ என்கிற ஜெய்சக்திவேல் போஸ்ட்கிராஸிங் இணையதளத்தின் செயல்பாட்டை விவரித்தார்.

‘‘இந்த இணைய தளத்தின் ஃபார்முலாவே எனக்கு ஒருவர் அனுப்பும்போது நான் இன்னொருவருக்கு ஒண்ணு அனுப்பணும் என்பதுதான். அதன்மூலம் வெவ்வேறு நபர்கள்கிட்ட தொடர்பு கிடைக்கும். நீங்க இந்தத் தளத்துல ரிஜிஸ்ட்டர் பண்ணின உடனே உங்களுக்கு ஐந்து முகவரிகள் தருவாங்க. அந்த முகவரிகளுக்கு நீங்க அஞ்சல் அட்டைகள் அனுப்பணும். அதுக்கு முன்னாடி அவங்க புரொஃபைலை நீங்க பார்த்திடணும்.

அவங்க ஒரு முகவரி கொடுக்கும் போதே ஒவ்வொரு அஞ்சல் அட்டைக்கும் ஓர் எண்ணும் கொடுப்பாங்க. அந்த முகவரியும், அஞ்சல் அட்டை எண்ணும் எழுதிதான் அனுப்பணும். அங்க வாங்குறவர் உங்க அஞ்சல் அட்டை எண்ைண இணையதளத்துல  பதிவிடுவார்.
இந்த மாதிரி அஞ்சல் அட்டை இந்த எண்ல இருந்து, வந்திருக்குனு சொல்வார். ஏன்னா, அவர் அப்படி பதிவு செய்தால்தான் அவருக்கு அடுத்ததா ஐந்து முகவரிகள் கொடுப்பாங்க. இப்படி இது ஒரு செயின் மாதிரி போகும்.  

இதில் ரொம்ப ஆச்சரியமானது, யார்னே தெரியாத ஒரு நாட்டைச் சேர்ந்தவர் நம்ம ஆர்வத்தைத் ெதரிஞ்சுகிட்டு அஞ்சல் அட்டை அனுப்புறது தான். இன்னைக்கு ஓர் அஞ்சல் அட்டை ஜெர்மனியில் இருந்து எனக்கு வந்தது. இதுல இந்தத் தலைமுறையில் மாறிய தொழில்நுட்பம் சம்பந்தமான ஒரு தபால்தலையை ஒட்டி அனுப்பியிருந்தார். அதுல ஜெர்மனி பத்தி எழுதியிருந்தார்.

நாம் கிழக்கு ஜெர்மனியும், மேற்கு ெஜர்மனியும் இணைஞ்சு சமுகமாக இருக்கும்னு நினைக்கிறோம். ஆனா, இப்பவும் அங்க பிரச்னைகள் தொடர்ந்திட்டு இருக்கிறதா அந்த நண்பர் குறிப்பிட்டு இருந்தார். இந்த மாதிரியான விஷயங்கள் இதிலிருந்து நமக்கு தெரிய வருது.

அடுத்து, இந்த போஸ்ட்கிராஸிங்ல ஃபோரம்னு ஒரு பகுதி இருக்கு. அதுல புத்தகம் மாற்றுகிறவங்க, டீ பரிமாறிக்கிறவங்கனு இருப்பாங்க. இப்ப இத்தாலி டீ, அமெரிக்கன் டீ, கொழும்பு டீ, காபினு அதை மட்டும் சாஷே பாக்கெட்டுல அட்டையுடன் சேர்த்து அனுப்புவாங்க. புத்தகம் தேவைனு சொன்னா வாங்கி அனுப்புவாங்க. எனக்கு ரொம்ப நாளா தேடிய புத்தகம் ஒண்ணை அஞ்சல் அட்டையுடன் சேர்த்து அனுப்பினாங்க. மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகம். ஆனா, இதற்கு பணம் வாங்கல. நட்பின் அடிப்படையில் செய்தாங்க.

அப்புறம், இதுல டிராவல் டைரினு இன்னொரு பகுதி இருக்கு. அதாவது, ஒரு டைரி எல்லா நாடுகளுக்கும் பயணிக்கும். யார் யார் கைக்கு அந்த டைரி போகுதோ அவங்க ரெண்டு பக்கம் எழுதி அனுப்ப வேண்டியதுதான்...’’ என்கிறவர், விதவிதமான அஞ்சல் அட்டைகள் பற்றி குறிப்பிட்டார்.

‘‘இதுல பல வகையான அஞ்சல் அட்டைகள் இருக்கு. ஃபளேக் ஆஃப் தி வேர்ல்டுனு (FOTW) ஒரு அட்டை. அதாவது, 250 நாடுகளின் கொடிகளுக்குமான அட்டை. அந்த அட்டையில் அந்நாட்டின் கொடி மட்டுமே போட்டிருக்காது. அந்தக் கொடியுடன் அந்த நாட்டின் வரலாறு, பண்பாடுனு பல தகவல்களும் இருக்கும். சில சேகரிப்பாளர்கள் இப்படியான அட்டைகளை மட்டுமே சேகரிச்சு, ‘எங்ககிட்ட எல்லா நாட்டின் கொடி அட்டைகளும் இருக்கு’னு பெருமையா சொல்வாங்க.

அப்புறம், மேப் ஆஃப் தி வேர்ல்டு (MOTW), வேர்ல்டு டிராவல், சைனீஸ் கேரக்டர், மேப் கவர் ஆன் போஸ்ட் கார்டு, நேஷனல் அனிமல், வேர்ல்டு போஸ்ட் கார்டு டேனு இருபது தலைப்புகள்ல அஞ்சல் அட்டைகள் இருக்கு. இப்ப கொரோனா தீம் வச்சும் அட்டைகளை நிறைய பேர் டிசைன் பண்றாங்க. இந்திய தபால் துறையே கொரோனாவை ஒட்டி நாலு தபால்தலைகள் வெளியிட்டு இருக்காங்க. அதனால, இப்ப கொரோனா தபால்தலைகள் அல்லது கொரோனா அஞ்சல் அட்டைகள் மட்டும் சேகரிக்கிறவங்க வந்திட்டாங்க.

இந்த அட்டைகளை யார் வேணாலும் டிசைன் பண்ணலாம். ஆனா, அதுல புகைப்படமோ, லோகோவோ பயன்படுத்தினா அது சம்பந்தமான நபர்கள்கிட்ட உரிய அனுமதிபெறணும். இப்படி அட்டைகள் சந்தைக்கு வந்ததும் உலகம் முழுவதும் வாங்குவாங்க. அதனால, இது ஒரு தொழில் வாய்ப்பாகவும் இருக்குது.

இந்தியாவில் தமிழகத்தைச் சேர்ந்த பி.வெங்கடேஸ்வரன் என்பவர் போஸ்ட்கார்ட்ஸ் வில்லே என்னும் இணையதளத்தைத் தொடங்கி நூற்றுக்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டைகளை டிசைன் செய்து உலகம் முழுவதும் விற்றுவருகிறார்.என்னைப் பொறுத்தவரை நானே இந்த அஞ்சல் அட்டைகளை டிசைன் பண்ணிக்கிடுறேன். தவிர நிறைய கடைகளும், தபால் அலுவலகமும் அட்டைகளை பிரிண்ட் பண்ணி விற்கிறாங்க. இதை வாங்கி நாம் பயன்படுத்தலாம்.

அப்புறம் அஞ்சல் அட்டைகளை அனுப்புற செலவும் சர்வதேச அளவுல ஒப்பிடும்போது நமக்கு குறைவுதான். ஓர் அட்டைக்கு 12 ரூபாய் தபால்தலை ஒட்டினா போதும். இதே டென்மார்க்ல இருந்து ஒருத்தர் நமக்கு அனுப்பணும்னா 600 ரூபாய் செலவாகும். நம்ம தபால் அலுவலகத்தின் செயல்பாடு அப்படியானது...’’ என்கிற ஜெய்சக்திவேல், போஸ்ட்கிராஸிங் இணையதளத்தைப் பயன்படுத்தும் போஸ்ட்கிராஸர்களின் சந்திப்பு பற்றி பேசினார்.  
‘‘சென்னையில் இந்த இணையதளத்தைப் பயன்படுத்துற அறுபது போஸ்ட்கிராஸர்ஸ் இருக்காங்க.

முன்னாடி அவங்க சந்திப்பு நடத்தியிருக்காங்க. எனக்கு அப்ப இதைப்பத்தி தெரியாது. இப்ப நான் எங்க மாணவர்களை வச்சு மூணு சந்திப்பை சென்னைப் பல்கலைக்கழகத்துல நடத்தினேன். அப்ப அஞ்சல் அட்டைகள் டிசைன் செய்து வெளியிட்ேடாம். சீக்கிரமே தமிழ்நாட்டுல அஞ்சல் அட்டைகள் எழுதுற பழக்கம் மென்மேலும் வளரணும். இதுக்காகவே அஞ்சல் அட்டைகள் பத்தி தமிழ்ல ஒரு புத்தகம் ரெடி பண்ணிட்டு இருக்கேன். எத்தனை வகையான அஞ்சல் அட்டைகள் இருக்குது? மாணவர்களுக்கும், சேகரிப்பாளர்களுக்கும் அது எப்படி பயன்படுதுனு எல்லாமே அதுல வரும்...’’ என்கிறார் ஜெய்சக்திவேல்.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்