நான் பணம் கேட்கலைங்க... வேலை கேட்கறேன்...வேண்டுகோள் வைக்கிறார் நடிகர் பெஞ்சமின்



மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் போட்ட வீடியோ பதிவு வைரலாகி சமீபத்தில் பதற வைத்தது. ‘எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. மேல் சிகிச்சைக்கு பெங்களூருக்கு ஒரு பைசா கையில் இல்லாமல் புறப்படுகிறேன்.
நீங்கள் எல்லோரும் உதவி செய்து என்னைக் காப்பாற்ற வேண்டும்’ என வேதனைக் குரலும், கலங்கிய கண்களுமாகப் பகிர்ந்திருந்தார். அவரது பிரார்த்தனைக்கும், வேண்டுகோளுக்கும் தமிழ் மக்கள் ஆதரவு தந்துவிட, இதய அடைப்புகளை நீக்கி வெளியே வந்து விட்ட பெஞ்சமினால் நம்மிடம் பேச முடிந்தது.

அவரது கதை... வாழ்க்கை... அவர் மொழியிலேயேசிவில் எஞ்சினியரிங் முடித்து விட்டு சினிமா மீது ஆர்வமாகி இங்கே வந்தேன். முன்பு நடிகர் சங்கத்தில் நாடகவிழா அடிக்கடி நடக்கும். ஒவ்வொரு நாள் விழாவிற்கு ஒவ்வொரு டைரக்டர் சிறப்பு விருந்தினராக இருப்பார்கள்.

அப்படி நான் ஒரு நாடகத்தில் நடித்தபோது பாலச்சந்தர் சார் பார்த்தார். ‘பார்த்தாலே பரவசம்’ படத்தில் லாரன்ஸ் மாஸ்டரின் தம்பியாக நடித்தேன். பிறகு அவரது டிவி கம்பெனியிலேயே பத்து வருஷம் இருந்து விட்டேன். அவர்கள் எடுத்த அத்தனை சீரியல்களிலும் என்னைப் போட்டார்கள். ‘ரகுவம்சம்’, ‘காதல் பகடை’, ‘மர்மதேசம்’, ‘விடாது கருப்பு’, ‘ஜன்னல்’, ‘காசளவு நேசம்’, ‘மரபுக் கவிதைகள்’ என நான் நடித்த தொடர்கள் நிறைய.
எனக்கு அவரை விட்டு வெளியே வரத் தோன்றவில்லை. அந்த அளவுக்கு அய்யாவின் ஆதரவு எனக்கிருந்தது.

பிறகு சேரன் சார் நாடகம் பார்த்துவிட்டு, என்னை ‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தில் நடிக்கக் கூப்பிட்டார். வடிவேலுவின் மச்சான் ஆக நடித்ததற்கு பெரிய ஆதரவு கிடைத்தது. அதற்குப்பிறகு பிரான்ஸ், லண்டன், மலேசியா, சிங்கப்பூர், மலேசியா, தோஹா, அபுதாபி என்று கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் பறந்தோம். பிறகு ‘பகவதி’, ‘திருப்பதி’, ‘சாமி’, ‘அருள்’, ‘ஆட்டோகிராப்’, ‘திருப்பாச்சி’ என வரிசையாக படங்கள் அமைந்தது. எல்லாமே கொஞ்சம் நன்றாக போய்க் கொண்டிருக்க இந்த கொரோனா வந்து கெடுத்துவிட்டது.

அதற்குப் பிறகு தினப்படி வாழ்க்கையே சிரமமாகிவிட்டது. கிறிஸ்துமஸ் வேறு அருகில் இருந்தது. அதனால் ஏற்பட்ட நெருக்கடி, மன அழுத்தம் காரணமாக எனக்கு மாரடைப்பு வந்து விட்டது. எத்தனை நாள்தான் கடன் வாங்கி சமாளிப்பது! வாங்கினாலும் திருப்பி அளிக்க வழியென்ன என்று யோசித்து யோசித்து ஹார்ட் அட்டாக்கே வந்து விட்டது.

சேலம் மருத்துவமனையில் மனைவி என்னை சேர்த்துவிட, அதற்கு ஆக வேண்டிய செலவு பூதாகரமாக முன்னே நின்றது.
கையில் ஒரு பைசா இல்லாமல்தான் அப்படி ஒரு வீடியோ போட்டேன். பல இடங்களில் இருந்து போன்கள் குவிந்தன. அண்ணன் சமுத்திரக்கனி போன் செய்தார். உடனே 50,000 முதலுதவிக்கு அனுப்பி வைத்தார்.

அவர் போனை வைத்த மறு விநாடி ஐசரி கணேஷ் அண்ணன் போன் செய்து ‘என்ன வேண்டும்’ என்றார். அடிப்படை செலவுக்கு ஒரு லட்சமாவது வேண்டும் என்றேன். உடனே போட்டு விட்டார். இரண்டு அடைப்பை நீக்கி, இரண்டு ஸ்டென்ட் வைத்து என்னைக் காப்பாற்றி விட்டார்கள்.
‘அஜித், விஜய் படங்களில் நடத்திருக்கிறீர்கள். பணம் இல்லையென்றால் எப்படி’ என சில பேர் கேட்கிறார்கள்.

ஐயா, நாங்கள் சப்போர்ட் டிங் ஆக்டர்ஸ் மட்டும்தான். எங்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம். இப்பொழுதெல்லாம் காசு கொடுத்து நடிக்க நிறையப்பேர் ரெடியாக இருக்கிறார்கள். ‘திருப்பதி’ படத்தில் நடிக்கும் போதுதான் ஒண்ணரை லட்சத்தை கண்களால் பார்த்தேன். முன்னாடி கலை நிகழ்ச்சி நடக்கும். கொஞ்சம் செலவை மேக்கப் செய்து பிழைத்துக் கொள்ளலாம். இப்போது அதற்கும் இந்த கொள்ளை நோயால் பிரச்னை வந்து மூடுவிழா ஆகிவிட்டது. இப்போது யாரும் விழாக்களுக்கு அழைப்பதில்லை.

நடிகன் என்றால் பொம்பிளை சகவாசம், தண்ணி அடிப்பான் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஒரு காலத்தில் நடிகர்கள் அப்படி இருந்திருக்கலாம். இப்போது தினசரி வாழ்க்கைக்கே ஓடும்படி இருக்கும்போது இதற்கெல்லாம் வழியேயில்லை. அதுவும் நானெல்லாம் டீ, காபி கூட குடிப்பதில்லை. அப்படியும் ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. இது அதிசயம் இல்லாமல் வேறு என்ன!

நேற்று ஆர்.ரத்தினசாமி என்ற ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் எப்படியோ என் எண் கிடைத்துப் பேசி ஆறுதல் கூறினார். அதோடு விட்டு விடாமல் 25,000 அனுப்பி வைத்தார். இத்தனைக்கும் அவர் முகமே எனக்குத் தெரியாது. கருணையின் உச்சத்தைப் பாருங்கள்.

நாங்கள் காசு பணம் எதிர்பார்க்கவில்லை. மாதத்திற்கு ஐந்து நாட்களாவது வேலைதான் கேட்கிறோம். வருஷத்திற்கு 20 நாள் ஷூட்டிங் இருப்பது கூட அபூர்வமாக இருக்கிறது. 25 வருஷங்களை இங்கேயே இருந்து தொலைத்து விட்டேன். இனிமேல் எங்கேயும் வேலைக்குப் போக முடியாது. போனாலும் ‘அஜித், விஜய் படங்களில் நடிச்சிட்டு வேலைக்கு வர்றீங்களே’ எனக் கேட்கிறார்கள்.

கடைசி வரைக்கும் இங்கேயே நடித்து விட்டு போய் விடத்தான் எங்களுக்கு நெற்றியில் எழுதியிருக்கிறது. இந்த சினிமா உலகம் எங்களை மாதிரி அனுபவமான நடிகர்களுக்கு கொஞ்சமாவது எதிர்காலத்தை உருவாக்கித் தரவேண்டும். நாங்களும் பிழைத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

நா.கதிர்வேலன்