தில்லியை ஏன் விவசாயிகள் முற்றுகையிடுகிறார்கள்..?



தில்லியை மீண்டும் முற்றுகையிட்டிருக்கிறார்கள் விவசாயிகள். அதுவும் 96,000 டிராக்டர்கள், 1.2 கோடி விவசாயிகள் என. வட இந்தியா முழுதும் பற்றி அனலடிக்கிறது விவசாயிகள் பிரச்னை. சமீப காலங்களில், குறிப்பாக மோடி தலைமையிலான பிஜேபி அரசு அமர்ந்தது முதலே விவசாயிகள் ‘தில்லி சலோ’ (தில்லிக்குப் படையெடுப்போம்) என தொடர்ச்சியாக அணிவகுத்துச் செல்வதும் போராட்டம் நடத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.

ஆனால், மத்திய அரசோ பல வருடங்களாக விவசாயிகள் கோரிக்கை என்ன என்பதைக் காது கொடுத்தும் கேளாமல், அவர்களை கலவரக்காரர்களையும் தீவிரவாதிகளையும் நடத்துவது போல தடியடி நடத்தியும் தண்ணீரை பீரங்கியால் பீய்ச்சியடித்தும் கண்ணீர்ப் புகை வீசியும் விரட்டவே நினைக்கிறது. தங்களை அடித்து விரட்டும் இந்திய அரசின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் விவசாயிகள் உணவிடும் காட்சி வலைத்தளங்களில் வைரலாகிறது.

இதுதான் அவர்கள் தாயுள்ளம். பரம்பரை பகையான பங்காளி வீட்டு வெள்ளாமையாக இருந்தாலும் நீரில்லாமல் வாடுவதைக் காணமாட்டாமல், நடக்கும்போது தன் வாய்க்காலை காலால் எத்தி, உடைத்து வாடிய பயிருக்கும் நீர் பொசியச் செய்பவன் விவசாயி. அவர்களின் குரலைத்தான் கேட்க மறுக்கிறது மத்திய அரசு. இந்த முறை களத்தில் இறங்கியிருப்பவர்கள் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயி கள். இதற்கு, இந்தியா முழுதும் உள்ள பிற விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும், அரசியல் நோக்கர்களுமே ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களை எதிர்த்துதான் இந்த தில்லி சலோ போராட்டம். முதலில் இவை அந்தந்த மாநில அளவிலான போராட்டங்களாகவே இருந்தன. ஆனால், மாநில அரசுகள் இந்த புதிய விவசாயக் கொள்கைகள் தொடர்பாக எந்த முடிவும் எடுக்காததால் விவசாயிகள் தில்லி நோக்கிக் குவியத் தொடங்கிவிட்டார்கள்.  

‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’ என்ற பெயரில் இந்தியா முழுதும் உள்ள பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்துள்ளன. அரியானாவில் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் குர்ணாம் சிங் சுடானி இதன் முக்கியமான தலைவர்களில் ஒருவர். மேலும், வி.எம்.சிங் தலைமையில் ‘கிசான் மஸ்தூர் சங்கம்’, அவிக் சாகா தலைமையில் ‘ஜெய்கிஷான் அந்தோலா’, மருத்துவர் ஆசிஷ் மிட்டல் தலைமையில் ‘அனைத்திந்திய கிசான் மஸ்தூர் சபா’, டாக்டர் அகர்வால் தலைமையிலான விவசாயிகள் சங்கம் உட்பட சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த
விவசாய சங்கங்கள், தனிப்பட்ட தன்னார்வலர்கள், விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளார்கள்.

இதனால் இது ஒரு நாடு தழுவிய போராட்டமாக வடிவெடுத்துக் கொண்டிருக்கிறது.தில்லியை இணைக்கும் ஐந்து நெடுஞ்சாலைகள் வழியாகப் பயணித்து தில்லியைச் சென்றடைவது என்பதைத் திட்டமாகக் கொண்டு நகரத் தொடங்கிய விவசாயிகளை வழியிலேயே பாதுகாப்புப் படையினரும் போலீசாரும் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

இதனால், பல இடங்களில் தடையை மீறி விவசாயிகள் நகர்ந்தார்கள். அரியானாவில் ஷாபாத் என்னும் இடத்திற்கு அருகில் விவசாயிகள் போலீசாரின் தடுப்புகளைத் தகர்த்து முன்னே செல்ல முயன்றனர். இதனால், போராட்டக்காரர்களைத் தடுக்க போலீஸார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர்.
இந்தப் போராட்டத்தால் பஞ்சாப் மற்றும் அரியானாவை இணைக்கும் சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

அரியானா மாநிலம் அம்பாலாவில் ஷாம்பு என்ற எல்லைப் பகுதியில் விவசாயிகள் போலீஸாரின் தடுப்புகளைத் தகர்ப்பது போன்ற காணொலி ஒன்று சமீபத்தில் வைரலானது. இங்குதான் கண்ணீர்ப்புகை  குண்டு வீசப்பட்டிருக்கிறது.விவசாயிகள் இப்படி கடுமையாகக் கொந்தளிக்க காரணமாய் இருப்பவை, மத்தியில் ஆளும் பிஜேபி அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய விவசாயச் சட்டங்கள்தான்.

விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் இந்த சட்டங்கள் என்னென்ன..?

1. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 (Essential Commodities (Amendment) Act 2020).

2 விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 (Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020).

3. விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 (The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020).

இந்த சட்டங்களில் என்ன பிரச்னை?

உதாரணமாக, முதல் சட்டமான அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தைப் பார்த்தோமானால், இந்தச் சட்டம் வரும் முன்பு இந்தியாவில் வெங்காயம், பருப்பு போன்ற பொருட்களின் விலை உயரும்போது அவற்றை ஏற்றுமதி செய்யவும் சேமித்து வைக்கவும் அரசு அவ்வப்போது கட்டுப்பாடுகளை விதிக்கும் என்பது நடைமுறையாக இருந்தது.

ஆனால், இப்போது வந்துள்ள சட்டத் திருத்தத்தின்படி இம்மாதிரி கட்டுப்பாடுகளை பின்வரும் சூழலில்தான் விதிக்கமுடியும்:
தோட்டப் பயிர்கள் என்றால் அவற்றின் விலை கடந்த பனிரெண்டு மாதங்களின் சராசரி விலையைவிட நூறு சதவீதம் அதிகரிக்க வேண்டும்.
தானியங்கள் என்றால் கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி விலையைவிட ஐம்பது சதவீதம் அதிகரிக்க வேண்டும். அப்படியே இருந்தாலும்கூட இந்தக் கட்டுப்பாடு உணவுப்பொருட்களைப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்குப் பொருந்தாது.

இது விவசாயிகளுக்கு அல்ல... வணிகர்களின் நலனுக்கே வாய்ப்பளிக்கிறது. விளைபொருட்களை உற்பத்தி செய்யவும் சேமித்து வைக்கவும் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவும் விற்பனை செய்யவும் விவசாயிகளுக்கு முழுச் சுதந்திரம் இந்த சட்டத் திருத்தத்தின்மூலம் அளிக்கப்படும் என்கிறது மத்திய அரசு. இதனால், இந்தத் துறையின் பொருளாதாரம் மேம்பட்டு, நேரடி அந்நிய முதலீடு விவசாயத் துறையில் கிடைக்குமென மத்திய அரசு நம்புகிறது.

உணவு விநியோகச் சங்கிலியில் தேவைப்படும் குளிர்பதன கிடங்குகள் போன்றவற்றைக் கட்டத் தேவைப்படும் முதலீட்டை இந்தச் சட்டம் எளிதாக்கும் என்பதும் அரசின் வாதம். ஆனால், அனைத்தையும் கார்ப்பரேட்டுகள் கைகளில் கொண்டு போய் கொடுத்து, விவசாயத்தையே கார்ப்பரேட்மயம் ஆக்குவதோடு விவசாயிகளை வெறும் கூலி அடிமைகளாக மாற்றும் திட்டம் இது என்பது விவசாயிகள் தரப்பு வாதம்.இரண்டாவதாக உள்ள விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டத்திலும் பிரச்னைகள் உள்ளன.

விவசாய விளைபொருட்களை மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எந்த இடத்திலும் வியாபாரம் செய்ய வழிவகுக்கிறது. இதன்மூலம், மாநில அரசுகளால் இயக்கப்படும் விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வெளியிலும் பொருட்களை விற்க வழி செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்குக் கூடுதல் விலை கிடைக்குமென அரசு கூறுகிறது.

ஆனால், விவசாய வர்த்தகத்தின் மீது மாநில அரசு கொண்டிருக்கும் கட்டுப்பாடு இந்தச் சட்டத்தின் மூலம் இல்லாமல் போகிறது. வேறு மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள், மற்றொரு மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் வந்து பொருட்களை வாங்கிச் செல்லலாம் என்ப தால், ஒரு மாநிலத்தில் ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மாநில அரசால் ஏதும் செய்ய முடியாது என்ற அச்சமும் இருக்கிறது.

மூன்றாவது சட்டம், விலை உத்தரவாதம், விவசாய சேவைகள் ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020. விவசாயிகளுடன் எந்த மூன்றாவது நபரும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயம் என்பது விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்றுதான். ஆனால், அதனை கார்ப்பரேட் போன்ற பெரு நிறுவனங்களின் ஒப்பந்தங்களில் மட்டுமே கொண்டு வருவது ஒருவகையில் தங்கள் குடுமியை அவர்கள் கையில் சிக்க வைக்கும் ஏற்பாடு என்று நோக்குகிறார்கள் விவசாயிகள்.

கிராமங்கள் இந்தியாவின் முதுகெலும்பு என்றால் விவசாயம்தான் கிராமங்களின் முதுகெலும்பு. அந்த முதுகெலும்பில் சூப் வைத்துக் குடிக்க ஆசைப்
படுகிறது நம் மத்திய அரசு. விவசாயிகளோடு உணர்வுபூர்வமாக மக்கள் நிற்க வேண்டிய தருணம் இது. விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு காது கொடுத்து கேட்க வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைவரது எதிர்பார்ப்பும்.                    

இளங்கோ கிருஷ்ணன்