பெண்களிலா



கடந்த வருடம் வெளியாகி, சர்வதேச அளவில் பாராட்டுகளைக் குவித்த மலையாளப் படம் ‘பெண்களிலா’. அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது.

வறுமையில் வாடும் முதியவருக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிக்கும் இடையிலான கள்ளங்கபடமற்ற உறவுதான் படத்தின் ஒன்லைன். தலித் சமூகத்தைச் சேர்ந்த அழகனுக்கு வயது 60. ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள குடிசையில் மனைவியுடன் வசித்து வருகிறார். சாக்கடை அள்ளுவது, புதர்களை சுத்தம் செய்வது அவரது தொழில்.

அழகனின் குடிசைக்கு அருகிலிருக்கும் வீட்டுக்கு வினோத் என்பவர் புதிதாக குடிவருகிறார். கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனத்தில் உயர்பதவியில் இருக்கும் வினோத்துக்கு எட்டு வயதில் ராதா என்ற மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். அவரது மனைவி ரேகா ஹவுஸ் ஒஃய்ப். வீட்டைச் சுற்றியும் புதர் மண்டிக்கிடப்பதால் பாம்பு வந்துவிடுமோ என்ற பயத்தில் அதை சுத்தம் செய்ய ஆளைத் தேடுகிறாள் ரேகா.

புதர்களைச் சுத்தம் செய்ய அழகன் வரும்போது அவருக்கும் ராதாவுக்கும் இடையில் நட்பு மலர்கிறது. அந்த ஊரிலேயே ராதாவுக்கு முதல் நண்பர் அழகன்தான். தனது தோளில் ராதாவைத் தூக்கிக்கொண்டு ஊரெல்லாம் சுற்றிக்காட்டுகிறார் அழகன். சின்ன வயதிலேயே சாதி வெறிக்குப் பலியானவள் அழகனின் தங்கை. எப்போதுமே தன்னுடன் இருந்த தங்கையை அழகனுக்கு நினைவூட்டுகிறாள் ராதா. பல வருடங்களுக்கு முன்பு இறந்துபோன தங்கையே தனக்குத் திரும்பக் கிடைத்துவிட்டாள் என்று மகிழ்ச்சியடைகிறார்.

அழகான ராதாவுக்கும் அழகனுக்கும் இடையிலான உறவை ரேகா புரிந்துகொள்கிறாள். ஆனால், வினோத் அதற்கு தடை விதிக்கிறான். அழகன் குடிகாரன், வயதானவன் என்று சாடுகிறான். இருந்தாலும் இருவரும் சந்தித்து தங்களின் உறவை வளர்த்துக்கொள்கிறார்கள்.  வினோத்தின் நிறுவனம் தலித் சமூகம் வாழும் இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டம் தீட்டுகிறது. குடிசைகளை காலி செய்து தலித் மக்களை வேறு இடத்துக்கு விரட்டி யடித்தால் மட்டுமே அங்கே அபார்ட்மெண்ட்டை எழுப்ப முடியும்.

குடிசைகளை காலி செய்யச் சொல்லி அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்கின்றனர். இந்நிலையில் அழகன் தன் மக்களின் பக்கம் நிற்க, ராதாவுக்கும் அவருக்குமான உறவு என்னவாகிறது என்பதே கிளைமேக்ஸ்.

ஓர் அழகான உறவின் பின்னணியில் சுதந்திரத்துக்குப் பிறகான கேரளாவில் தலித் சமூகம் நடத்தப்பட்ட விதத்தை மிக அழுத்தமாக சித்தரிக்கிறது இந்தப் படம். ஓர் இடத்தைவிட்டு இன்னொரு இடத்துக்கு தலித் மக்கள் விரட்டப்படுவதையும், தங்க இடமில்லாமலும் உண்ண உணவில்லாமலும் அவர்கள் தவிப்பதையும் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் கண்ணீரை வரவழைக்கிறது.

அழகனாக லாலுவும் ராதாவாக அக்‌ஷரா கிஷோரும் நடிப்பில் அப்ளாஸை அள்ளுகிறார்கள். ஆறு தேசிய விருதுகளை வென்ற பிரபல இயக்குநர் டி.வி.சந்திரனின் சமீபத்திய படைப்பு இது.